கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார்
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் (கோடகநல்லூர் ராமஸ்வாமி ஸ்ரீநிவாச ஐயங்கார்) (ஏப்ரல் 17, 1908 - ஏப்ரல் 15, 1999) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர். கல்லூரிப் பேராசிரியராகவும், ஆந்திரப் பல்கலையின் துணை வேந்தராகவும் பணியாற்றினார். முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவராக அறியப்படுகிறார். இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், ஏப்ரல் 17, 1908-ல், அன்றைய இராமநாதபுரம் (இன்றைய விருதுநகர்) மாவட்டத்தில் உள்ள சாத்தூரில், பி. ராமஸ்வாமி ஐயங்கார் – லக்ஷ்மி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் பள்ளிக் கல்வி கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1928-ல் இளங்கலை பட்டம் பெற்றார். 1932-ல் முதுகலை பட்டம் பெற்றார். ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களைக் குறித்து மிக விரிவாக ஆராய்ந்து ஆந்திரப் பல்கலைக்கழகத்திலிருந்து முது முனைவர் (டி.லிட்) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் மணமானவர். மனைவி: பத்மாசினி. மகன், பேராசிரியர் எஸ். அம்பிராஜன் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர். மகள் முனைவர் பிரேமா நந்தகுமார், தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பேச்சாளர், எழுத்தாளர், திறனாய்வாளர்.
கல்விப் பணிகள்
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் இலங்கை வல்வெட்டித்துறை சித்தமன்னார வித்தியாலயத்தில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெல்காமில் உள்ள லிங்கராஜ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1944-ல், பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். 1947-ல், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். 1966-ல், ஆந்திரப் பல்கலையின் துணை வேந்தரானார். அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள சில கல்லூரிகளின் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார். லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்,
இலக்கிய வாழ்க்கை
இளம் வயது முதலே கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். அவை குறித்துப் பல கட்டுரைகளை, நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். முதன்முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதி ஆவணப்படுத்தினார். தனது ஆங்கிலக் கட்டுரைகளுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் கடல் கடந்தும் மதிக்கப்பட்டார். உலக அளவில் ஷேக்ஸ்பியரின் 400-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம், 1964-ல், இங்கிலாந்தில் நடைபெற்றபோது, அதற்காக ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஆங்கில அறிஞர் கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார். இந்திய அமெரிக்க இலக்கியங்களை ஒப்பிட்டு கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் எழுதியிருக்கும் ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன.
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் உலக அளவில் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். ஆங்கிலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
மொழிபெயர்ப்பு
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் பசவேஸ்வராவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆதிசங்கரர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், கிருஷ்ண கீதம் போன்ற கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்காரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. ஷேக்ஸ்பியரின் நாடகமான ‘மாக்பெத்’தைத் தமிழில் மொழிபெயர்த்தார். சுந்தர காண்டத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ’The Epic Beautiful’ என்ற தலைப்பில் வெளியானது.
திறனாய்வு
கே.ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், இந்திய ஆங்கில இலக்கிய ஆய்வில் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவரது பெரும்பாலான இலக்கியத் திறனாய்வுகள், விமர்சனங்கள் பிரிட்டிஷ் எழுத்தாளர்களைப் பற்றியதாக அமைந்தது. ஷேக்ஸ்பியர் முதல் டி.எஸ். எலியட் வரை பலரைப் பற்றி எழுதினார். லிட்டன் ஸ்ட்ராச்சி, ஜி.எம். ஹாப்கின்ஸ், ஃபிராங்கோயிஸ் மௌரியாக் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராய்ந்து கட்டுரைகளை, நூல்களை எழுதினார். ஐரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றியும், அமெரிக்க, ஆப்பிரிக்க எழுத்தாளர்களைப் பற்றியும் பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார்.
அமைப்புச் செயல்பாடுகள்
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், சாகித்ய அகாதமி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், செயல் தலைவராகவும் பணியாற்றினார். 1969 முதல் 1978 வரை சுமார் எட்டாண்டு காலத்தில், சாகித்ய அகாடமியில் கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் ஆற்றிய இலக்கியப் பணிகள் குறிப்பிடத்தக்கதாய் அமைந்தன. சிறந்த தமிழ் இலக்கியப் படைப்புகள் பலவறை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தார்.
பொறுப்பு
ஆங்கிலம் மற்றும் மேலை மொழிகள் நிறுவனத்தின் உறுப்பினர்.
ஐக்கிய அமெரிக்க நவீன மொழிக் கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினர்
அகில இந்திய ஆங்கிலப் பாடத் திட்டக்குழு உறுப்பினர்
The Pen நிறுவனத்தின் துணைத் தலைவர்
ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம டெல்லிக் கிளையின் தலைவர்
சாகித்ய அகாடமி உறுப்பினர்
சாகித்ய அகாடமி துணைத்தலைவர்
சாகித்ய அகாடமி செயல் தலைவர்
பதிப்பு
கே.ஆர். ஸ்ரீநிவாஸ ஐயங்கார், பல நூல்களின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கே.ஆர். ஸ்ரீநிவாஸ ஐயங்காரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ஆங்கிலக் கவிதைகள் நூலின் தொகுப்பை வெளியிட்டது.
விருதுகள்
’ஸ்ரீ அன்னை: தி க்ரோனிகல் ஆஃப் எ மேனிஃபெஸ்டேஷன் அண்ட் மினிஸ்ட்ரி’ (On the Mother: The Chronicle of a Manifestation and Ministry) நூலுக்கு சாகித்ய அகாதமி விருது (1980)
’For the Sake of Honour’ நூலுக்கு ‘பபாசி’ விருது (1983)
காளிதாஸ் நாக் மெமோரியல் விருது (1990)
பி.சி. ராய் விருது
மறைவு
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார், ஏப்ரல் 15, 1999-ல், தனது 91-ம் வயதில் காலமானார்.
ஆவணம்
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்காரின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகள் டாக்டர் பிரேமா நந்தகுமார் எழுதினார். சாகித்ய அகாதமி நிறுவனம் அந்நூலை வெளியிட்டது.
மதிப்பீடு
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் ஆங்கில இலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, சொற்பொழிவு எனப் பல பிரிவுகளில் மிகச் சிறந்த பங்களிப்புகளை அளித்தார். கலை, இலக்கியம், இந்திய நிர்வாகம், அரசியல், பொருளதாரம், அறிவியல் எனப் பல துறைகளில் பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார். இந்தோ ஆங்கில இலக்கிய ஆய்வின் முன்னோடிகளுள் ஒருவராக அறியப்பட்டார். ஆங்கில இலக்கியப் படைப்புகள் குறித்த சிறந்த திறனாய்வாளராகவும், சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
வாழ்க்கை வரலாறு
Sri Aurobindo : a biography and a history
On the Mother: The Chronicle ofa Manifestation and Ministry
Swami Vivekananda and the Indian Renaissance
S. Srinivasa Iyengar: A Decade of Indian Politics
திறனாய்வு
Shakespear: His World and His Art
Indian Writing in English
Lytton Strachey: A Critical Study
Gerard Manley Hopkins: The Man and the Poet
François Mauriac: Novelist and Moralist
Rabindranath Tagore
The Adventure of Criticism
Dawn to Greater Dawn: Six Lectures on 'Savitri'
Introduction to the Study of English Literature (in collaboration with Prema Nandakumar)
கட்டுரை நூல்கள்
Mainly Academic: Talks to Students and Teachers
Two Cheers for the Commonwealth: Talks on Literature and Education
The Mind and Heart of Britain
A Big Change: Talks on the Spiritual Revolution and the Future Man
A New Deal for Our Universities
உரை நூல்கள்
The Epic Beautiful: A Verse Rendering of the Sundara Kanda of Valmiki Ramayana
Tryst with the Divine
Microcosmographia Poetica
Leaves from a Log: Fragments of a Journey
Australia Helix: A Spiral of Verse Sequences
Musings of Basava (in collaboraraion with S. S. Basawanal)
பதிப்பு
Sri Aurobindo: A Centenary Tribute
Guru Nanak: A Homage
Indian Literature since Independence
Essays and Addresses of C. R. Reddy
Indian Writers in Council
Drama in Modern India
Asian Variations in Ramayana
உசாத்துணை
K.R. Srinivasa Iyengar By Prema Nandakumar, Sahitya Akademi, Edition: 2008
கே. ஆர். ஸ்ரீநிவாச ஐயங்கார் நூல்கள், அமேசான் தளம் https://www.amazon.in/Books-K-R-Srinivasa-Iyengar/s?rh=n%3A976389031%2Cp_27%3AK.R.Srinivasa+Iyengar
தென்றல் இதழ் கட்டுரை http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15598