செருவிடை வீழ்தல்
செருவிடை வீழ்தல் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. உழிஞையார், மிளையும் கிடங்கும் அழிப்பதைத் தடுக்க ஆற்றிய போரில் நொச்சி மறவன் வீழ்ந்ததைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகுடைய அகழி, மிளை(காவற்காடு) ஆகியவற்றை உழிஞை மறவரிடமிருந்து காக்கும் போரில் வீழ்ந்துபட்ட நொச்சி மறவர்களது திறத்தை மிகுத்துக் கூறுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று.(5.4)
வெண்பா
ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க்
காண்தகு நீள் கிடங்கும் காப்பபராய் - வேண்டார்
மடங்கல் அனைய மறவேலோர் தத்தம்
உடம்பொடு காவல் உயிர் (89)
பொருள்: சிங்கம் போன்ற நொச்சி மறவர்கள் தங்கள் காவற்காட்டினையும், நீண்ட அகழியையும் காக்கக் கருதித் தங்கள் உடம்போடு உயிரையும் காவாதவராயினர். (காக்கும் முயற்சியில் களத்தில் இறந்தனர்).
எடுத்துக்காட்டு
புறநானூறு 271
- திணை: நொச்சி துறை: செறுவிடை வீழ்தல்
- பாடியவர்: வெறிபாடிய காமக்கண்ணியார்
நீரறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலையாகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப்
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே
பொருள்: முன்பு, நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவதைக் கண்டோம். இப்பொழுது, நொச்சி மாலையை அணிந்து, மதிலைக் காக்கும், வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறிக் கிடக்கிறது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றதை இப்பொழுது யாம் கண்டோம்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.