64 சிவவடிவங்கள்: 7-சுகாசன மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சுகாசன மூர்த்தி
சுகாசன மூர்த்தி – விளக்கம்
64 சிவ வடிவங்களில் ஏழாவது மூர்த்தம் சுகாசன மூர்த்தி. சிவபெருமான், சுகாசன நிலையில் அமர்ந்திருக்கும் கோலமே சுகாசன மூர்த்தி. இவர் கயிலை மலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும் இருக்கின்றனர். அவர்கள், சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தார்.
அவர்கள் சென்ற பின் அன்னை உமாதேவி இறைவனைப் பணிந்து, சிவாகமங்களின் உண்மைகளை, விளக்கங்களைத் தனக்கு புரியும் படிக் கூற வேண்டும் என்று கேட்டார். அவ்வாறே ஈசன், சிவாகமங்களின் உண்மைகளையும், விளக்கங்களையும், ஐவகை பந்த பாசங்களின் நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்கினார். அவற்றை விளக்கும்போது சிவபெருமான் சுகாசன நிலையில் அமர்ந்தபடி விளக்கினார்.
சுகாசன நிலையில் அமர்ந்து சிவகாமங்களை உரைத்த காரணத்தால் சிவபெருமான் சுகாசன மூர்த்தி என்று அழைக்கப்பட்டார். இவரது கரங்களில் மானும் மழுவும் உள்ளன.
வழிபாடும் பலன்களும்
சுகாசன மூர்த்தி ஆலயம், சீர்காழியில் உள்ளது. இறைவனின் பெயர், பிரம்மபுரீஸ்வரர். சட்டைநாதர், தோணியப்பர் என்ற பிற பெயர்களும் இவருக்கு உண்டு. இறைவி: பெரியநாயகி. இங்குள்ள சுகாசன மூர்த்தியை வழிபட வியாழன் கிரகம் சார்ந்த குறைகள் நீங்கும். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் செய்ய, தொழில் செய்பவர்களுக்கு தடைகள் நீங்கும், நிர்வாகம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. யோக சித்திகள் கைகூட இப்பெருமானை பலாப்பழத்தால் அபிஷேகம் செய்கின்றனர்.
உசாத்துணை
✅Finalised Page