under review

கச்சியப்பர்

From Tamil Wiki
கச்சியப்பர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கச்சியப்பர் (பெயர் பட்டியல்)

கச்சியப்பர் (கச்சியப்ப சிவாச்சாரியார்) (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவ அறிஞர். கந்தபுராணம் எனும் நூலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சியப்பர் தொண்டை மண்டலத்திலுள்ள காஞ்சிபுரம் ஆதிசைவ பிராமணர் குலத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியாருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் கவிவீரராகவன். தந்தை காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் அர்ச்சகராக இருந்தவர். கச்சியப்பர் ஐந்து வயதில் ஏடு தொடங்கி கல்வி கற்றார். ஏழாவது வயதில் உபநயனம் தரித்து தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றார். இலக்கண இலக்கியங்கள் கற்றார். சுப்ரமணியரின் தலமான குமரகோட்டத்திற்கு பூசகரானார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சியப்பர் கந்தபுராணம் எனும் நூலை எழுதினார். இதில் உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் உள்ளன. ஆரிய பாஷயிலுள்ள சனற்குமாரசங்கிதை, சூதசங்கிதை, பிரமசங்கிதை, விஷ்ணுசங்கிதை, சங்கரசங்கிதை, சூரசங்கிதை ஆகிய ஆறு சங்கிதைகளில் ஒன்றான சங்கரசங்கிதையின் பன்னிரு காண்டங்களுள் முதலாவதும், பதின்மூவாயிரம் கிரந்தமுடையதுமான சிவரகசிய காண்டத்தின் ஆறு காண்டங்களையும் இப்புராணம் உள்ளக்கியுள்ளது. தினந்தோறும் நூறு விருத்தங்களாக 10346 விருத்தங்களைப் பாடி முடித்தார். இப்புராணத்தை யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அச்சிட்டுப் பதிப்பித்தார்.

பாடல் நடை

  • கந்தபுராணம்

திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி யெய்தி
அருவந் தனையு முருவத்தையு மன்றி நின்றான்
ஒருவன் றனது பதந்தன்னை யுளத்துள் வைப்பாம்

நூல்கள் பட்டியல்

  • கந்தபுராணம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2023, 10:33:10 IST