64 சிவவடிவங்கள்: 35-காலந்தக மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று காலந்தக மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பத்தி ஐந்தாவது மூர்த்தம் காலந்தக மூர்த்தி. மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான், எமனை உதைத்த திருக்கோலமே காலந்தகமூர்த்தி. காலன் என்றால் யமன். சம்ஹாரர் என்றால் அழித்தவர். காலனை அழித்தவர் என்று பொருளில் கால சம்ஹாரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு காலாந்தகர், காலாரி, கால சம்ஹார மூர்த்தி, காலகாலர், கூற்றினையுதைத்தவர், அந்தகனுக்கந்தகர் என்று பல பெயர்கள் உண்டு.
தொன்மம்
காசியப முனிவரின் மகன் மிருகண்டு முனிவர். அவரது மனைவி மருத்மதி. இருவரும் சிறந்த சிவபக்தர்கள். குழந்தை வரம் வேண்டி மிருகண்டு முனிவர் காசிக்குச் சென்று தவமியற்றினார்.
தவத்திற்கு மகிழந்து காட்சிகொடுத்த சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும்” என முனிவர் வேண்டினார்.சிவபெருமான், “முனிவரே, தீயகுணம், உடல் நோய், ஐம்பொறி ஊனம், அறிவின்மை இவற்றுடன் நூறு ஆண்டுகள் வாழும் பிள்ளை வேண்டுமா? அல்லது அழகு, அறிவு, நோயின்மை, எமது அருள் கொண்ட பதினாறு வயது வரை மட்டுமே ஆயுள் கொண்ட பிள்ளை வேண்டுமா?” என கேட்டார்.
முனிவரோ, “குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகனே வேண்டும்” என்றார்.
அவ்வாறே அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்தனர்.
மார்க்கண்டேயன், சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்று நினைத்து அதற்கான காரணம் என்ன என்று பெற்றோர்களிடம் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரைச் சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்கச் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாகக் கூறிக் காசிக்குச் சென்றான். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான்.
சிவபெருமான் அவனது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்ததுடன் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜபித்துக் கொண்டிருந்தான்
மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயது முடிவடையும் சமயத்தில், திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கிருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த எமதூதர்களால், மார்க்கண்டேயனின் பூஜா பலன் காரணமாக, மார்க்கண்டேயனின் அருகே கூட நெருங்க முடியவில்லை. இதை அறிந்த சித்ரகுப்தன் எமனது மந்திரியான காலனை அனுப்பினான். ஆனால், அவனாலும் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை.
இறுதியாக எமதர்ம ராஜனே மார்க்கண்டேயன் உயிரைக் கவர அங்கு வந்தான். தன் பாசக் கயிற்றினை வீசினான். அப்போது மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனைத் தன் பாசக் கயிற்றால் கட்டி இழுக்க, மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார். அதனால் எமன் இறந்து போனான்.
எமன் இறந்ததால் பூமியில் மரணம் நிகழவில்லை. பூமியின் எடை கூடிக் கொண்டே சென்றது. பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானை வேண்டினார். சிவனருளால் எமன் உயிர்த்தெழுந்தான். சிவபெருமான் மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியாக்கி ’என்றும் பதினாறு வயதுடன் வாழ்வாயாக’ என்று வரமளித்தார்.
மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான் எமனை உதைத்த திருக்கோலமே காலந்தகமூர்த்தி.
வழிபாடு
மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடவூரில (திருக்கடையூர்) காலந்தக மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் இறைவன் கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உள்ளது.
எமபயம் நீங்க இத்தல இறைவனை வணங்குகின்றனர். ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என அனைவரும் இங்குள்ள இறைவனை தினமும் வழிபடுவதாக ஐதீகம். அறுபதாண்டு நிறைவுக்கும் எண்பதாண்டு நிறைவுக்கும் பூஜைகளும், ஹோமங்களும் இங்கு செய்யப்படுகின்றன. செந்தாமரை மலர் அர்ச்சனையும், தேங்காய், மஞ்சள், பூ நைவேத்தியமும் வெள்ளிக்கிழமைகளில் அளித்து வழிபட, ஆயுள் அதிகரிக்கும், எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page