தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம்

From Tamil Wiki
இராஜராஜேச்சரம்

தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் ( 1994) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஆய்வு நூல். தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய விரிவான ஆய்வுகள் அடங்கியது, சிற்பவியல், ஆகமமுறைகள் மற்றும் வழிபாட்டுமுறைகளை விவரிக்கும் வரலாற்றாய்வுநூல்.

எழுத்து, வெளியீடு

1994-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டிற்காக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 'தஞ்சாவூர்' என்னும் நூல் பெரிய கோவிலின் 1001-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்தது. இந்த ஆய்வு 1995-ஆம் ஆண்டு அகரம் பதிப்பகத்தால் நூல் வடிவம் கண்டது. இதன் விரிவாக்கமாக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய தஞ்சைபெரியகோயில்- இராஜராஜேச்சரம் என்னும் ஆய்வுநூல் 2010-ல் வெளிவந்தது. சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் இதை வெளியிட்டது. 2020ல் மறுபதிப்பு இராஜராஜேச்சரம் என்னும் பெயரில் வெளிவந்தது.

உள்ளடக்கம்

இந்நூல் ஒன்பது பகுதிகளும் பின்னிணைப்பும் கொண்டது. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் கோபுரங்கள், கட்டிட அமைப்பு ஆகியவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கோயிலின் அனைத்துச் சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் விழாக்கள், ஆசாரங்கள், ஆகமநெறிகள் கூறப்பட்டுள்ளன

தஞ்சைப்பேராலயத்தை மூன்று கோணங்களில் ஆராயும் நூல் இது. சோழமன்னன் ராஜராஜனின் வரலாற்றின் சின்னமாகவும், தமிழ்வரலாற்றின் மாபெரும் ஆவணத்தொகுதியாகவும் இந்நூல் அவ்வாலயத்தை ஆராய்கிறது. தமிழ்ப்பண்பாட்டின், சைவப்பண்பாட்டின் ஒரு மையமாக தஞ்சைப்பேராலயத்தை ஆராய்கிறது. தமிழ் ஆலய- சிற்பக்கலையின் வெற்றிச்சின்னமாக, முன்னுதாரணமாக ஆராய்கிறது இம்மூன்று தளங்களிலும் மிக விரிவான தரவுகளுடன் ஏராளமான அரிய புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்.

தஞ்சை நகரையும் ராஜராஜனையும் விரிவாக அறிமுகம் செய்தபடி தொடங்கும் இந்நூல் ராஜராஜன் கட்டிய கற்றளியின் அமைப்பையும் அதன் கட்டுமானக்கலையையும் விவரிக்கிறது. ஆலயத்தின் பிரபஞ்ச தத்துவம், ஸ்ரீவிமானமே சதசிவலிங்கமாக திகழும் அதன் நுட்பம், அத பஞ்சபூத அமைப்பு அதன் விண்தொடு விமானத்தின் சிறப்பு என விரிவாக விளக்கிச் செல்கிறது து.

பின்னிணைப்பில் கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா, கருவூர்ப் புராணம் ஆகியவை உரையுடன் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்த சாந்தார அறையின் சுவரில் சோழர் கால சுவரோவியங்கள்  இருப்பதை 1931இல் கண்டு உலகுக்கு அறிவித்த பேராசிரியர் எஸ். கே. கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

ஆய்வு இடம்

தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டும் மையமாக்கி வரலாற்றாய்வை நிகழ்த்தும் நுண்வரலாற்றாய்வுமுறையின் மிகச்சிறந்த உதாரணமாக இந்நூல் அமைந்துள்ளது. ஏற்கனவே கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் பேராலய வரலாறே இந்நூலின் முன்னோடியாகும். தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை மட்டும் கொண்டு சோழர் ஆட்சிக்காலத்தின் சித்திரத்தை அளிக்கிறது. கலைவரலாற்றை எழுதுவதிலும் இந்நூல் முன்னோடியானது.

உசாத்துணை