under review

அறிவுடை நம்பி

From Tamil Wiki
Revision as of 09:53, 28 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)

அறிவுடை நம்பி சங்க காலப் புலவர். பாண்டிய மன்னர். இவர் எழுதிய பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

அறிவுடை நம்பி கடைச்சங்க கால பாண்டிய மன்னர். பாண்டியன் அறிவுடை நம்பி என நூல்களில் உள்ளது. ஆண்களில் சிறந்தவரை ‘நம்பி’ என்பர். பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இவருடைய காலத்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய நான்கு பாடல்கள் புறநானூறு(188), அகநானூறு(28), குறுந்தொகை(230), நற்றிணையில்(15) உள்ளன. புறநானூற்றின் 188-ஆவது பாடல் பிள்ளைப் பேற்றின் இனிமையைக் கூறுகிறது. பிற மூன்று பாடல்களும் அகத்துறைப்பாடல்கள். இவரைப் பற்றி பிசிராந்தையார் புறநானூறு 184-ஆவது பாடலில் பாடினார். ஒரு அரசன் எவ்வாறு வரிவசூல் செய்ய வேண்டுமென இப்பாடல் கூறுகிறது.

பாடல் நடை

  • புறநானூறு 188

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே!

  • அகநானூறு 28

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
இருவி தோன்றின பலவே. நீயே,
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
 கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி,
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.

  • குறுந்தொகை 230

அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீர் அத்தம்
சின்னாள் அன்ன வரவறி யானே.

  • நற்றிணை 15

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு,
நீ புணர்ந்து அனையேம் அன்மையின், யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே!

உசாத்துணை


✅Finalised Page