கரித்துண்டு

From Tamil Wiki
கரித்துண்டு

கரித்துண்டு (1953 ) மு.வரதராசன் எழுதிய நாவல். ஆண்பெண் உறவு, கற்பு ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகளை விவாதிக்கும் நாவல் இது. ஆசிரியரின் கருத்துக்கள் கதைமாந்தர் உரையாடல் வழியாக நேரடியாக முன்வைக்கும் பாணி கொண்டது.

எழுத்து வெளியீடு

மு. வரதராசன் இந்நாவலை 1953ல் எழுதினார். அவர் நடத்திய தாயகம் பதிப்பக வெளியீடாக வந்தது

கதைச்சுருக்கம்

ஓவியர் மோகன் தன் கதையைச் சொல்வதுபோல இந்நாவல் அமைந்துள்ளது.படிப்பின் செருக்கு கொண்ட ஓவியர் மோகன் நிர்மலாவை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். மோகன் விபத்துக்கு உள்ளாகிறார். அவர் நிர்மலாவுடன் வாழ விரும்பவில்லை. ஆகவே நிர்மலா அவரை பிரிந்து பம்பாய் சென்று பேராசிரியர் கமலக்கண்ணன் என்பவரைச் சந்திக்கிறாள். அவரோடு திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறாள். சென்னை வரும்போது தன் கணவன் மோகனைக் காண நேரிடுகிறது.

சென்னையில் ஓவியர் மோகன் வறுமையை ஏற்றுக்கொண்டு முடவராய் வாழ்கிறார். வண்ணப் பொடிகளாலும், ஓவியக் கோலாலும் ஓவியம் தீட்டிய மோகன், கடைசியில் கரித்துண்டால் ஓவியம் தீட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். சின்னக் குடிசையில் ஏழைப் பெண்ணான பொன்னியுடன் வாழ்க்கை நடத்துகிறார். அவரிடம் இருந்த படிப்பின் செருக்கு அகன்றிருக்கிறது. நிர்மலா கமலக்கண்ணனை விட்டுப் பிரிகிறாள்.

இந்நாவல் உதிரி நிகழ்வுகளால் ஆனது. ஆசிரியர் குரலாகவும் கதைமாந்தர் குரலாகவும் ஒழுக்கம், கற்பு, ஆண்பெண் உறவின் நுட்பங்கள் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன “கரித்துண்டில்‌ வரும்‌ ஓவியக்கலைஞர்‌ எனக்கு விருப்பமானவர்‌தாம்‌. உயிருள்ள ஒரு மனிதர்‌. அவரைத்‌ தொடர்ந்து அவர்‌ வீட்டுக்‌கெல்லாம்‌ போயிருக்கிறேன்‌; பழகி இருக்கிறேன்‌. அவரை வங்காளி ஆக்கி இருப்பது என்‌ கற்பனை” என்று மு.வ சொன்னதாக முனைவர் இரா.மோகன் மு.வ.நினைவுமலர் கட்டுரையில் பதிவுசெய்கிறார்.

இலக்கிய இடம்

க.நா.சுப்ரமணியம் கரித்துண்டு நாவலை அவருடைய புகழ்பெற்ற படித்திருக்கிறீர்களா? என்னும் நூல் பட்டியலில் சேர்த்திருக்கிறார். தமிழ்ச்சமூகம் ஆண் பெண் உறவின்மீதான மரபான பார்வைகளை மறுபரிசீலனை செய்ய தொடங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்ட கரித்துண்டு நவீனச் சூழலில் ஆண்பெண் உறவு, முதலாளித்துவத்துக்கும் அதற்குமான உறவு ஆகியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் விவாதிப்பதனால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது.

எழுத்தாளர் அகிலன் ”மு.வ. வின்‌ “கரித்துண்டு” என்ற நாவலைச்‌ சமுதாயக்‌ கண்ணோட்டம்‌ கொண்ட நாவல்‌ என்று முறையில்‌: நாம்‌ காணலாம்‌. அதில்‌ வரும்‌ குடும்பச்‌ சிக்கலுக்கும்‌ சமுதாயப்‌ போக்‌கிற்கும்‌ நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மு.வ. வின்‌ நடையில்‌ ஒரு புதுமை, பாத்திரங்களின்‌ பெயர்களில்‌ மட்டுமல்லாமல்‌ படைப்பிலும்‌ புதுமை, அவருடைய கதைக்‌ கருவிலும்‌ புதுமை-இவை என்னைக்‌ கவர்கின்றன. பல எழுத்தாளர்கள்‌ பார்த்த இதே சென்னையைத்தான்‌ அவரும்‌ பார்த்திருக்கிறார்‌. ஆனால்‌ அவர்‌ ஏழை எளியவர்கள்‌,சமுதாயத்‌தால்‌ புறக்கணிக்கப்பட்டவர்கள்‌ வாழும்‌ குடிசைகளையும்‌ குப்பங்களையும்‌ இரக்கத்தோடு பார்த்திருக்கிறார்‌ என்பது தான்‌ அவர்தம்‌ தனிச்‌சிறப்பு” என்று குறிப்பிடுகிறார் (மு.வ.நினைவுமலர் கட்டுரை)

விமர்சகர் ஆர்.வி ’மு.வ.வின் பலம், பலவீனம் இரண்டுமே அவரிடமிருக்கும் வாத்தியார்த்தனம்தான் என்று நினைக்கிறேன். அவர் எதையும் படிப்பவனின் சிந்தனைக்கு விடுவதில்லை. கடைசி சொட்டு வரை நமக்கு புகட்டி விடுகிறார்’ என இந்நாவல் பற்றிச் சொல்கிறார்.

உசாத்துணை