64 சிவவடிவங்கள்: 9-சோமாஸ்கந்த மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஒன்பதாவது மூர்த்தம் சோமாஸ்கந்த மூர்த்தி. சிவபெருமான் உமாதேவியோடும், ஸ்கந்தப் பெருமானோடும் (முருகன்) கூடியிருக்கும் திருக்கோலமே சோமாஸ்கந்த மூர்த்தி.
தொன்மம்
அசுரனாகிய சூரபத்மனின் கொடுமைகளைத்தாள முடியாத விண்ணோர்கள் ஈசனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகங்களின் நெற்றிக் கண்களிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளியிட்டார். பொறிகளின் வெப்பத்தால் யாவரும் வருந்தினர். அன்னை பார்வதி தேவி அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று மோதிச் சிதறும் படிச் சிவனைக் காணச் சென்றார்.
சிவபெருமான் உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கங்கையில் விடச் சொன்னார். கங்கை அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது. தாமரை மலரில் இருந்த ஆறு குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின.
சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் சென்றனர். அங்குள்ள ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒன்றாகத் தூக்க, அவை ஒரே குழந்தையாயிற்று. அந்த ஒரே குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்களுடனும் இருந்தது.. ஆறு முகங்களைக் கொண்டதால் ’ஆறுமுகன்’ என்றும், வெப்பத்தினாலும், பொறிகளினாலும் தோன்றியவன் என்பதால் ’கந்தன்’ என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் கயிலை மலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றமே சோமாஸ்கந்த மூர்த்தி.
வழிபாடு
தமிழகத்தின் பல சிவாலயங்களில் சிவபெருமான் சோமாஸ்கந்த மூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருவாரூரில் உள்ள தியாகராஜர் ஆலயத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி காட்சி தருகிறார். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே சுரக்கும் அமுத தீர்த்தத்தினால் சோமாஸ்கந்தரை அபிஷேம் செய்து வழிபட உடல் வலிமை, அறிவு பெருகும்.; திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் அளிக்க குரு கிரகம் வலுப்படும்; எழுத்தாளர்களுக்குத் திறமை பெருகும் என்ற நம்பிக்கைகள் நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page