standardised

ந. முத்துமோகன்

From Tamil Wiki
ந. முத்துமோகன்

ந. முத்துமோகன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1954) மார்க்ஸிய தத்துவ அறிஞர், கல்வியாளர், இலக்கியத் திறனாய்வாளர். தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இலக்கிய ஆய்வாளர். சைவ சித்தாந்தம், சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை செய்தவர்.

பிறப்பு, கல்வி

ந. முத்துமோகன்

ந. முத்துமோகன் ஆகஸ்ட் 25, 1954-ல் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் சிதம்பரபுரத்தில் நடராஜன் - பவானி இணையருக்குபிறந்தார். உயர்நிலைக்கல்வி வரை அரசு உயர்நிலைப்பள்ளி, களக்காட்டில் பயின்றார். நாகர்கோவில், பயோனியர் குமாரசாமி கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்தபின் மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1976-82 வரை பயின்று ஒருங்கிணைந்த முதுகலை (வேதியியல்) பட்டம் பெற்றார்.

சோவியத் ருஷ்யாவில் மாஸ்கோ லுமும்பா பல்கலையில் (The Lumumba University) 1982 – 87 வரை இந்திய தத்துவத்தில் ஆய்வு செய்து "புராதான இந்திய தத்துவத்தின் தோற்றம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ந.முத்துமோகன் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் வசிக்கிறார். ஜூலை 5, 1989-ல் பள்ளி ஆசிரியை இந்திராவை மணந்தார். பிள்ளைகள் பாரதி நடராஜன், ராஜகோபால்.

1987 முதல் 2013 வரை மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்

ந.முத்துமோகன் தன் இலக்கிய ஆதர்சமாக தஸ்தாவஸ்கியைக் கூறுகிறார். மார்க்சிய அரசியல் தத்துவத்தில் ஆர்வமுள் ந.முத்துமோகன் நாட்டாரியல் அறிஞர் ஆ.சிவசுப்ரமணியத்திடமிருந்து சமூகவியல் ஆய்வை பயின்றார். சைவ சித்தாந்தம், சீக்கிய மதம் மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் குருநானக் இருக்கையின் தலைமை பொறுப்பு வகித்துள்ள ந.முத்துமோகன் எழுதிய முதல் ஆய்வுக்கட்டுரை நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி என்னும் இதழில் வெளிவந்தது. ந. முத்துமோகனின் முதல் நூல் 'அமைப்பியல்' காவ்யா பதிப்பகம் வழியாக 1990-ல் வெளியானது.

பின் அமைப்பியல், மார்க்ஸிய விவாதங்கள், 20-ஆம் நூற்றாண்டு மார்க்சியம், மார்கஸ்-அம்பேத்கார் உரையாடல், சீக்கியம் குறித்தான ஆய்வுகள், தமிழ் அடையாளம் போன்ற தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். ஐரோப்பியத் தத்துவங்கள் மட்டுமின்றி இந்திய / தமிழகத் தத்துவங்கள் குறித்தும் எழுதிய 120 கட்டுரைகள் இவரது பெயரில் மார்க்ஸியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகத்தால் 2001-ல் தொகுக்கப்பட்டு ஒரு பெருநூலாய் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பியத் தத்துவவாதிகள் குறித்து NCBH நிறுவனத்திற்காகப் பல குறு நூல்களையும் எழுதியுள்ளார். மார்க்ஸிய அணுகுமுறையுடன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள் பட்டியல்

தமிழ் அடையாள அரசியலின் இயங்கியல்
  • படைப்பின் அற்புத தருணங்கள்(மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஒர் அறிமுகம்) (NCBH-2022)
  • மார்க்சியக் கட்டுரைகள் (காவ்யா-2007)
  • மார்க்ஸ்-அம்பேத்கர்: புதிய பரப்புகளுக்கான தேடுகை (விடியல் பதிப்பகம்-2011)
  • ஐரோப்பிய தத்துவங்கள் (NCBH-2015)
  • மார்க்சியம் பயில்வோம் (NCBH-2018)
  • தொடரும் மார்க்சிய விவாதங்கள் (கீற்று-2006)
  • மார்க்சிய விவாதங்கள் (காவ்யா-2002)
  • சமூகவியல் நோக்கில் மதம் (NCBH-2012)
  • இயங்கியல் பொருள்முதல்வாதம் – ஒரு அறிமுகம் (NCBH-2012
  • ஜீவாவின் பண்பாட்டு அரசியல் (NCBH-2012)
  • வேதந்தத்தின் கலாச்சார அரசியல் (NCBH-2012)
  • அயோத்திதாச பண்டிதர் – தென்னிந்தியாவில் தலித் தன்னுணர்வின் உருவாக்கம் (NCBH-2017)
  • வர்க்க அரசியலும் அடையாள அரசியலும் (NCBH-2019)
  • 1848 (NCBH-2012)
  • இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்
  • பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
  • பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
  • மார்க்சியம் பயிலுவோம்
  • விளிம்புநிலை மார்க்ஸ்
  • ஹெர்பர்ட் மார்க்யுஸ்
ஆங்கிலம்
  • Essential Postulates of Sikhism (Punjabi University, Patiala, 2003)
  • (Editor) South Indian Studies on Sikhism (Guru Nanak University, Amritsar, 2004)
  • Post Modernism and Indian Philosophy (Bhavani Publications)
  • Essays on Philosophy of Shri Guru Nanak Dev Ji (Indra Gandhi National Centre for the Arts, 2021)
  • Writing Sikh Philosophy on Its Own Terms (Guru Nanak University, Amritsar)
  • Essays on Sikh Philosophy (Institute of Sikh Studies, Chandigarh, 1997)
பதிப்பித்தவை
  • மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் [20 தொகுதிகள்]
  • மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசை

இணைப்புகள்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.