standardised

மதுமிதா

From Tamil Wiki
மதுமிதா

மதுமிதா (இயற்பெயர்:மஞ்சுளாதேவி;பிறப்பு: செப்டம்பர் 5, 1964) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்.

மதுமிதா

பள்ளி, கல்வி

மதுமிதாவின் இயற்பெயர் மஞ்சுளாதேவி. தென்காசியில் ரகுபதிராஜா, பாக்கியலட்சுமி இணையருக்கு செப்டம்பர் 5, 1964-ல் பிறந்தார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி. எட்டாம் வகுப்பு வரை தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். நடுநிலைக்கல்வி உயர்நிலைக்கல்வி தென்காசி பி.ஏ.சி. ஆர் அம்மணி அம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வி ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ராஜபாளயத்தில் பயின்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் அஞ்சல் வழி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் அஞ்சல் வழி பயின்றார். தாய்மொழி தெலுங்கு. சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பு பயின்றார். ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஜெர்மன் மொழிகள் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

மதுமிதா குழந்தைகளுடன்

செப்டம்பர் 12, 1980-ல் ரெங்கனாத ராஜாவை மணந்தார். மகன் பத்ரிநாத், மகள் அம்ருதா ப்ரீதம். ராஜபாளயத்தில் வசிக்கிறார். இணைய வானொலியில் தொகுப்பாளராகத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் செய்தார்.

அமைப்புப் பணிகள்

'துளி'அமைப்பு மூலம் சேவைப்பணிகள் ஆற்றி வருகிறார். துளி அமைப்பின் துணைத் தலைவர். இரத்த தானம் செய்தல், பார்வையற்றோருக்காக வாசித்தல் மற்றும் தேர்வு எழுதுதல், குடும்பப் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் போன்ற சேவைப்பணிகள் செய்து வருகிறார். தமிழ்நாடு அரசு இராஜபாளையம் பெண்கள், சிறுவர்கள் நூலகம் அமைக்க காரணமாக இருந்தவர். நூலக வாசகர் வட்ட தலைவராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

மதுமிதா இலக்கிய ஆதர்சங்களாக வில்லியம் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, ப்ரான்சிஸ் பேகான், ஜூல்ஸ் வெர்ன், லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், உமர் கய்யாம், ராபர்ட் ப்ராஸ்ட், வால்ட் விட்மன், சிமொன் தெ பொவ்வார், எமிலி டிக்கின்சன், ஆண்டாள், அக்கமகாதேவி, கங்காதேவி, அம்ரிதா ப்ரீதம் ஆகியோரக் குறிப்பிடுகிறார். மதுமிதாவின் முதல் கவிதைத் தொகுப்பு 'மௌனமாய் உன் முன்னே' 2003-ல் வெளியானது. அச்சு, இணைய இதழ்களில் மதுமிதாவின் கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல், பத்திகள், சமையல் குறிப்புகள் வெளிவந்துள்ளன. மதுமிதான் பத்தி எழுத்தாளராக 'புதியபார்வை' இதழில் எழுதிய பத்திகளின் தொகுப்பு 'காலம்’ நூலாக வெளிவந்தது.

இலக்கியச் செயல்பாடுகள்

மதுமிதா பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவர்களுக்காகவும் உலக அரங்குகளிலும் உரை நிகழ்த்தியுள்ளார். பெங்களூர், சர்வதேச கவிஞர்கள் சந்திப்பு (International poets meet),'Poetic Prism' விஜயவாடா, டெல்லி சார்க்(SAARC) இலக்கிய விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பு நிகழ்த்தியுள்ளார். அறுநூறுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்தார். தமிழ்குஷி எப். எம். இணைய வானொலியில், ஆட்டோகிராப் என்னும் நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்திருக்கிறார்.

தொகுப்புநூல்கள்

மதுமிதா குறிப்பிடத்தக்க இலக்கியத் தொகைநூல்களைச் செய்திருக்கிறார். 24 படைப்பாளிகள் தங்களுடைய பருவங்களைக் குறித்து பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் ’பருவம்’ என்ற பெயரில் வெளியானது. காந்திய கட்டுரைகள் தொகுப்புநூலான ’காந்தியமும் நானும்’ நூலை எழுதினார்.2006-ல் பதினெட்டு பத்திரிகைஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்புநூலாக ’நான்காவது தூண்’ நூலை எழுதினார். முப்பத்தியேழு படைப்பாளிகளின் இரவுகள் குறித்த தொகுப்பு நூலாக 'இரவு’ எழுதினார். இருபத்தியொன்பது படைப்பாளிகள் தங்களுடைய மரங்களுடன் இணைந்த சிந்தனைகளைகளைப் பகிர்ந்து கொண்டகட்டுரைகளின் தொகுப்பாக 'மரங்கள்’ எழுதினார்.

மதுமிதா

மொழிபெயர்ப்பு

சம்ஸ்கிருதம்

பர்த்ருஹரியின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு 'நீதி சதகம்' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். சமஸ்கிருதத்திலிருந்து முந்நூறு பாடல்களின் தமிழாக்க நூலாக 'பர்த்ருஹரி சுபாஷிதம்' என்ற நூல் வெளிவந்தது. மகாகவி காளிதாசரின் மேகதூதம், ருது சம்ஹாரம் நூல்களை சமஸ்கிருதத்திலிருந்து தமிழாக்கம் செய்தார்.

கன்னடம்

அக்கமகாதேவி வசனங்களை தமிழ்ச்செல்வியுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழாக்கம் செய்தார். கவிஞர் சித்தலிங்கய்யாவின் 40 கன்னடக் கவிதைகளை கே.மலர்விழியுடன் இணைந்து கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். சூத்ர ஶ்ரீநிவாஸ் எழுதிய கன்னட நாவல் ’யாத்ரெ’ கன்னட நாவலை மலர்விழியுடன் இணைந்து தமிழாக்கம் செய்தார்.

தெலுங்கு

வேமனரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களை ’வேமன மாலை’ என்ற பெயரில் தெலுங்கிலிருந்து தமிழாக்கம் செய்தார். தெலுங்கு கவிஞர் பெருகு ராமகிருஷ்ணாவின் கவிதைகளை 'பூக்களை விற்ற ஊர்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்தார்.

ஆங்கிலம்

'The Bell Jar என்ற சில்வியா பிளாத்தின் ஆங்கில நாவலை 'சோதனைக் குடுவை’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்தார். ஒரிய கவிஞர் பிரதிபா சத்பதியின் கவிதைத்தொகுப்பு நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கு மொழிபெயர்த்தார்.

இசை

மதுரை வானொலியில் இவரின் பதினொரு பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளன. இவரின் ஒன்பது பாடல்கள் கனடா இசையமைப்பாளர் ஆர்.எஸ். மணி இசையமைத்துள்ளார்.

ஆய்வு

மதுமிதா படைப்புலகம்’ நேர்காணலும் ஆய்வும் அடங்கியது. முபீன் சாதிகா .

விருதுகள்,பரிசுகள்

  • பர்த்ருஹரி சுபாஷிதம் நூலின் மொழிபெயர்ப்புக்கான திசையெட்டும் விருது - சென்னை, 2009
  • இலக்கியச் சாதனையாளர் விருது - மணிமேகலை மன்றம், இராஜபாளையம்
  • சாதனையாளர் விருது - பத்திரிகை சங்கம், சென்னை
  • அப்துல்கலாம் நினைவு சாதனையாளர் விருது - நெல்லூர், 2015
  • பல்துறை இலக்கியச் செல்வி விருது 20.09.2015 இராஜபாளையம்
  • கவிக்கோ அப்துல்ரஹ்மான் நினைவு விருது 03.02.2018 தேனி
  • சாவித்திரிபாய் புலே விருது 2018 Savitribai Phule National Women Achiever Award 2018
  • அக்கமகாதேவி விருது டிசம்பர் 25, 2019 - பெங்களூரு
  • சாதனையாளர் விருது (2020) இராஜபாளையம்
  • ஸ்பாரோ இலக்கிய விருது (2020) மும்பை
  • அறம் விருது 2021 இராஜபாளையம்
  • சாதனையாளர் விருது 2021 இராஜபாளையம்
  • ஶ்ரீ சக்தி விருது 2022 - சென்னை
மௌனமாய் உன்முன்னே

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • மௌனமாய் உன்முன்னே (தமிழ்நெஞ்சம் பிரசுரம்: 2003)
  • பாயும் ஒளி நீ எனக்கு (மின்னூல்: 2007)
  • நினைவில் அன்புள்ள பறவை (கோதை பதிப்பகம்: 2022)
மொழிபெயர்ப்பு
  • நீதி சதகம் (2000)
  • பர்த்ருஹரி சுபாஷிதம் (சந்தியா பதிப்பகம்: 2005
  • வசீகரிக்கும் தூசி (சாகித்திய அகாதெமிவெளியீடு: 2010)
  • அக்கமகாதேவி வசனங்கள் (திரிசக்தி பதிப்பகம்: 2010)
  • மேகதூதம் (தமிழினி பதிப்பகம்: 2013)
  • கவிஞர் சித்தலிங்கய்யா 40 கன்னடக் கவிதைகள் (புதுப்புனல் பதிப்பகம்: 2014)
  • வேமன மாலை (தமிழினி பதிப்பகம்: 2016)
  • பூக்களை விற்ற ஊர், (சந்தியா பதிப்பகம்: 2016)
  • பெத்தி பொட்ல சுப்பராமய்யா 34 கதைகள் (சாகித்திய அகாதெமி வெளியீடு: 2018)
  • சோதனைக் குடுவை (தமிழினி பதிப்பகம்: 2022)
  • அக்கமகாதேவி வசனங்கள் (புலம் பதிப்பகம்: 2022)
  • யாத்ரெ (சுவாசம் பதிப்பகம்)
  • கிரிஸ்டியன்ஆண்டர்செனின் தேவதைக் கதைகள் (சாந்தி நூலகம்)
இரவு
கட்டுரைகள்
  • காலம் (சந்தியா பதிப்பகம்: 2010)
  • பருவம் (சந்தியா பதிப்பகம்: 2014)
  • காந்தியமும் நானும் (அமேஸான் கிண்டில்: 2020)
பிற
  • நான்காவது தூண் (ஸ்ரீவிஜயம் பதிப்பகம்: 2006)
  • இரவு (சந்தியா பதிப்பகம்: 2010)
  • மரங்கள் (சந்தியா பதிப்பகம்: 2011)
  • மதுமிதா படைப்புலகம் (அமேஸான் கிண்டில்)
  • மதிப்பீட்டுக்கலை (அமேஸான் கிண்டில்)
சிறுவர் கதைகள்
  • தைவான் நாடோடிக்கதைகள் (உதயகண்ணன் வெளியீடு: 2007)
  • தசாவதாரம் (சாந்தி நூலகம்: 2014)
  • நிஜ இளவரசி (சாந்தி நூலகம்: 2014)

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.