standardised

ஆதி. குமணன்

From Tamil Wiki
Revision as of 16:39, 28 July 2022 by Tamizhkalai (talk | contribs)
ஆதி. குமணன்

ஆதி. குமணன் மலேசியாவின் பத்திரிகை ஆசிரியராக அறியப்பட்டவர். தனது எழுத்தின் மூலம் மலேசியப் பொதுவாசகர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியவர். எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பத்திரிகை அதிபராகவும் எழுத்தாளர்களின் நலனுக்குத் துணை நின்றவர்.

பிறப்பு, கல்வி

சிறுவனாக ஆதி. குமணன்

ஆதி. குமணன்,  பிப்ரவரி 9, 1950-ல் பினாங்கு மாநிலத்தில் உள்ள பட்டர்வொர்த் நகரில் பிறந்தார். இவர் தந்தை ஆதிமூலம். தாயார் சாரதா. இத்தம்பதியினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆதி.குமணன். இவரது அண்ணன் எழுத்தாளர் ஆதி. இராஜகுமாரன். ஆதி. குமணனின் இயற்பெயர் குமணபூபதி. தாயாரின் பராமரிப்பில் தனது ஐந்தாவது வயதில் தமிழகம் சென்றவர் தன் ஆரம்பக் கல்வியை தமிழகத்திலேயே கற்றார். 1970-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் தன் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

குடும்பம்

தந்தை ஆதிமூலத்துடன்

ஆதி. குமணன் மார்ச் 23, 1970-ல் இந்திராவதி பாயைத் திருமணம் செய்தார். . ஆதி.குமணன் - இந்திராவதி பாய் தம்பதிகளுக்கு ஒரு மகன் உண்டு.

மரணம்

இளைஞராக ஆதி. குமணன்

தனது 55-வது வயதில் மார்ச் 28, 2008-ல் மரணமடைந்தார்.

எழுத்து வாழ்க்கை

ஜெயகாந்தனுடன் ஆதி.குமணன்

பட்டப்படிப்பை முடித்து, 1970-ல் தமிழகத்தில் இருந்து மலேசியா திரும்பினார் ஆதி.குமணன். 1972-ல் அவர் தந்தை பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு ஆதி. குமணனை அழைத்து வந்து 'பார்வதி பாளைகாட்' எனும்  துணிக்கடையில் எழுத்தர் வேலை பெற்றுத்தந்தார். தொடக்கத்தில் கோலாலம்பூரில் மலாய் ஸ்டிரீட் பகுதியில் இருந்த 'பார்வதி பாளைகாட்' எனும்  துணிக்கடையில் வேலை செய்தார். அந்தத் துணிக்கடை நிர்வாகியான சின்னராசு ஆதி. குமணனின் திறனை அறிந்து அவரை எம். துரைராஜிடம் அறிமுகப்படுத்தினார். எம். துரைராஜின் சிபாரிசின் பேரில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளையின் நாளிதழான தமிழ் மலரில் உதவி ஆசிரியராகப் பணியைத் துவங்கினார் ஆதி. குமணன். ஆங்கிலத்தில் வந்த செய்திகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியை அவர் ஏற்றார். 70-களில் தமிழ் மலரில் பணியாற்றிய காலத்திலேயே புதுக்கவிதை வடிவத்தைப் பரவலாக அறிமுகம் செய்யும் வகையில் ‘புதன் மலரை’ துவங்கினார்.

1976-77-ல் தமிழ் மலரில் நிர்வாகத்தை ஏற்ற புதியவர்களால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தை மேற்கொண்டார். இதனால் வேலையை இழந்தார்.

1977-ல் ஆதி. குமணன் சுயமாக வானம்பாடி வார இதழைத் துவங்கினார். துவங்கிய முதல் ஆண்டிலேயே அது 50000 பிரதிகள் வரை விற்றது. மேலும் வானம்பாடி வழி மாதம் ஒரு நாவல் எனும் திட்டத்தைக் கொண்டு வந்து 11 குறுநாவல்களைப் பதிப்பித்தார்.

1981-ஆஆம்ஆண்டு முன்னால் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவலிங்கத்தோடு இணைந்து 'தமிழ் ஓசை' தினசரி பத்திரிகையின் உரிமத்தை வாங்கியபின், ஆதி. குமணனே அதற்கு நிர்வாக ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அதை மூன்றரை ஆண்டுகள் நடத்தினார்.

1990-ல் மலேசிய நண்பன் பத்திரிகையை வாங்கி அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அதனை வெற்றிகரமாக நடத்தினார். ஆதி. குமணன் ஆசிரியராக இருந்தவரை மலேசிய நண்பனே மலேசியாவில் முதல்நிலை நாளிதழாகத் திகழ்ந்தது. ஞாயிறு ஓசை, மலேசிய நண்பன் பத்திரிகைகளில் அவர் எழுதிவந்த பத்தி வடிவிலான ‘பார்வை’யும்  கேள்வி பதில் பகுதியான ‘ஞானபீடமும்’ வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தவை.

பொது வாழ்க்கை

ஜி. சரவணனுக்குக் கார் பரிசளித்தபோது

1987-ல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 5-ஆவது தலைவராக ஆதி. குமணன் பதவி ஏற்றார். 1987 முதல் 2003 வரை 17 ஆண்டுகள் அதன் தலைவராகப் பங்களித்தார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தபோது, அவர் முன்னெடுத்த இலக்கிய நிதி 40,000 மலேசிய ரிங்கிட்டைத் தொட்டது. அதனை முதலீடாகக்கொண்டு சங்கத்துக்கு ஒரு கட்டடத்தை வாங்கினார். அக்கட்டடம் மே 4, 1997 அன்று டத்தோ சி. சுப்பிரமணியம் அவர்களால் திறப்பு விழா கண்டது.

தான் தலைவராக இருந்தபோதே மூத்த தமிழ் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் பொருட்டு டான்ஶ்ரீ ஆதிநாகப்பன், டான்ஶ்ரீ மாணிக்க வாசகம் விருதுகளையும் ஏற்படுத்தினார்.

1998-ல் காம்ன்வெல்த் நடைப்போட்டியில் 50 கிலோமீட்டர் பெருநடை போட்டியில் தங்கம் வென்ற ஜி. சரவணனுக்கு மலேசிய அரசாங்கம் வாக்களிப்பத்தபடி 'பெர்டானா' காரை பரிசளிக்காததால் தானே முன்னின்று நிதி திரட்டி அவருக்கு ஹோண்டா சிவிக் ரக கார் வாங்கிப் பரிசாகக் கொடுத்தார். இதுபோல குஜராத் நிவாரண நிதி, சுனாமி நிவாரண நிதி என நாளிதழ் வாயிலாகத் திரட்டி குஜராத் மற்றும் தமிழகத்திற்கு அத்தொகையை வழங்கினார்.

தோட்டத் தொழிலாளர் சங்கம் போராடிய தோட்டப்பாட்டாளிகளுக்கான மாதச் சம்பளக் கோரிக்கையை தன் பத்திரிகை மூலம் தொடர்ந்து குரல் எழுப்பினார்.

அரசியலில் ஐ பி எப்  (இந்தியர்  முன்னேற்ற முன்னணி) கட்சியில் துணைத் தலைவராகவும் சில காலம் பணியாற்றினார்.

பங்களிப்பு

பத்திரிகைகளில் புத்திலக்கியத்திற்கான இடம் வழங்குதல், குறுநாவல் பதிப்புத்திட்டம், எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பல்வேறு திட்டங்கள் என பலத் தளங்களிலும் எழுத்தாளர்கள் உருவாகவும் இயங்கவும் பங்களித்தார்.

விருதுகள்

  • பேராக் மாநில சுல்தானிடன் AMN எனும் விருது  பெற்றார்
  • சிலாங்கூர் மாநில சுல்தானிடம் SSA எனும் விருது  பெற்றார்
  • மாமன்னரிடம் JSM எனும் விருது பெற்றார்

எழுதிய நூல்கள்

  • தூரத்து நிலவு - குறுநாவல் (1980)
  • பார்வைகள் -  கட்டுரைகள் (1984)

உசாத்துணை

  • ஆதி. குமணன் நினைவு மலர் - 2005
  • உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.