64 சிவவடிவங்கள்: 8-உமேச மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று உமேச மூர்த்தி.
உமேச மூர்த்தி – விளக்கம்
64 சிவ வடிவங்களில் எட்டாவது மூர்த்தம் உமேச மூர்த்தி. சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேசமூர்த்தி. சிவபெருமானின் இடக்கரம் வரத முத்திரை கொண்டிருக்கும்.
ஒரு சமயம் பிரம்மா, படைத்தல் தொழிலுக்காக நான்கு புதல்வர்களைத் தன்னுடைய தவ சக்தியால் உருவாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்கொள்ளாமல் தவம் செய்யச் சென்றனர். அதனால் பிரம்மா, விஷ்ணுவைக் காணச் சென்றார். விஷ்ணு, சிவபெருமான் ஒருவரே இக் குறைகளைப் போக்குபவர். அவரைக் காணலாம் என்றார். அதன்படி விஷ்ணு, பிரம்மா, பிரம்மாவின் நான்கு புதல்வர்கள் அனைவரும் சிவனைக் காண முடிவு செய்தனர்.
கயிலை மலையில் தவம் செய்துகொண்டிருந்த சிவபெருமான் இவர்கள் வருகையால் தவம் கலைந்து தன் நெற்றிக்கண்ணால் அவர்களை நோக்க, அவர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகினர். பின் சிவபெருமான் தன் தோளைப்பார்க்க அவரது சக்தி அங்கு உமாதேவி வடிவம் கொண்டு வெளிப்பட்டது. உடன் உமாதேவியை தனது இடபுறம் இருக்கச் செய்த சிவபெருமான், எரிந்து சாம்பலானவர்களை முன் போலவே படைத்தார். அவர்கள் அனைவரும் சிவனையும் உமையையும் வணங்கினர். ஈசன், அவர்கள் வேண்டிய வரங்களைத் தந்தார். உலகம் செழித்தது.
சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேச மூர்த்தியாக அறியப்படுகிறது.
வழிபாடும் பலன்களும்
கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர் சிவபெருமான் உமேச மூர்த்தியாகக் உள்ளார். உமேச மூர்த்தியை காவிரி நீரால் அபிஷேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமையும் என்பது நம்பிக்கை. திங்கள் அல்லது புதன் கிழமைகளில் செந்தாமரைப் பூவினால் அர்ச்சனையும், நெய்யன்னத்தால் நைவேத்தியமும் செய்து வழிபட கடன்கள் நீங்கும். இங்குள்ள சிவபெருமானுக்கு நன்னீர் அபிஷேகம் செய்ய அகஉடல் தூய்மையடையும் என்பது மக்கள் நம்பிக்கை.
உசாத்துணை
✅Finalised Page