second review completed

புயவகுப்பு

From Tamil Wiki

புயவகுப்பு(புயம்) கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவனின் தோள்(புய) வலிமையைக் கூறுவது.

விளக்கம்

கலம்பக இலக்கியத்துள் இடம் பெறும் உறுப்புகளில் ஒன்று புயம் என்பது ஆகும். புயம் என்றால் தோள் என்று பொருள். நூலினுள் இடம் பெறும் தலைவனின் புயத்தின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து கூறுவதாக இந்த உறுப்பு அமைகின்றது. முத்துவீரியம் புயம் என்ற உறுப்பை வாகு, வகுப்பு என்கின்றது. பிரபந்த தீபிகை இந்த உறுப்பைப் 'புய வகுப்பு' என்கின்றது.

நந்திக் கலம்பகத்தில் புயம் என்ற உறுப்பு தோள் வகுப்பு என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. தோள் வகுப்பு என்பதற்குத் தோளின் பல சிறப்புகளை வகைப்படுத்திக் கூறுதல் என்று பொருள் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டு

நந்திக் கலம்பகம் - தோள் வகுப்பு

மறமதம் கரிதிசை நிறுவின
     மணிநகை யவர்மனம் நகுவன
விறலர சர்கள்மனம் நெகிழ்வன
     விரைமலர் களிமுலை பொருவன
திறலுடை யனதொடை புகழ்வன
     திகழொளி யனபுகழ் ததைவன
நறுமல ரணியணி முடியன
     நயவர நினதிரு புயமதே

பாடலில் நந்திவர்மனின் தோள்களின் ஆற்றல், வெற்றிச் சிறப்பு, அழகு, ஒளி, புகழ் என்பன கூறப்படுகின்றன. பெண்களுக்கு இன்பம் கொடுக்கும் தோள்கள். பகைவர்களுக்கு அச்சம் செய்யும் தோள்கள் என்று தோள்களின் மென்மையும் வலிமையும் புகழப்படுகின்றன.

மதுரைக் கலம்பகம்-

உருகிய மனமொடு தழுவி ஓர் கிழவி
   கருந்துணி மேலிடு வெண்பிட்டுகந்தன
உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது
   சுமந்தொரு கூடை மண் உந்திச் சொரிந்தன
உருவிய சுரிகையொடு எதிர்வரு செழியன்
   பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன
 தமிழ் மதுரையில் ஒரு குரியை மருவு
   சவுந்தர மாறன் தடம் பொற் புயங்களே.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.