under review

64 சிவவடிவங்கள்: 60-மச்ச சம்ஹார மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 10:33, 15 October 2024 by Logamadevi (talk | contribs)
மச்ச சம்ஹார மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று மச்ச சம்ஹார மூர்த்தி

வடிவம்

64 சிவ வடிவங்களில் அறுபதாவது மூர்த்தம் மச்ச சம்ஹார மூர்த்தி. திருமாலின் அவதாரமாகிய மீனை அழித்ததால் சிவபெருமானுக்கு மச்ச சம்ஹார மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. (மச்சம் = மீன்)

தொன்மம்

சோமுகாசுரன் என்ற ஓர் அசுரன், மூன்று உலகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தைச் சிவனிடமிருந்து பெற்றான். அந்த ஆணவத்தில் பிரம்மாவிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலுக்குள் சென்று மறைந்தான். பிரம்மா திருமாலிடம் சென்று நடந்தவற்றை கூறினார். உடன் திருமாலும் பெரிய மீன் வடிவத்தை எடுத்தார்.

மீன் கடலினுள் பாய்ந்து சென்று சோமுகாசுரனைத் தேடியது. தேடித் தேடிக் கடலைக் கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனைத் துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்து பறித்த வேதங்களை மீண்டும் பிரம்மாவிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகாசுரனின் உடலிருந்து வெளிவந்த ரத்தம், சமுத்திரத்தைச் செந்நிறமாகக்கியது. அந்த மீன் கடலில் இடம் கொள்ளாமல் திசை நான்கிலும் பரவியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் தின்று அழித்தது. கடல் விலங்கினங்கள் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாகச் சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனைப் பிடிக்க வேண்டி, வலையுடன் மீனவர் போல் உருமாறி, கடலில் அம்மீனிற்குத் தக்கவாறு உருவம் கொண்டு நின்றார்.

பின் வலைவீசி அந்தப் பெரிய மீனைப் பிடித்தார். அதன் வீரியம் முழுமையும் அடக்குவதற்காக அதன் கண்கள் இரண்டையும் பறித்துத் தனது மோதிரத்தில் பதித்துக் கொண்டார். கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் உண்மையை உணர்ந்தார். ஆணவம் அழிந்தார். சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டித் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்டார். சிவனும் திருமாலை மன்னித்து அவ்வாறே தந்து ஆசி கூறினார்.

தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த மீனை அழிக்கச் சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி.

வழிபாடு

அதர்வண வேதம் மீனுருவில் அட்டகாசம் செய்த திருமாலை அடக்கச் சிவபெருமான் கொக்கு வடிவம் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது. மச்ச சம்ஹார மூர்த்தியை காஞ்சிபுரத்தில் தரிசிக்கலாம். அங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர். இவருக்கு வில்வார்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாய் அன்று அளித்து, எள் தீபமிட்டு வழிபட, தொழில் விருத்தியடையும், புதியதொழில்கள் தோன்ற ஏதுவாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

உசாத்துணை


✅Finalised Page