under review

சுபா செந்தில்குமார்

From Tamil Wiki
Revision as of 12:01, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
சுபா செந்தில்குமார்

சுபா செந்தில்குமார் (பிறப்பு: ஜூலை 14, 1979) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். கவிதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

சுபா செந்தில்குமார் சென்னையில் ஜூலை 14, 1979 அன்று ஆர்.கிருஷ்ணமூர்த்தி – கே.இந்துமதி இணையருக்கு முதல் குழந்தையாகப் பிறந்தார். சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருபுவனம். கும்பகோணம் புனித வளனார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியை முடித்தார். வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பியலில் பட்டயப்படிப்பை முடித்தார்.

தனி வாழ்க்கை

மென்பொருள் பொறியாளரான செந்தில்குமார் நடராஜனை 1999-ல் மணந்தார். ஸ்வேதா, ஸ்ரீஷா என இரு மகள்கள்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சி பெற்ற பின் சென்னையில் ஓராண்டு பணிபுரிந்தார். தற்போது இன்போனிடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் மாணவர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும் இருக்கிறார். 2008-ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், உயிர்எழுத்து, காலச்சுவடு, புரவி, நீலம், செம்மலர், Cordite poetry review, வாசகசாலை, கனலி, அரூ, குறிஞ்சி, காற்றுவெளி, களம், தங்கமீன் ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. முதன்மையாக புதுக்கவிதைகள் எழுதி வருகிறார்.

விருதுகள்

  • சிங்கப்பூர் இலக்கிய விருது (தகுதிச்சுற்று, 2020)
  • சிங்கப்பூர் தங்கமுனை விருது 2019 & 2015
  • வாசகசாலை தமிழ் இலக்கிய விருது 2020

இலக்கிய இடம், மதிப்பீடு

குட்டி ரேவதி “கவிதையின் வழியாகத் தன் வாழ்வின் பார்வையை முழுவதும் வெளிப்படுத்தும் மூர்க்கமான சொல்வெளியைத் தன் கவிதையாகக் கண்டுள்ளார். இவரது கவிதைகளில் நுண் உணர்வுகளைச் சொற்களாக்கும் ஓர் எளிய வித்தையும் அசுரத்தனமும் ஒன்று சேர்கிறது. சொற்களை இறைக்காமல் அவற்றிற்கு ஓர் அடர்ந்த அர்த்தம் கொடுத்து கவிதை மொழியின் போக்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டென்று திருப்புகிறார். அந்த இடத்திலிருந்து அக உலகின் உண்மைகள், நொய்மைகள், கண்டறிதல்கள், பரிணாம வளர்ச்சி என எந்த வகையான தன்மையும் பளீரிடும் ஓர் ஒளிக்கற்றை போல நமக்கு வெளிப்படும். கருப்பொருளின் திடத்தன்மையோ திரவத்தன்மையோ கவிதைகளில் ஆளும் சொற்களை விடாது பற்றியிருத்தல் இவரது கவிதைகளில் மட்டுமே காணப்படும் சிறப்புத்தன்மை,” என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

  • கடலெனும் வசீகர மீன்தொட்டி (கவிதைத் தொகுப்பு, 2019)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Sep-2022, 21:02:56 IST