சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
From Tamil Wiki
சங்ககாலத்தைச் சேர்ந்த பெண்பாற் புலவர்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, நற்றிணை முதலிய சங்கத்தொகை நூல்களில் உள்ளன. பெண்பாற் புலவர்களை அகரவரிசைப்படி புலவர் கா. கோவிந்தன் அவர்கள் தொகுத்தார்.
பாடு பொருள்
காதல், காமம், வீரம், தாய்மை, ஆண் வீர மரணம் அடைந்ததை பெண்/அன்னை பெருமையாக எடுத்துக் கொள்ளல், நடுகல்லைத் தொழுது வணங்குதல், போர்க்களத்தில் காயமடைந்த வீரனைக் காப்பாற்றும் வகை, வீரமரணம் அடைந்த ஆணை நினைத்து வருந்துதல், கைம்மை நோன்பு நிலை, கணவன் மரணப்படுக்கையில் உயிர் துறக்கும் நிலை போன்றவை பாடு பொருட்களாக உள்ளன.
- ‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ - மாசாத்தியார் (புறம்:279)
- ‘உன்னுடன் நான் ஊடல் கொள்வதற்கு நீ எனக்கு என்ன உறவு?' - அள்ளூர் நன்முல்லையார்
- ‘நீ அவளிடம் செல்க, உன்னைத் தடுப்பவர் யார்?'
- 'காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே'- வெள்ளி வீதியார் (நற்றிணை 385).
- 'ஈன்று புறந்தருதல் என்னுடைய முதல் கடமை' - பொன்முடியார் (புறநானூறு 312)
பாடல் நடை
- புறநானூறு:187: ஒளவையார்
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
பெண்பாற் புலவர்கள் பாடல் வழி அறியவரும் செய்திகள்
- நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப் பாட்டிற்குட்பட்டவை
- வீரம், மறம் போன்றவை ஆணுக்கானதாக முன்னிறுத்தப்பட்ட நிலையில், வீட்டிலிருத்தல் பெண்ணுக்கானது என வரையறுக்கப்பட்டிருந்தது.
- பெண்ணின் சமூக இருப்பைப் பதிலியாக்கும் நிலையில் இரண்டாம் தரப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- போருக்காக ஆண்குழந்தைகளைப் பெற்றுத் தருவதன் மூலம் பெண் பெருமிதம் அடைய வேண்டும்
- போர்க்களத்தில் தனது ஆண்குழந்தை புறமுதுகிடாமல் போரிட்டு மடிந்தது குறித்து மகிழ்ச்சியடைந்து பெண் கண்ணீர் உகுக்கின்றாள்
- தாய்க்கும் மகனுக்கும் இடையிலான நெருக்கமான உறவினைச் சிதைத்து, மகனைப் பறிகொடுத்தல் பெருமிதம் என்ற அரசியல் உருவாக்கப் பட்டுள்ளது.
- பெண்ணின் சுயவிருப்பு வெறுப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையை மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
- போருக்குச் சென்ற கணவன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என வழிபடுவதைத் தவிர பெண்ணுக்கு வேறு வழியில்லை.
- இறந்த மனைவி குறித்து வருந்தும் கணவன் மனநிலை ஒரு பாடலில் பதிவாகியுள்ளது.
- கணவனை இழந்த பெண்ணின் சமூக வாழ்க்கை அவலமானதாக உள்ளது.
- கைம்பெண் வாழ்க்கையை விட இறந்த கணவனுடன் சேர்ந்து மடிவது மேல் எனப் பெண்கள் கருதுமளவு அன்றைய சூழல் நிலவியது.
- போரின் காரணமாகப் பெற்றோர், கணவன் என நெருங்கிய உறவினர் இழப்பு ஒருபுறம் எனில், பொருளாதார வாழ்க்கையும் சீரழிகின்றது.
சங்க காலப் பெண்பாற் புலவர்கள் அகரவரிசை
- அஞ்சி அத்தைமகள் நாகையார்
- அணிலாடு முன்றிலார்
- அள்ளூர் நன்முல்லையார்
- ஆதிமந்தியார்
- ஊண்பித்தை
- ஒக்கூர்மாசாத்தியார்
- ஓரிற் பிச்சையார்
- ஔவையார்
- கச்சிப்பேட்டு நன்னாகையார்
- கழார்க்கீரன்எயிற்றியார்
- காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
- காமக்கணி பசலையார்
- காவற்பெண்டு
- குமுழிஞாழலார் நப்பசலையார்
- குறமகள் இளவெயினி
- குறமகள் குறிஎயினி
- தாயங்கண்ணியார்
- நல்வெள்ளியார்
- பாரிமகளிர்
- பூங்கனுத்திரையார்
- பெருங்கோப்பெண்டு
- பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்
- பேய்மகள் இளவெயினி
- பொதும்பில் புல்லளங்கண்ணியார்
- பொன்முடியார்
- போந்தைப் பசலையார்
- மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
- மாற்பித்தியார்
- மாறோக்கத்து நப்பசலையார்
- முடத்தாமக் கண்ணியார்
- முள்ளியூர் பூதியார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளிவீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியார்