மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பதினொன்றாம் திருமுறையில் 25-ம் திருமுறையாக அமைந்த மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியம். அதிராவடிகளால் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவையை இயற்றியவர் அதிராவடிகள். இவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நூல் அமைப்பு
மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை மும்மணிக்கோவையின் இலக்கணத்திற்கேற்ப அகவற்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என மூன்று வகைப் பாடல்களால் மாற்றி மாற்றி கோக்கப்பட்ட மாலையைப் போன்று அமைந்தது. முப்பது பாடல்களைக் கொண்டது. இந்நூலின் ஏடுகள் சிதைந்திருந்ததால் 24 முதல் 30 வரையுள்ள பாடல்கள் ஏழும் கிடைக்கவில்லை.
பிள்ளைத்தமிழ் நூல்களைப்போல மூத்தபிள்ளையார் சப்பாணி கொட்டுதல், செங்கீரையாடுதல் போன்ற இளமைப்பருவ நிகழ்வுகள் பாடப்பட்டுள்ளன. விநாயகர் உலகைச் சுற்றி வந்து தந்தையிடம் மாம்பழம் பெற்ற கதை, சிவனின் தேருடைய அச்சை முறித்தது போன்ற புராணச் செய்திகள் கூறப்படுகின்றன.
பாடல் நடை
அகவல்
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே. (1)
வெண்பா
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி
கொட்டும் -கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி. (2)
கட்டளைக் கலித்துறை
மணிசிந்து கங்கைதன் மானக்
குருளையை வாள்அரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்
கிளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத்
தைத்தொடர்ந் தோர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித்
தோர்க்கில்லை பேதுறலே. 3
உசாத்துணை
- மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை-சைவம்.ஆர்க்
- பன்னிரு திருமுறை- பதிப்பாசிரியர்: இராச வசந்தகுமார், ஆர்கைவ் வலைத்தளம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.