அகல்விளக்கு

From Tamil Wiki
Revision as of 13:58, 3 June 2022 by Jeyamohan (talk | contribs)
அகல்விளக்கு

அகல்விளக்கு (1958) மு.வரதராசன் எழுதிய நாவல். வேலு, சந்திரன் என இரு கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் வழியாக வாழ்க்கையின் வாய்ப்புகள் வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறு பாதைகளில் கொண்டுசெல்வதை சித்தரிக்கிறார்.

எழுத்து வெளியீடு

மு. வரதராசன் இந்நாவலை 1958ல் எழுதினார். அவருடைய தாயகம் பதிப்பகம் வெளியிட்டது

கதைச்சுருக்கம்

சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. அழகும் அறிவும் உடைய சந்திரன் அதனால் செருக்கடைந்து பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி அழிகிறான். அறிவும் அழகும் குறைந்தவனாயினும் வேலய்யனின் வாழ்க்கை அல்லல்கள் அற்று சீராகச் செல்கிறது. தொழுநோய் தொற்றிய சந்திரன் வாழ்க்கையின் உண்மைகளை உணர்ந்துகொண்டு வேலய்யனிடம் சொல்லும் சொற்களே நாவலின் கருப்பொருள். “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும், அறிவையும் அப்போது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்கள், என்ன பயன்? வர வர எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது, மங்கிவிட்டேன், நீதான் நேராகச் சுடர்விட்டு, அமைதியாக எரியும் ஒளிவிளக்கு"

விருது

இந்நாவலுக்கு 1961 ல் சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டது

இலக்கிய இடம்

அகல்விளக்கு ஒழுக்கத்தின் தேவையை, வாழ்க்கையின் அருமையைப் பற்றிய ஆசிரியரின் கருத்தை வைத்து புனையப்பட்ட நீதிபோதனைக் கதை. கதைமாந்தரின் சொற்கள் வழியாகவே ஆசிரியரின் கருத்துக்கள் கூறப்படுகின்றன. கதாபாத்திரங்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட உதாரண வடிவங்கள்.

உசாத்துணை