first review completed

கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர்

From Tamil Wiki
Revision as of 14:41, 15 March 2022 by Logamadevi (talk | contribs)

கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர் (1887 - ஜனவரி 13, 1955) அதிகம் அறியப்படாத ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

குப்புஸ்வாமி நாதஸ்வரக் கலைஞர் கோட்டூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை - செங்கம்மாள் ஆகியோரின் மகனாக 1887-ஆம் ஆண்டு பிறந்தார்.

தந்தை கோட்டூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடம் முதல் இசைப் பயிற்சி பெற்றார். நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையிடம் பின்னர் கற்றார்.

தனிவாழ்க்கை

குப்புஸ்வாமி பிள்ளைக்கு சீதையம்மாள், மாரியம்மாள், சுந்தரம்மாள் (கணவர்: கோட்டூர் ராமஸ்வாமி பிள்ளை), நீலாம்பாள் என நான்கு தங்கையர். நாரயணஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்), முருகையா பிள்ளை (நாதஸ்வரம்), ஸ்வாமிநாத பிள்ளை (நாதஸ்வரம்) என்ற மூன்று தம்பியரும் இருந்தனர். சீதையம்மாள், மாரியம்மாள், நீலாம்பாள் மூவருமே திருவாரூர் சுப்பிரமணிய நாதஸ்வரக் கலைஞரின் மனைவியர்.

களப்பாள் வீராஸ்வாமி பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரின் மகள் பெரியநாயகம் அம்மாளை மணந்தார். இவர்களுக்கு தக்ஷிணாமூர்த்தி (நாதஸ்வரம்), கிருஷ்ணமூர்த்தி (வியாபாரம்), நாராயணஸ்வாமி (நாதஸ்வரம்) என மூன்று மகன்கள், தங்கம் என ஒரு மகள்.

இசைப்பணி

கோட்டூர் பெருமாள் கோவில் இசைப் பணியில் ஈடுபட்டிருந்தார் குப்புஸ்வாமி பிள்ளை. ஒவ்வொரு நாளும் சுமார் பதினாறு மணி நேரம் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே இருந்தவர்.

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை ராகம் வாசிப்பதிலும், சங்கதியிலும், பிருகாவிலும், விரலடியிலும் தலைசிறந்து விளங்கினார். வீதியுலா முடிந்து பெருமாள் கோபுர வாயிலை அடைந்ததும் ‘திருவந்திக் காப்பு’ என்னும் வழிபாடு நடக்கும். அப்பொழுது, வெவ்வேறு ராகங்களில் சுருள் பிருகாக்கள், விரலடிகள் நிறைந்த வாசிப்பை வழங்குவார் குப்புஸ்வாமி பிள்ளை.

இவர் பெரும்பாலும் வெளியூர்க் கச்சேரிகளை ஏற்காமல் இறை சேவையிலேயே காலம் கழித்தவர். கோட்டூருக்கு அருகிலுள்ள சில கிராமங்களுக்கு மட்டும் சில சமயங்களில் சென்று வாசித்திருக்கிறார். கோட்டூர் முதலியார் பண்ணையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் குப்புஸ்வாமி பிள்ளை வாசிப்பைக் கேட்டுவிட்டு, திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையும், திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையும் மிகவும் பாராட்டி இருக்கின்றனர்.

இவர் ‘ரகுவம்ச ஸுதாம்பதி’ கீர்த்தனையை அடிக்கடி வாசிப்பார். அதில் அத்தனை வேகத்திலும் தேய்வற்ற பிருகாக்களும் விரலடிகளும் வந்து விழும். குப்புஸ்வாமி பிள்ளை வாசிக்கும் வேகத்துக்கு பல தவில்காரர்கள் ஈடுகொடுக்க முடியாது சென்றுவிட்டனர்.

மாணவர்கள்

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளைக்கு கற்பனையில் தோய்ந்த வாசிப்பில் ஆர்வம் இருந்த அளவுக்கு பிறருக்குப் பயிற்சி அளிப்பதில் ஆர்வம் இல்லை. கணேசன் என ஒரு மாணவர் நல்ல வாரிசாக உருவாகி வந்த காலகட்டத்தில், அவர் திடீரென இறந்துவிட்டார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளைக்குப் பொருத்தமாகத் தவில் வாசித்த கலைஞர் காட்டூர் முத்துப் பிள்ளை.

மறைவு

கோட்டூர் குப்புஸ்வாமி பிள்ளை ஜனவரி 13, 1955, பஹுள பஞ்சமி நாளில் காலமானார். மரணம் அடைவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் வரை நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.