குடை முல்லை

From Tamil Wiki
Revision as of 04:22, 7 July 2025 by Jayashree (talk | contribs)

குடை முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது.

மன்னனின் வெண்கொற்றக் குடையின் சிறப்பைக் கூறுவது குடை முல்லை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போரினைத் தடுத்த மிகுந்த வலிமையினைக் கொண்ட தோள்களில் மாலையணிந்த அரசனின் கொற்றக் குடையின் சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

மொய் தாங்கிய முழுவலித்தோள்
கொய்தாரான் குடை புகழ்ந்தன்று(கொளு 8.28)

வெண்பா

வேயுள் விசும்பு விளங்கு கதிர் வட்டம்
தாய புகழான் தனிக்குடைக்குத் - தோயம்
எதிர்வழங்கு கொண்மூஇடை போழ்ந்த சுற்றுக்
கதிர் வழங்கு மாமலைக் காம்பு (182)

பொருள்: இவ்வெண் கொற்றக் குடைக்கு வானமே மேலாடை. கதிரவனே மேலே உள்ள வட்டம்; நீர்த்தாரை சொரியும் மேகமே சுற்று மாலை; திங்களும் ஞாயிறும் திரியும் மேரு மலையே அதன் காம்பு.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்