standardised

முனைவர் லோகநாதன் கிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 09:10, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
முனைவர் லோகநாதன்

முனைவர் லோகநாதன் கிருஷ்ணன் (3 மே, 1942 - 17 ஏப்ரல், 2015) மலேசியாவில் கல்வித்துறை ஆய்வாளராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். நூல்நெறி அறிவியல் (Hermeneutic science) என்னும் துறையில் தேர்ச்சி பெற்ற கல்வியாளராக அவர் பணியாற்றினார். தாரு தேர்வு (baum test) முறையை மேம்படுத்தி  சைவ சித்தாந்த கூறுகளை  உட்புகுத்தி மனநல ஆராய்சியில், ஆகமிய உளவியல் (Agamic Psycologi) என்ற துறையை தனி பாடதிட்டமாக வளர்ந்து மாணவர்களுக்கு போதித்தார். சைவ சித்தாந்த ஆய்வுகளில்  சிவஞானபோதத்தை ஆழ்ந்து ஆராய்ந்ததோடு மெய்கண்டாரைத் தனி ஞானாசிரியராக விளக்கினார்.  

குடும்பம்

கி.லோகநாதனின் பெற்றோர் தமிழ் நாட்டிலிருந்து கெடா மாநிலத்தில் உள்ள சுங்கை பட்டாணியில் குடியேறினர். சுங்கை பட்டாணியில் வணிகம் செய்து வந்த அவர்கள் இரண்டாம் உலகப்போர் உச்சம் பெற்ற காலத்தில் பாதுகாப்பு கருதி தமிழ் நாட்டிற்கு திரும்பினர். கி. லோகநாதன் தமிழ் நாட்டில் மே 3, 1942-ல்  பிறந்தார். உலகப்போருக்குப் பின்னர் அவர் பெற்றோர்கள் மீண்டும் மலாயா திரும்பி சுங்கை பட்டாணியில் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.  கி.லோகநாதன்  சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைக் கற்றார்.  முனைவர் கி. லோகநாதன் 1972-ஆம் ஆண்டு டாக்டர் சாராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு டாக்டர் நவீனா, டாக்டர் அருணன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  

கல்வியும் பணியும்

முனைவர் கி.லோகநாதனின்  சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 1954-ஆம் ஆண்டில் தன் ஆரம்பக்கல்வியை முடித்தார். பிறகு பினாங்கு ஃபிரி ஸ்கூலில் (Penang free school) இடைநிலைக் கல்வியை முடித்து, கொழும்பு கல்வி உபகாரச் சம்பளம் பெற்று நியூசிலாந்து ஒதாகோ பல்கலைக்கழகத்தில் 1966-ல் கணிதத்துறையிலும் தத்துவத்திலும் பட்டம் பெற்றார். 1967-ல் ஆசிரியர் பயிற்சி பெற்று சிரம்பான் கிங் ஜோர்ஜ் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1972-ஆம் ஆண்டு மலேசிய கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டு ஆய்வு பிரிவு துணை இயக்குநராகப் பணியில் இணைந்தார்,  முதுகலை பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவுச் செயல்பாங்கு உளவியல் (cognitive psychology) துறையிலும் முனைவர் பட்டத்தை Discourse analysis எனும் உளவியல்  துறையிலும் பெற்றார். 1979-ஆம் ஆண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி உளவியல் விரிவுரையாளராக பணியமர்த்தப்பட்டதோடு இன்ஸ்பையர் திட்டம் (PROJECT INSPIRE) என்றழைக்கப்பட்ட புறநகர் மாணவர் தொடக்க கல்வி மேம்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். அக்கால கட்டத்தில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அவசியமான  கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகள் இதன் வழி உருவாக்கப்பட்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

1997-ஆம் ஆண்டில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின்னர் தன் விருப்ப துறைகளில் மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு கட்டுரைகள் எழுதினார்.  எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை விரிவுரையாளராக பணியாற்றிய சம காலத்தில் முனைவர் கி. லோகநாதனும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

ஆய்வு துறைகள்

முனைவர் லோகநாதன்

முனைவர் கி.லோகநாதன் நூல்நெறி ஊடாடல் ஆய்வியல் (Hermeneutic Analysis of Discourse )  எனும் ஆய்வு முறைமையில் தேர்ச்சி பெற்றவர்.  இந்த ஆய்வு முறைமையின் ஒரு பகுதியாக ஆகாமிய உளவியல் என்னும்  மனோவியல் ஆய்வு முறையை வடிவமைத்தார். இத்துறை ஆங்கிலத்தில்  Hermeneutic Semiotics  என்று அழைக்கப்படும் குறியீட்டுரு நூல்நெறி துறையைச் சார்ந்தது. ஆகாமிய உளவியல் என்பது பாரம்பரிய ஆகாமிய அல்லது தாந்ரீகத்தில் பொதிந்துள்ள உளவியல் அமைப்பைக் குறிக்கிறது. மேலும் குறிப்பாக சைவ சித்தாந்தத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. அது சைவ சித்தாந்த மரபில் மிக நீண்ட காலமாக புழங்கி வந்தாலும்  13-ஆம் ஆண்டில் தான் மெய்கண்டரால் முறைப்படுத்தப்பட்டது என்பது முனைவர் கி. லோகநாதனின் கூற்று.  

ஆகம உளவியலின் வழி அவர் திருமூலர், மெய்கண்டார், தொல்காப்பியர் போன்ற மெய்ஞானிகளின் கருத்துகளை உளவியல் மூல கருத்துகளாக கொண்டு பல்வேறு ஒப்பீட்டு ஆய்வு கட்டுரைகளை ஆங்கில ஆய்வேடுகளில் எழுதினார். Meykandar & kat, Meykandar & Jung, Meykandar, Hume and Heidegger போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும்   தொல்காப்பியத்தை சுற்றுச்சூழல் உளவியல் (environmental psychology)   நோக்கில் ஆராய்ந்தார். தமிழில் மெய்கண்டாரின் சமயாதீதம், சதாசிவ ரூபம், மெய்கண்டார் இல்லறம் போன்ற பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.

உலகன், லோகநாதன் முத்தரையன், தத்துவராயன் கி.லோகநாதன் போன்ற பெயர்களில் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் நூல்கள்,  ஆய்வு கட்டுரைகள் எழுதியதோடு இணைய மடலாடல்குழுக்களிலும் வலைப்பக்கங்களிலும் இயங்கினார்.  

தாரு தேர்வு (baum test)

Baum test அல்லது Tree test" அல்லது "Koch test  என்பது, மாணவர்கள் அல்லது மனநல ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவர் வரையும் மரத்தின் படத்தை மனோவியல் வெளிப்பாட்டு பிரதியாக கொண்டு செய்யப்படும் ஆய்வாகும்.  Charles Koch  எனும் சுவிடன் ஆய்வாளர் 1952 baum test முறையை அறிமுகப்படுத்தினார். உளக்கூறு ஆய்வுகளில் ஆர்வமாக ஈடுபட்ட ஜங்கியன் மரபு (Carl Gustav Jung  மரபு) ஆய்வாளர்கள் Baum test முறையையும் அதன் உட்பொருள் வெளிப்பாட்டு விவரிப்புகளையும் விரிவாக்கம் செய்தனர்.  இதுவே தாரு தேர்வு என்று அழைக்கப்படுகின்றது.

முனைவர் கி. லோகநாதன் தாரு தேர்வு முறையை தனது ஆய்வுக்கு பொருந்துமாறு மேலும் மாற்றியமைத்தார். நான்கு மடிப்பாக மடிக்கப்பட்ட ஒரே தாளில் வரையப்படும் நான்கு மரங்களையும் மனோவியல் குறியீடாக கொண்டு அதை Hermeneutic Analysis முறையில் உட்பொருள் காணும் முறையை அவர் பயன்படுத்தினார். A, B, C, D என அடையாளமிடப்படும் அந்த நான்கு மரங்களும் ஆய்வுகுட்படுபவரின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியனவற்றைக் காட்டும்.  மேலும் ஆகமிய உளவியல் என்பதன் அடிப்படையில், வரையப்பட்ட மரங்களில் வெளிப்படும் சமய சின்னங்கள், முத்திரைகள், மண்டலாக்கள் போன்றவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.  அவற்றிற்கான ஆழ்மன விளக்கங்களை தொகுத்து எழுதினார்.

சுமேரிய தமிழ்

இலங்கை பேராசிரியர் சதாசிவம் ஆறுமுகம்  பண்டைய சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் இருக்கும் ஒலி ஒற்றுமையை சுட்டிக் காட்டி ஆய்வுகள் செய்தார். மேலும் பேராசிரியர் எச் ஆள் ஹால் போன்ற சிலரும் சுமேரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஒற்றுமை இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். கி.லோகநாதன் சுமேரிய களிமண் வட்டுகளில் காணப்படும் ஆப்பெழுத்து(Cuneiform) பதிவுகளையே தமிழ்மொழியோடு ஒப்பிட்டு அவற்றின் ஓசை ஒற்றுமையைக் கூர்தல் மொழியியல் (Evolutionary Linguistic ) முறையில் ஆய்ந்து எழுதினார். சுமேரிய மொழி வாக்கியங்களை நேரடியாக தமிழ் வாக்கியங்களாக மாற்றிக் காட்டினார். பண்டைய சுமேரியம், குமரியிலிருந்து புலம் பெயர்ந்த  முதல் சங்கம் தொடர் நிலம் என்ற கருதுகோளை முன்வைத்து உறுதியாக வாதிட்டார்.     

எழுத்தும் வாழ்வும்

Ulangkaji 5.jpg

முனைவர் கி.லோகநாதன்  1990-களிலேயே நேரடியாக கணினியில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பல்வேறு இணைய ஆய்வேடுகளிலும் தன் சொந்த வலைப்பதிவுகளிலும் அவர் தன் இரு மொழி கட்டுரைகளை  பதிவேற்றினார். அவ்வகையில் டாக்டர் சி. ஜெயபாரதி, எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு போல முனைவர் கி.லோகநாதனும் மலேசிய முன்னோடி  தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவராவார்.  கி. லோகநாதன் Hermeneutic analysis of Discourse என்ற ஆய்வுநூலை 1992-ல் வெளியிட்டுள்ளார். 1993-ஆம் ஆண்டு அருட்குறள் என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் கட்டமைப்பு திருக்குறளை அடியொற்றி  இருந்தாலும், அறம், பொருள், இன்பம் என்று வடிவமைக்கப்படாது உகத்தினை, அகத்திணை, புறத்திணை, என்ற உத்தியில் ஆக்கப்பட்டுள்ளது. நன்னெறி, ஆன்மீக, சைவ சித்தாந்த, வாழ்வியல் கருத்துகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. மூன்று திணைகளில் 2670 குறட்பாக்களை கொண்டுள்ளது. உலக சைவப் பேரவை இந்நூலை வெளியிட்டது. அருட்குறளின் முதல் குறள்

'உலகெலாம் கண்டரு ளின்ஓயா துளுற்றும்

மலமிலான் மாணடிகள் போற்றி’  

உலகனார் என்ற இணையப்பக்கதில் பல சைவ சித்தாந்த கட்டுரைகளையும் மெய்கண்டார், பெரியாழ்வார் போன்ற சமய ஞானிகளைப் பற்றியும் ஆய்வு நோக்கில் எழுதியுள்ளார்.  ஆகமிய உலவியல் தொடர்பான கட்டுரைகளும் தனி அகப்பக்கங்களில் எழுதப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாகப்  பல இடங்களில் சைவ சித்தாந்த வகுப்புகளும் மெய்கண்டாரியல் வகுப்புகளும் நடத்தினார். அகண்டபாரதம் : Agandabaratham yahoo group,மெய்கண்டாரியம் : Meykandar yahoo group போன்ற  இணைய மடலாடு குழுக்களை உருவாக்கி , பல உலகளாவிய அறிஞர்களை இணைத்து  தனது தமிழாய்வுகளைப் பகிர்வு செய்தார். அதில்  Gary C.Moore (The Self in Metatheism and Western Philosophies- A Dialog with Gary C. Moore), அமெரிக்க சைவ சித்தாந்த ஆதின புலவர் கணேசலிங்கம், போன்றவர்களும் உள்ளடங்குவர்.

முதுமையில் குடும்பத்தை விட்டு விலகி தனிமையில் வாழ்ந்த முனைவர் கி. லோகநாதன், தன் முழு நேரத்தையும் ஆய்வுகள் செய்வதிலும் கட்டுரைகள் எழுதுவதிலும் செலவிட்டார். உலகின் பல மூலைகளில் இருந்த பல்துறை அறிவியல் அறிஞர்களுடன் தொடர் உரையாடல்களில் ஈடுபட்டார். Prof Antonio T. de Nicholas போன்ற நூலாசிரியர்களுடன் அவர் நிகழ்த்திய உரையாடல்களை அவர் பதிவு செய்துள்ளார்.   ஆனாலும் அவரின் அறிய பல ஆய்வுகளும் கட்டுரைகளும் இன்றும் முறையாக தொகுக்கப்படாமல் இணையத்தில் உள்ளன.   அவர் தனது இணைய கட்டுரைகளையும் நீண்ட சமய சொற்பொழிவுகள் அடங்கிய குரல் பதிவுகளையும் தன் சேமிப்பில் இருந்த பல்லாயிரம் நூல்களையும்  தனக்கு அணுக்கமான பெண் ஆய்வாளரின் பொறுப்பில் ஒப்படைத்தார். ஆனாலும் அவை முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்த முடியாத நிலையில் இணையத்தில் உள்ளன.  குடும்ப சிக்கல் காரணமாக அவரின் பல படைப்புகள் முறையாக பாதுகாக்கப்படவில்லை.   

மறைவு

முனைவர் கி. லோகநாதன் ஏப்ரல் 17, 2015 அன்று பினாங்கு தனியார் மருத்துவமனையில் தனது 70-ஆவது வயதில் காலமானார்.

உலகனார் ஆகம அறிவியல் மையம்

முனைவர் கி. லோகநாதன் மறைவிற்குப் பின் 2017-ல் அவரின் மாணவர்கள் சிலர் உலகனார் ஆகம அறிவியல் மையம் (Ullaganar Agamic Sciences Center) என்ற நிறுவனத்தை தோற்றுவித்து அதன் வழி முனைவர் கி.லோகநாதன் முன்னெடுத்த ஆகமிய உளவியல்  வகுப்புகளையும் சொற்பொழிவுகளையும் மனோவியல் ஆய்வு வழிகாட்டி சேவைகளைகளையும் வழங்கி வருகிறார்கள். முனைவர் சிவகுமார் ராமகிருஷ்ணன் அதன் முதன்மை செயல்பாட்டாளராக உள்ளார்.   

விவாதங்கள்

கி. லோகநாதனின் பல ஆய்வுகளும் கருத்துகளும் ஆய்வு மட்டத்திலேயே இருப்பவை. அவை பொது மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. முனைவர் கி. லோகநாதனின் பல கருத்துகளும் அறிஞர்தம் கருத்து விவாத பாடுபொருளாக மட்டுமே இருந்துள்ளன.  அறிவியல் பல்கலைக்கழகத்தில் அவர் ஆகம உளவியல் பாடத்தை சில ஆண்டுகள் நடத்தினார். ஆனால் அவரின் நோக்கம் சைவ சித்தாந்தம் நோக்கி இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அந்த பாடம் நீக்கப்பட்டது. முனைவர் கி.லோகநாதன் எழுதிய 'அருட்குறள்' நூல் திருக்குறளுக்கு இழுக்கு சேர்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நூலின் உட்பொருளை வாசித்து விளக்கும் முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. கி.லோகநாதன் முன்வைத்த சுமேரிய மொழி பற்றிய கருத்துகள் வரலாற்று ஆய்வாளர்களிடம் மதிப்பு பெறவில்லை. அவை அறிவியல் அடிப்படை இல்லாத ஊகங்கள் என்றே கருதப்படுகின்றன.  ஆனால் மொழி உணர்வாளர்களை  அக்கருத்துகள் வெகுவாக கவர்ந்தன. தமிழ்ச் சூழலில் முனைவர் கி. லோகநாதன் அறியப்பட அவர் முன்வைத்த சுமேரியத் தமிழ் கருத்துகளே முதன்மை காரணம்.  தமிழ் உணர்வாளர்கள் அக்கருத்துகளை  முழுமையாக ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக பரப்பினார்கள்.  

நூல்கள்

  • அருட்குறள்
  • Metaphysica Universalis of Meykandar
  • Hermeneutic analysis of Discourse
  • https://sites.google.com/site/ulaganaar/

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.