under review

நா. சுப்பிரமணியன்

From Tamil Wiki
Revision as of 07:06, 7 August 2024 by Ramya (talk | contribs)
நா. சுப்பிரமணியன்
நா. சுப்பிரமணியன்

நா. சுப்பிரமணியன் (டிசம்பர் 25, 1942) ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர். சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வு நூல்கள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

நா. சுப்பிரமணியன் இலங்கை முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளையில் நாகராசன், நீலாம்பாள் இணையருக்கு 1942-ல் பிறந்தார். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930-ம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள். தந்தை வழியாக சமயநூல் பயிற்சி பெற்றார். கந்தபுராணத்தை ஆழ்ந்து பயின்றவர். முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றில் தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி பயின்றார்.

பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்று 1969-ல் இளங்கலையில் சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் “ஈழத்துத் தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972-ல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் “தமிழ் யாப்பு வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985-ல் முனைவர்(Ph.D) பட்டத்தையும் பெற்றார். பொ.யு. 11-ம் நூற்றாண்டுக்குப் பின் 19-ம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு அமைந்தது.

ஆசிரியப்பணி

பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் (1970-75)காலங்களில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975-ல் துணை நூலகராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1978-ல் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார். தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற இவர் படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத்துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயற்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டவர். இவர் தமிழ் – இந்து நாகரிகம் மற்றும் நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தினார். மேலும் முதுகலை முது தத்துவமாணி(M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் செயல்பட்டார். மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

தனிவாழ்க்கை

மனைவி கௌசல்யா சுப்பிரமணியன். கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நா. சுப்பிரமணியன் இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் செயல்பட்டார். சிறுகதை, கவிதை எழுதினார். ’கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்’ என்ற நூலின் ஆசிரியர்.

’இந்தியச் சிந்தனைமரபு’ என்னும் தலைப்பில் அமைந்த இவரின் புத்தகம் கவனம்பெற்றது. இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம்-ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம்.பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் அவர்கள் முன்வைத்துள்ளது அவர்தம் சமகாலப் பார்வையைக் காட்டுகிறது.

’நால்வர் வாழ்வும் வாக்கும்’ என்ற நூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் வரலாற்றை எடுத்துரைத்துப்பது. மிகைச் செய்திகள் என சிலவற்றையும் சமயப்பூசலில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது எனச் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் திறனாய்வுகளை வெளிப்படுத்தினார். பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றினார். தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து 2002-ல் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார்.

விருதுகள்

  • ’இந்தியச்சிந்தனை மரபு’ என்ற நூலுக்காக தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியது.
  • பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை என்ற நூல் இயற்றியமைக்கு இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது.
  • முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985) இவருக்கு வழங்கப்பட்டது.
  • கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

நூல் பட்டியல்

  • ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
  • தமிழ் ஆய்வில் கலாநிதி க. கைலாசபதி
  • நால்வர் வாழ்வும் - வாக்கும்
  • கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள் (தொகுதி 1-2)
  • கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம்
  • இந்தியச் சிந்தனை மரபு
  • காலத்தின் குரல்
  • திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.