முத்துப்பழனி

From Tamil Wiki

முத்துப்பழனி (முத்துப்பழநி) (1739 -1790) தஞ்சை முத்துப்பழனி. ராதிகா சாந்த்வனமு என்னும் அகத்துறைக் குறுங்காவியத்தை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

முத்துப்பழனி தஞ்சையில் தஞ்சையை 1730 முதல் 1763 வரை ஆட்சி செய்த மராத்திய மன்னர் பிரதாபசிம்மர் என்பவரின் ஆதரவில்இருந்தார். தஞ்சையைச் சேர்ந்த தேவதாசியும் நடனகலைஞருமான தஞ்சைநாயகி என்பவர் தன் உறவினரான அய்யாவையாவுக்கும் அவர் மனைவி செங்காவி என்பவருக்கும் மகனாகப்பிறந்த முத்தியாலு என்னும் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்.

முத்தியாலு தேவதாசியும் நடனக்கலைஞருமான ராமாமணி என்பவரை மணந்தார். ராமாம்பாள்புரம் என்னும் அக்ரஹாரத்தையும் பெரிய சிவன்கோயிலையும் கட்டி அங்கே பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தவர் ராமாமணி என்று முத்துப்பழனி தன் நூலில் குறிப்பிடுகிறார். ராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு தினமும் அன்னம் அளிக்கும் சத்திரம் ஒன்றை கந்தர்வக்கோட்டை என்னும் இடத்தில் நிறுவினார்

முத்தியாலு- ராமாமணி இணையருக்கு 1739 ல் முத்துப்பழனி பிறந்தார்.

தன் குலத்திற்குரிய நடனக்கலையுடன் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகியவற்றை இல்லத்தில் இருந்தே முத்துப்பழனி கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீமத் திருமலை தாதாச்சாரியாரின் அருள் பெற்றவர் என்று ஆசிரியையை அந்நூல் குறிப்பிடப்படுகிறது.

தனிவாழ்க்கை

முத்துப்பழனி மராத்திய மன்னர் பிரதாப சிம்மரின் ஆசைநாயகியாக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

முத்துப்பழனி எழுதிய நூல் ராதிகா சாந்த்வனமு. இது தெலுங்கு மொழியில் அமைந்த அகச்சுவைக் குறுங்காவியம்.

இலக்கிய இடம்

முத்துப்பழனி தெலுங்கில் எழுதிய தமிழகத்துக் கவிஞர். தமிழகக் கவிதைச் சூழலில் கூளப்ப நாயக்கன் காதல், விறலி விடு தூது போன்ற அகச்சுவைக் காவியங்கள் உருவான காலகட்டத்தில் உருவானது அவரது காவியம். அகச்சுவைக் காவியங்கள் பெரும்பாலும் பெண்ணை நுகர்பொருளாகவே பார்க்கும் கோணம் கொண்டவை. முத்துப்பழனியின் நூல் பெண்ணின் கோணத்தில் எழுதப்பட்டது. பெண்ணின் காமத்தை எழுதிய ஒரு சில நூல்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை