64 சிவவடிவங்கள்: 17-சண்ட தாண்டவ மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சண்ட தாண்டவ மூர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் பதினேழாவது மூர்த்தம் சண்ட தாண்டவ மூர்த்தி. சிவபெருமான் காளி தேவியுடன் போட்டியிட்டு நடனமாடி வென்றார். அவரது அந்தத் திருவுருவமே சண்ட தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறது.
சண்ட தாண்டவ மூர்த்தி – தொன்மம்
திருவாலங்காட்டின் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர், அங்கு தனக்கு தாண்டவ நடனத்தைச் சிவபெருமான் காட்ட வேண்டும் என்பதற்காகக் கடும் தவம் மேற்கொண்டார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள கார்கோடகன் என்னும் பாம்பு, சிவனின் திருவிரலில் விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம், பாம்பு செய்த தவறுக்காக திருக்கயிலையை விட்டு நீங்குமாறு கூறியது. பாம்பு பயந்து சிவபெருமானிடம் முறையிட்டது. உடனே சிவபெருமான், “திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்ட தாண்டவத்தை தரிசித்துப் பின்பு கயிலை வந்து சேர்வாயாக” என்று அருளினார். அவ்வாறே திருவாலங்காடு சென்ற கார்கோடகன், சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது.
அக்காலகட்டத்தில் சும்பன், நிசும்பன் என்னும் இரு அசுரர்கள் தேவர்கள், மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தனர். அதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும் சப்தமாதர்கள், சிவகணங்களுடன் சேர்ந்து ’சாமுண்டி’ என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் அழித்தார். அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளுக்கு இரத்த பீஜன் என்றொரு மகன் இருந்தான். அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அது மற்றுமொரு இரத்தபீஜனாக மாறிவிடும் என்ற வரத்தை அவன் பெற்றிருந்தான். அத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி தேவி, தன்னிலிருந்து காளி தேவியைத் தோற்றுவித்தாள். காளி அவனுடன் போரிட்டு, அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் அனைத்தையும் குடித்து அவனை அழித்தாள்.
அசுரனின் இரத்தத்தைக் குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல் ஆவேசத்துடன் வனங்களில் சுற்றி வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசம் செய்தார். இதனை அறிந்த சிவபெருமான், காளி தேவியை அடக்க எண்ணி, பைரவராகத் தோற்றம் கொண்டு காளிதேவியுடன் போர் புரிந்தார். போரில் காளி தேவி தோற்றுவிட்டார். காளி தேவி தோற்றதும், தன்னுடன் நடனப் போர் புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். இருவரும் சளைக்காமல் ஆடினர். இதுவே சண்ட தாண்டவ நடனம் எனப்பட்டது. இந்த நடனம் நடைபெறும்போது சிவனின் குண்டலம் கீழே விழுந்தது. அவர் அதனைத் தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார். ஆனால், அதனைச் செய்ய இயலாது வெட்கத்துடன் போட்டி நடனம் ஆடிய காளி தேவி தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். காளி தேவியின் ஆணவமும் அழிந்தது.
சுனந்தர், கார்கோடகன் உட்பட அனைத்து தேவர், முனிவர்களுக்கும் எல்லாக் காலமும் காணும்படி சிவபெருமான் தாண்டவக் கோலத்தை அருளினார். அந்தக் கோலமே சண்ட தாண்டவ மூர்த்தி
வழிபாடு
கும்பகோணம் கீழ்க் கோட்டத்தின் இறைவன் நாகநாதர் சண்ட தாண்டவ மூர்த்தியாகக் கோவில் கொண்டுள்ளார். இறைவி பெரியநாயகி. இங்குள்ள நடராஜ மண்டபத்திற்கு பேரம்பலம் என்று பெயர். இங்கு உள்ள மூர்த்தியை வணங்கிச் சிவத் தியானம் செய்தால் தாண்டவ ஒலி கேட்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நடனம், இசை, நட்டுவாங்கம் போன்றவ்ற்றில் நிபுணத்துவம் பெற முல்லைப்பூ அர்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் சோமவாரங்களில் அளித்து வழிபடும் வழ்க்கம் உள்ளது. இங்குள்ள மூலவரை கும்ப நீரால் அபிஷேகம் செய்து வழிபடப் பிறவிப் பயன் நீங்கும் என்பதும் ஐதீகம்.
உசாத்துணை
✅Finalised Page