கா. கைலாசநாதக் குருக்கள்

From Tamil Wiki
யாழ். பல்கலைக்கழகத்தில் கா. கைலாசநாதக் குருக்கள்

கா. கைலாசநாதக் குருக்கள் (ஆகஸ்ட் 15,1921 - ஆகஸ்ட் 08, 2000) ஆய்வாளர், எழுத்தாளர், இலங்கை யாழ்ப்பாணத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

Kailasanaatha gurukkal.jpg

கா. கைலாசநாதக் குருக்கள் யாழ்பாணத்தில் உள்ள நல்லூரில் ஆகஸ்ட் 15,1921 அன்று பிறந்தார். இவரது நல்லூர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள், சுந்தராம்பாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

கைலாசநாதக் குருக்கள் தன் சமஸ்கிருத தமிழ் ஆரம்பக்கல்வியை சிவஸ்ரீ நா. சுப்பிரமணிய சிவாச்சாரியாரிடமும், தந்தை சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ தியாகராஜ குருக்களிடமும் பெற்றார். நல்லூர்மங்கையர்கரசி வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். யாழ்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரியில் மேற்படிப்பு பயின்றார்.

படிப்பிற்கு நடுவே வேதக்கல்வியை 1930 முதல் 1940 வரை சிவஸ்ரீ தியாகராஜ குருக்களிடமும், வைக்கம் பிரம்மஸ்ரீ சிதம்பர சாஸ்திரிகள் சுன்னாகம் பிரம்மஸ்ரீ பி.வி. சிதம்பர சாஸ்திரிகள் கோப்பாய் பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் ஆகியோரிடத்தில் பயின்றார்.

1941-ஆம் ஆண்டு ஆங்கிலம், கணிதம், தமிழ், வரலாறு அடங்கிய லண்டன் மெட்ரிகுலேஷன் பரிட்சையில் வென்றார். 1943-ஆம் ஆண்டு லண்டன் இண்டர்மீடியேட் கலைப் பரீட்சையில் தேறினார். பின் மீண்டும் 1943 - 44 ஆண்டுகளில் வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ தி.கே. சிதம்பரநாத சாஸ்திரிகளிடம் சமஸ்கிருந்த மொழியில் விஷேச பயிற்சி பெற்றார்.

1944-ஆம் ஆண்டு கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காக அனுமதி பெற்றார். 1945-ஆம் ஆண்டு சம்ஸ்கிருதம், தமிழ், பாலி மொழிகள் அடங்கிய முதலாண்டு கலைத்தேர்வு எழுதி வெற்றிப் பெற்றார். 1945 - 47 ஆண்டுகளில் சம்ஸ்கிருத சிறப்புக்கலைப் பாடமாக பேராசிரியை பெற்றி ஹைமன் தலைமையில் கற்று இரண்டாம் தர உயிர் பிரிவில் வென்றார். 1949- ஆம் ஆண்டு சம்ஸ்கிருத மொழியில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கைலாசநாதக் குருக்கள், திரிபுரசுந்தரி அம்மாள்

கைலாசநாதக் குருக்கள் பிப்ரவரி 4, 1940 அன்று சிவஸ்ரீ சாம்பசிவக் குருக்கள், சுந்தரம்பா தம்பதியரின் மகளான திரிபுரசுந்தரியை மணந்தார். மகன் பிரம்மஸ்ரீ ஸ்ரீதரன் (பிறப்பு: 1958), மகள் ஸ்ரீமதி கௌரி (பிறப்பு: 1960).

1944-ஆம் ஆண்டு தந்தை சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் மறைவிற்கு பின் நல்லூர் சிவன்கோவிலின் பிரதான குருவாகவும், தர்மக்கர்த்தாவாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். 1943 - 44 ஆண்டுகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 195- ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத துறையில் நிரந்தர் விரிவுரையாளராக பணியெற்றார்.

யாழ்பாணம் வளாகம் உருவாக்கப்பட்ட போது மொழிகள் மற்றும் கலாச்சார் கற்றல் நெறித் துறையின் முதல் தலைவரானார்.

இந்து சமய செயல்பாடு

யாழ்பாணத்தில் உள்ள நல்லூர் சிவன் கோவிலின் பிரதான குருவாக பொறுபேற்றவர் அதன் பின் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த பல யாகங்களில் தலைமை குருவாக இருந்தார். இவர் இலங்கை புட்டலம் மாவட்டத்தில் உள்ள முன்னேஸ்வரம் கோவிலில் தலைமை குருக்களாக இருந்தார். இக்கோவில் சிவனின் பஞ்ச ஐஸ்வர்ய கோவில்களில் ஒன்று.

முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தை மையமாகக் கொண்ட ஸ்ரீவிஸ்வவித்தியா பீடத்தை தொடங்கினார். சைவத் திருகோவிற் கிரியை நெறி (இந்து காலவிருத்திச் சங்கம், கொழும்பு) என்னும் நூலை எழுதினார். 1976 முதல் இக்கோவிலின் பிரதான சிவாச்சாரியார் ஆக பதவி ஏற்றார். இவ்வாண்டிலேயே காஞ்சி காமகோடி பீடாதிபதியின் அழைப்பின் பேரில் சென்னையில் நடந்த அனைத்துலக இந்து மாநாட்டில் பங்குக் கொண்டார்.

கலாச்சார அமைச்சரின் கீழ் இந்து கலாச்சார உதவிகள் ஆலோசனை குழுவில் அங்கமாக இருந்தார். கல்வி அமைச்சரின் கீழ் இந்து ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்து இந்து சமயபாடங்களுக்கான பாடபுத்தகங்கள் ஆறாம் வகுப்பு முதல் அமைவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். முதன் முதலாக யாழ்ப்பாண வளாகத்தில் உருவாக்கப்பட்ட இந்து நாகரீகத் துறையின் முதல் தலைவராகவும், பேராசிரியராகவும் நியமனம் பெற்றார். இத்துறையின் வழியாக யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் பொது/சிறப்புக் கலையில் இந்து நாகரீகத்துறை மாணவர்களையும் பட்ட மேற்படிப்பு நிலையிலும் விரிவுப்படுத்தினார்.

இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் தலைவராக நியமனம் பெற்று வீணை, வயலின், வாய்ப்பாட்டு சங்கீதம், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பாடங்களில் டிப்ளோமா வகுப்பை அறிமுகம் செய்தார்.

1978 முதல் உலக இந்து மாநாட்டில் இலங்கைக்கான செயலாளர் பதவி வகித்தார். இலங்கையில் 1979 -ல் ஸ்ரீவித்யா குருகுலம் ஆரம்பித்தார்.

ஆய்வு பணி

வடமொழி இலக்கிய வரலாறு

சமஸ்கிருத மொழி, இந்து நாகரீகம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இலங்கை மற்றும் அயல் நாடுகளில் பல கருத்தரங்குகள் நிகழ்த்தினார்.

1954-ஆம் ஆண்டு இறுதி பி.எச்.டி. பட்ட ஆய்வுக்காக இந்தியா புறப்பட்டு வந்தார். 1955 - 56 ஆண்டுகளில் பூனே பல்கலைக்கழகத்தில் பண்டர்க்கார் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் தலைமையின் கீழ் மகாபாரதம், இராமாயணம், பதினென்கீழ்கணக்கு நூல்களில் காணப்படும் சைவமதம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இவ்வாய்வு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள கோவில்களின் ஆகம ரீதியான வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடையது.

1960-ஆம் ஆண்டு பூனே பல்கலைக்கழகத்தில் இவர் சமர்ப்பித்த 1035 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை பேராசிரியர் பிலியோசா, பேராசிரியர் புகல்கார், பேராசிரியர் தண்டேகர் ஆகியோரால் மதிப்பிடப்பட்டு பி.எச்.டி டாக்டரேட் பட்டம் வழங்கப்பட்டது.

1961-ஆம் ஆண்டு தமிழ் மொழி மூலமான சமஸ்கிருத மொழியின் பொது சிறப்பு பட்டங்களுக்காக சமஸ்கிருத துறையின் கற்கை நெறி ஒருங்கிணைப்பாளர் ஆனார். 1962-ல் எழுதிய சமஸ்கிருத இலகு போதம் II வடமொழி இலக்கிய வரலாறு நூலுக்கு இவருக்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.

இவர் எழுதிய சைவத் திருகோவிற் கிரியை நெறி இந்து சைவ ஆகம நூல்களில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

மறைவு

ஆகஸ்ட் 8,2000 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் உள்ள வான்க்லாஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விருதுகள்

  • வடமொழி இலக்கிய வரலாறு நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
  • 1982-ஆம் ஆண்டு கொழும்பு கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் இவரின் கலை, இலக்கிய சேவைகளையும் சைவ மதத்திற்கு இவர் ஆற்றிய தொண்டையும் கெளரவித்து மணிவிழா எடுத்தனர்.
  • வேதாகம மாமணி (1993), இலங்கை அரசாங்க இந்து சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு.
  • கௌரவ இலக்கிய கலாநிதிப் பட்டம் (1998), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

நூல்கள்

  • சமஸ்கிருத இலகு போதம் I (1960)
  • வடமொழி இலக்கிய வரலாறு (1962, 1982)
  • சமஸ்கிருத இலகு போதம் (1962)
  • வசந்த சிவராத்திரி - கையேடு நூல் (1983)
  • சைவத் திருக்கோவிற் கிரியை நெறி (1963 (முதல் பதிப்பு, இலங்கை), 1992)
  • இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

உசாத்துணை