under review

பிங்கல நிகண்டு

From Tamil Wiki
Revision as of 23:00, 26 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed incorrect categorization term)
பிங்கல நிகண்டு- சிவன் பிள்ளை - முதல் பதிப்பு - 1890

பிங்கலர் என்பவரால் இயற்றப் பெற்ற நூல் பிங்கலம். பிங்கலம் என்றால் பொன்னிறம் என்று பொருள். இதற்குப் ‘பிங்கலந்தை’ என்ற பெயரும் உண்டு.  இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இதில் 4121 நூற்பாக்கள் உள்ளன. பிற்கால வழக்கில் இந்நூல் ‘பிங்கல நிகண்டு’ என்று அழைக்கப்பட்டது. நிகண்டு நூல்களில் மிகச் சிறந்த நூலாகப் பிங்கல நிகண்டு கருதப்படுகிறது.

பிங்கல நிகண்டு பிற பதிப்புகள்

பதிப்பு, வெளியீடு

திவாகர நிகண்டிற்குப் பிந்தியது பிங்கலந்தை. ‘பிங்கல நிகண்டு’, ‘பிங்கலந்தை’ என்றும் இந்நூல் அழைக்கபடுகிறது. இந்நூலை, முதன் முதலில், 1890-ல் தி. சிவன்பிள்ளை பதிப்பித்துள்ளார். தொடர்ந்து  யாழ்ப்பாணம்‌ ஆறுமுக நாவலர்‌, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்,  சாந்தி சாதனா பதிப்பகத்தினர் உள்ளிட்ட பலர் இந்நூலைப்‌ பதிப்பித்துள்ளனர்‌.

ஆசிரியர் குறிப்பு

பிங்கல நிகண்டின் ஆசிரியர் பிங்கலர். இதன்‌ சிறப்புப்‌ பாயிரத்தில்‌ ‘திவாகரன்‌ பயந்த பிங்கல முனிவன் எனத் தன் பெயர் நிறீஇ‌' என்று கூறப்பட்டிருப்பதால், இவர்‌ ‘சேந்தன்‌ திவாகரம்’‌ இயற்றிய திவாகரரின்‌ மைந்தன் என்ற ஓர் கருத்து உள்ளது. அதற்கு மறுப்பும் உள்ளது. இவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர்.  சோழ நாட்டு ஊர்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவர் சைவ சமயம் சார்ந்தவராகக் கருதப்படுகிறார்.

பனிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலில், பிங்கலரைப் பற்றிய குறிப்பு உள்ளதால், பிங்கல நிகண்டு நன்னூல் தோன்றிய காலத்திற்கும் முந்தியதாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த நூல் என்ற கருத்தும் உள்ளது.

பிங்கல நிகண்டு : உட்பிரிவுகளின் பட்டியல்

உள்ளடக்கம்

‘பிங்கல நிகண்டு’ 4121 நூற்பாக்கள் கொண்டது. ’திவாகர நிகண்டு’‌ ஒவ்வொரு பாகுபாட்டையும்‌ 'தொகுதி' என்று கூறுவதைப் போல்  ‘பிங்கலம்’ அவற்றை‌ 'வகை' என்று கூறுகிறது. இந்நூலில்‌ வடமொழிச்‌ சொற்களும்‌, இசைச்‌ சொற்களும்‌ மிகுதியாக உள்ளன. இந்நூல் திவாகர நிகண்டைக் காட்டிலும் விரிவானது. எதுகை வரிசையில்‌ சொற்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தொல்காப்பியர் கூறும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற நால்வகைச் சொற்களையும் இந்நூல் ஆராய்ந்து விளக்கியுள்ளது.

பிங்கல நிகண்டு‌ பத்து வகைகளைக்‌ கொண்டுள்ளது. இதில் முதல் ஒன்பது பகுதிகளில் மட்டும் 14700 சொற்கள் உள்ளன. பத்தாம் பகுதியில் பலபொருள் குறிக்கும் ஒரு சொல் என்ற முறையில் அமைந்த 1091 சொற்கள் உள்ளன. இந்நூலுக்கு ‘உரிச்சொற்கிளவி' என்ற பெயரும் உண்டு. நன்னூல் ஆசிரியர் ‘பவணந்தி முனிவர்’ இந்த நூலை ‘உரிச்சொல்’ என்றே குறிப்பிட்டுள்ளார். 'பிங்கலம்‌ முதலா நல்லோர்‌ உரிச்சொல்லின்‌ நயந்தனர்‌ கொளலே' என்று பவணந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் பகுதிகள் கீழ்காணும் வகையில் அமைந்துள்ளன.

1) வான் வகை

(2) வானவர் வகை

(3) ஐயர் வகை

(4) அவனி வகை

(5) ஆடவர் வகை

(6) அனுபோக வகை

(7) பண்பில், செயலில் பகுதி வகை

(8) மாப்பெயர் வகை

(9) மரப்பெயர் வகை

(10) ஒரு பொருள் பல்பெயர் வகை

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.