under review

சூத்திரம்

From Tamil Wiki
Revision as of 08:15, 18 March 2025 by Madhusaml (talk | contribs)

சூத்திரம் (சூத்ரம்) சுருக்கமாக வகுத்துரைக்கும் செய்யுள் வடிவம். தத்துவக் கருத்துக்களையும் இலக்கணக் கருத்துக்களையும் அறுதியாக வகுத்துரைக்க இவ்வடிவம் பயன்படுத்தப்பட்டது.

சொற்பொருள்

சூத்திரம் என்னும் சொல்லுக்கு சம்ஸ்கிருதத்தில் நூல், சரடு என்று பொருள். ஏடுகளைக் கட்டும் நூல் போல பலவகையான கருத்துக்களை தொகுத்துக் கட்டி வைப்பதனால் இப்பெயர் வந்திருக்கலாம்.

வரையறை

சூத்திரம் என்பதற்கு பத்மபுராணம் சொல்லும் வரையறை இது

அல்பாக்ஷரமஸம்திக்தம் ஸாரசத் விச்வதோ முகம்:
அஸ்தோபமன வத்யம் ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது:

(குறைந்த எழுத்துக்கள் கொண்டதாகவும், வகுத்துரைப்பதாகவும், சாரத்தை கூறுவதாகவும், அனைத்துக்கோணத்திலும் நோக்குவதாகவும், கூறியது கூறாமலும், பிழையற்றதாகவும் உள்ள வரிகளை நன்கறிந்தோர் சூத்திரம் என்பர்)

பவணந்தி முனிவர் நன்னூல் இலக்கணத்தில் சூத்திரத்தை இவ்வாறு வரையறை செய்கிறார்

சில்வகை எழுத்தில் பல்வகை பொருளைச்
செவ்வன் அடியில் செறிந்து இனிது விளக்கி
திட்ப நுட்பம் சிறந்தன சூத்திரம்

(குறைவான எழுத்துக்களில் பலவகையான பொருட்கள் திகழும்படியாக செம்மையான செய்யுள் முறைப்படி செறிவாகவும் இனிதாகவும் விளக்கி திட்பமும் நுட்பமும் சிறக்க நிலைகொள்வதே சூத்திரம் எனப்படுவது)

சூத்திர நூல்கள்

தமிழில் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்கள் சூத்திரவடிவில் அமைந்துள்ளன. சம்ஸ்கிருதத்தில் ஆறுதரிசனங்களுக்கும் உரிய முதன்மைநூல்களான பதஞ்சலி யோக சூத்திரம், பிரம்ம சூத்திரம், நியாய சூத்திரம், வைசேஷிக சூத்திரம், மீமாம்சா சூத்திரம் ஆகியவை புகழ்பெற்ற சூத்திர நூல்கள்.

உசாத்துணை

  • நன்னூல், பவணந்தி முனிவர்
  • பத்மபுராணம்


✅Finalised Page