ஊழியன் (இதழ்)

From Tamil Wiki
ஊழியன் இதழ் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

ஊழியன் (இதழ்) (1920 - 1940) காலகட்டத்தில் வெளியான இதழ். இவ்விதழுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, தமிழர்கள் கடல் கடந்து வாழும் வாழும் அயல் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, சைகோன், இலங்கை, பர்மா ஆகியவற்றிலும் வாசகர்கள் இருந்தனர்.

வெளியீடு

1920-ல் சொ. முருகப்பா அவர்களால் ‘தன வைசிய ஊழியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் பெயர்மாற்றம் பெற்று ‘ஊழியன்’ ஆனது. சொ. முருகப்பா ஆசிரியராகவும், ராய. சொக்கலிங்கன் துணையாசிரியராகவும் இருந்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் சொ. முருகப்பா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியதால் ராய. சொக்கலிங்கன் ஆசிரியரானார். துணை ஆசிரியராக நெல்லையைச் சேர்ந்த 'சிவம்' பணியாற்றினார்.

பெயர் மாற்றம்

1925-ல் ’ஊழியன்’ என பெயர் மாற்றம் பெற்றது. இதழின் பெயர் மாற்றம் குறித்து ராய. சொக்கலிங்கன், "ஒரு அளவுடைய கூட்டத்தாருக்குச் (ஊழியன் கம்பெனி லிமிடெட்) சொந்தமானதும், நாற்பதாயிரம் மக்கள் எண் கொண்ட ஒரு வகுப்பிற்கு மட்டும் வெளி வந்த இதழ் பலகோடி மக்களின் ஊழியன் எனக் குறிக்கும் விரிந்த பெயர் தாங்கி வெளிவருவதற்குக் காரணமாகவிருந்த ஐந்தாவதாண்டு நல்லாண்டாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளடக்கம்

அரசியல் சமூக விடுதலைக்காகக் குரல் கொடுத்தது. காந்தியையும், காந்தியத்தையும் போற்றிப் பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின. பெண் கல்வி ஆதரவு, விதவை மறுமணம் ஆதரவு, பால்ய விவாக எதிர்ப்பு போன்றவை குறித்த கருத்துக்கள் இடம் பெற்றன. காந்தியம், அரசியல், அறிவியல், இலக்கியம், வணிகம், வரலாறு, பொது அறிவு, திரைப்படம், தொழிலாளர் நலம், தொழில் முன்னேற்றம், விளையாட்டு, கலைத்துறை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழ் வெளிவந்தது. சினிமா விளம்பரங்களும் , சினிமா விமர்சனங்களும் தொடர்ந்து வெளியாகியிருக்கின்றன.

ஊழியனில் துணை ஆசிரியராக இருந்த 'சிவம்' அவர்களின் சிறுகதைகளும், தொடர்கதைகளும் தொடர்ந்து இவ்விழதில் வெளியாகின. புதுமைப்பித்தன் இவ்விதழில் சில காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 'அகல்யை' போன்ற அவரது சிறுகதைகள் இவ்விதழில் தான் வெளியாகின. 'சொ.வி', 'சொ.விருத்தாசலம்', 'நந்தன்', 'கூத்தன்’, 'மாத்ரு' போன்ற பல புனை பெயர்களில் அவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

படைப்பாளிகள்

  • சிவம்
  • வ.உசிதம்பரம் பிள்ளை
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • எஸ்.வையாபுப்பிள்ளை
  • ரா.பி.சேதுப்பிள்ளை
  • டி.எஸ்.அவினாசிலிங்கம்
  • பொ. திருகூடசுந்தரம் பிள்ளை
  • கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
  • நாமக்கல் கவிஞர்
  • ம.சிங்காரவேலு செட்டியார்
  • சர்தார் அ.வேதரத்தினம் பிள்ளை
  • அசிதம்பரநாதச் செட்டியார்
  • ஆக்கூர் அனந்தாச்சாரி
  • நீலாவதி அம்மையார்
  • டிஎஸ். குஞ்சிதம்
  • ஈ.த.ராஜேஸ்வரி அம்மாள்
  • ப.ஜீவானந்தம்

மாற்றம்

காரைக்குடியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஊழியன் இதழ், 1934 முதல் சென்னையிலிருந்து வெளிவந்தது. இதழின் வடிவமும் மாறியது. 46 பக்கங்களை உடையதாக, 'தேசிய சித்திர வாரப் பத்திரிகை' என்ற குறிப்பை முகப்பில் தாங்கி வெளிவரத் தொடங்கியது. அதற்கேற்ப அட்டையில் வண்ணப் படங்களும், இதழின் உள்ளே நிழற் படங்களும் இடம்பெறத் தொடங்கின. 1938 ல் இதழ் மீண்டும் காரைக்குடியிலிருந்து அச்சிடப்பட்டது.

நிறுத்தம்

1940-ல் இவ்விதழ் நின்று போனது.

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.