under review

சமவசரணம்

From Tamil Wiki
Revision as of 09:58, 23 August 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
சமவசரணம், அஜ்மீர்
சமவசரணம்
சமவசரணம்

சமவசரணம் :சமண தீர்த்தங்கரர்கள் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்த பிறகு அவர்கள் எல்லாவுயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றி போதிக்கும் இடம் சமவசரணம் எனப்படும்.

சொற்பொருள்

சம்ஸ்கிருத உச்சரிப்பு ஸமவஸரண. சம என்றால் நிகர். அவசரம் என்றால் வாய்ப்பு. சம வாய்ப்பு என்று பொருள் கொள்ளப்படுகிறது. சில பிராகிருத நூல்களில் சமவசரணம் என்று உள்ளது. சரணம் என்றால் காலடிகள். அனைவருக்குமுரிய காலடிகள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

நூல் விளக்கம்

மேருமந்தரபுராணம் ‘கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்கிடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம்’ என்று சமவசரணச்சருக்கம் பகுதியில் குறிப்பிடுகிறது.

அமைப்பு

சமவசரணம் வட்ட வடிவமான மண்டபம். நான்கு பக்கமும் வாயில்களுடையது. நான்கு அடுக்காக மூன்று மதில்கள், ஏழு பிரகாரங்கள் கொண்டிருக்கும். வாயில்கள் முன் உயரமான மானஸ்தம்பங்கள் என்னும் வானந்தாங்கித் தூண்கள் இருக்கும். இந்நான்கு அடுக்குகளையும் கடந்து திரிமேகலா எனும் இடத்தில் கந்தக்குடி எனும் மேடையில் இருக்கும் அரியணை மீது ஆயிரமிதழ்களைக்கொண்ட தாமரை மலரின்மீது தீர்த்தங்கர பகவான் வீற்றிருப்பார். அவர் தலையின் பின்புறம் ஒளிவட்டமும் தழைத்துப் பரவிய அசோக மரமும் இருக்கும்.

இம்மண்டபம் தற்போதைய அளவுப்படி பன்னிரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்புக் கொண்டது. இதன் முதல் அடுக்கில் கணதரர், முனிவர்கள், தேவ தேவதையர் இருப்பர். இரண்டாவது அடுக்கில் அரசர்களும் மக்களும் இருப்பர். மூன்றாவது அடுக்கில் மிருகங்களும் ஏனைய உயிரினங்களும் இருப்பார்கள்.

அறவுரை

பகவான் சமவசரணத்தில் அறவுரை ஆற்றுவார். அவரிடமிருந்து வரும் ஒலி திவ்யத் தொனி எனப்படும். அனைவரும் அவரவர் மொழியிலேயே திவ்யத் தொனியான அறவுரையை அறிவர். இந்நிகழ்ச்சி நடைபெறும்போது மலர்கள் பருவ மாற்றமின்றி மலரும். அனைவரும் நட்புடன் இருப்பர். நாட்டிலுள்ள மக்களின் உடல் குறைபாடுகள் நீங்கும். இருக்குமிடங்கள் பளிங்கு போல் இருக்கும் குளிர்ச்சியான மணமான தென்றல் வீசும்.மேகம் சாரலைப் பொழியும். தானியங்கள் பெருகும் அனைவரும் மனம், மொழி, உடலால் துதிப்பர். எங்கும் எண்வகை மங்களங்கள் நிறையும். திசை நான்கும், இரத்தின தருமச்சக்கரங்கள் இருக்கும்.

உசாத்துணை


✅Finalised Page