under review

துடிநிலை

From Tamil Wiki
Revision as of 09:54, 27 March 2025 by Logamadevi (talk | contribs)

துடிநிலை வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர் துடியை ஒலிக்கும் துடியனின் பண்பைப் பாராட்டுவதைக் கூறும் துறை.

விளக்கம்

படைநடத்தற்குத் துடியொலி கிளர்ச்சியும் செம்மையும் தருவதால் அதனைத் தொல்குடிமரபினின்றும் வழுவாது முழக்கிய துடியனைப் போர் வெற்றிக்குக் காரணமானவருள் ஒருவனாகக் கருதிப் பாராட்டிச், சிறப்புச் செய்வது துடிநிலை.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெட்சி மறவர் தமது பழங்குடி முறைமையால் துடியனது கெழுதகைமையாம் பண்பைப் பாராட்டுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 தொடுகழல் மறவர் தொல்குடிமரபில்
படுகண்இமிழ்துடிப் பண்புஉரைத்தன்று. (1.22)

வெண்பா

முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு - வந்த
குடியொடு கோடா மரபினாற்கு இன்னும்
வடியுறு தீம் தேறல் வா(ர்)க்கு (19)

பொருள்: என்னுடைய முற்பட்ட மூதாதையருக்கு இவனுடைய மூதாதையர் துடிகொட்டுவோராயிருந்தனர்; என் தந்தைக்கு இவன் தந்தையும் எனக்கு இவனுமாக அமைந்தனர். இவ்வாறாக, என் குடியோடும் தொடர்ந்து பணிபுரிந்து வந்த பிறழாத மரபினையுடையவனாகிய இவனுக்கு, வடித்த இனிய மதுத் தெளிவினை இன்னமும் வார்ப்பாயாக.

இஃது, உண்டாட்டின்போது துடியனை வியந்தது. 'குடியொடு கோடா மரபு - வழிவழி இருகுடியினரும் ஒன்று பட்டுப் பிறழ்தலின்றி ஒழுகிவருகின்ற முறைமையைக் கூறியது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page