பர்ட்டன் ஸ்டெயின்

From Tamil Wiki
Revision as of 16:20, 2 June 2022 by Jeyamohan (talk | contribs)

பர்ட்டன் ஸ்டெயின் (Burton Stein) (1926 – April 26, 1996) இந்தியவியல் ஆய்வாளர். இந்தியவரலாறு, தமிழக வரலாறு பற்றிய ஆய்வுகளைச் செய்தவர். சோழர் கால நிலவுடைமை முறை மற்றும் சாதியமைப்பு முறை பற்றிய ஆய்வுகளுக்காக புகழ்பெற்றவர்

இளமை, கல்வி

பட்டன் ஸ்டெயின் 1926ல் அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் பிறந்தார். இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்டார். இல்லினாய்ஸ் பல்கலையின் கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டமையால் பட்டப்படிப்பை முடிக்காமலேயே முதுகலைப் படிப்புக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டார். சிக்காகோ பல்கலையில் 1954ல் முதுகலைப் படிப்பை முடித்தபின் ராபர்ட் கிரேன் வழிகாட்டலில் தன் முனைவர் பட்டப்படிப்பை 1957ல் முடித்தார். திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பொருளியல் அடிப்படைகள் பற்றியது அவருடைய முனைவர் பட்ட ஆய்வு

தனிவாழ்க்கை

பர்ட்டன் ஸ்டெயின் டோரதியை 1966ல் மணந்தார். டோரதி ஸ்டெயின் (Dorothy Stein ) தொடக்ககால கணிப்பொறி நிரலெழுத்தாளர்களில் ஒருவர். உளவியலாளர், எழுத்தாளர். அடா என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். அடா லவ்லேஸ் (Ada Lovelace) பரவலாக நம்பப்படுவதுபோல கணிப்பொறியை உருவாக்கிய சார்ல்ஸ் பாபேஜுக்கு உதவியாக இருக்குமளவுக்கு கணிப்பொறியை அறிந்தவரோ, கணிதவியலாளரோ அல்ல என வாதிடும் நூல் இது

கல்வி, ஆய்வுப்பணிகள்

முனைவர் பட்டம்பெற்றபின் பர்ட்டன் ஸ்டெயின் மினசோட்டா பல்கலையில் ஆசிரியராக பணியமர்ந்து 1965 வரை நீடித்தார். பின்னர் ஹவாய் பல்கலையில் ஆசிரியராக 1983 வரை 17 ஆண்டுகள் பணியாற்றினார். பர்ட்டன் ஸ்டெயின் சிகாகோ பல்கலை, பென்சில்வேனியா பல்கலை, வாஷிங்டன் பல்கலை, கலிபோர்னியா பல்கலை, பெர்க்லி பல்கலை ஆகியவற்றிலும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். லண்டன் பல்கலையின் கீழைத்தேய மற்றும் ஆப்ரிக்க ஆய்வு மையத்தின் (School of Oriental and African Studies ) ஆய்வுப்பேராசியராக லண்டனில் பணியாற்றினார்.

பர்ட்டன் ஸ்டெயின் இந்தியவியல் மற்றும் தெற்காசிய ஆய்வுகளுக்கான ஏராளமான கருத்தரங்குகளில் பங்கெடுத்தார். தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவெளியிட்டுக்கொண்டிருந்தார். தெற்காசிய ஆய்வுகள் மற்றும் இந்தியவியல் ஆய்வுகளில் முதன்மையான வழிகாட்டுநராக அடுத்த தலைமுறை ஆய்வாளர்களால் கருதப்பட்டார்