ஜம்பை

From Tamil Wiki
Revision as of 14:38, 29 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜம்பை கல்வெட்டு ஜம்பை தமிழக வரலாற்றிலும் சமண வரலாற்றிலும் மிகவும் குறிப்பிடப்படும் தொல்லியல் மையம். இது தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து ஏறத்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜம்பை கல்வெட்டு

ஜம்பை தமிழக வரலாற்றிலும் சமண வரலாற்றிலும் மிகவும் குறிப்பிடப்படும் தொல்லியல் மையம். இது தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து ஏறத்தாழ முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தொண்டை நாட்டிலுள்ள சமணப்பள்ளிகளுள் காலத்தால் முந்தியவற்றுள் இதுவும் ஒன்று.

தொல்லியல் சான்றுகள்

ஜம்பை ஊருக்கு வெளியே ஜம்பை மலை என்ற இரண்டு பாறைக்குன்றுகள் உள்ளன. இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சிறிய நிலப்பரப்பில், பழமையான பானை ஓடுகளும், இரும்புத் துண்டுகளும் காணப்படுகின்ரன. மலைக்குக் கீழே ராஷ்ட்ரகூடர் காலத்து ஜெயஸ்தா தேவி (தமிழில் மூதேவி) சிலையும், அருகில் ராஷ்ட்ரகூடர் மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டும் காணப்படுகின்றன. இதற்கு அருகில் ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது.

இரண்டு குன்றுகளில் தெற்கில் காணப்படும் குன்றிற்கு உள்ளூரில் தாசிமடம் என்று பெயர். இங்குதான் பொயுமு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டும், சமண முனிவர்கள் பயன்படுத்திய உரல் குழியும் இருக்கிறது. வடக்கில் இருக்கும் குன்றில் உள்ள குகையில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. ஊரில் இருக்கும் ஜம்புனாதர் கோவிலிலும் ராஷ்ட்ரகூடர் காலத்து சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஆலம்பாடி பாறை ஓவியங்கள் கி மு 3000 ஐச் சேர்ந்தவை. பெரும்பாலும் பல்லி, பாம்பு போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. உணவுக்குழாய் போன்ற உடலின் உள்ளுறுப்புகளும் காணப்படுவதால், இவற்றை X- ரே ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு மனித முகமூடி போன்ற அமைப்பும் காணப்படுகிறது.

ஜம்பை கல்வெட்டு

ஜம்பை ஊரின் கிழக்குப் பகுதியில் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வு மாணவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு தமிழ் சங்ககாலத்தைய தொல்லியல் சான்றுகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. 1981ல் தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குனராக இருந்த ஆர்.நாகசாமி இக்கல்வெட்டை ஆய்வுசெய்து தரவுகளுடன் பொருத்தி வெளியிட்டார். சங்கலாக நூலான புறநானூற்றில் பேசப்படுபவனும் தகடூர் நாட்டின் அரசனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி சமணக்குகை ஒன்றை சீர்ப்படுத்தி கொடையளித்ததை சொல்லும் கல்வெட்டு இது

இக்கல்வெட்டில் ‘“சதிய புதோ அதியமான் நெடுமானஞ்சி ஈத்தபாழி,” என்று சொல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் அதியமான் நெடுமானஞ்சில் ‘சதிய புத்தோ’(சத்தியபுத்திரன்) என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். கர்நாடக மாநிலத்தில் பிரம்மகிரி என்னுமிடத்தில் காணப்பெறும் மௌரியப் பேரரசன் அசோகனது சாசனம் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்திய புத்திரர் முதலிய தென்னக அரசபரம்பரையினரைக் குறிப்பிடுகிறது.இந்தக் கல்வெட்டு ஆராயப்படும் வரை அசோகர் கல்வெட்டிலுள்ள சத்யபுத்திரர் என்பது சாதவாகனர்களை குறிக்கிறது என்று நம்பப்பட்டது. சங்ககாலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் எவையும் கிடைக்கவில்லை என்று தொடர்ச்சியாக ஆய்வுலகில் சொல்லப்பட்டுவந்தது. ஆர்.நாகசாமி உறுதியான சான்றுகள் வழியாக அவ்விரு ஐயங்களையும் நீக்கினார்.

உசாத்துணை

R. Nagaswamy, “Asoka and the Tamil country-A link”, Express Magazine, 6-12-81

ஜம்பை ஓர் ஆய்வு கா செல்வராஜ்

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/jumbi.htm

Corpus Inscriptionum Indicarum, vol. I, p. 186

https://www.jeyamohan.in/23882/

https://youtu.be/39kMG1oggB4

https://youtu.be/Lbz5LM_mDpA

https://youtu.be/GE99K3Lkt8c