under review

ராபர்டோ டி நொபிலி

From Tamil Wiki
ராபர்ட்டோ நொபிலி
ராபர்டொ டி நொபிலி
ராபர்டோ டி நொபிலி
நொபிலி,கல்லறைப்படம்
ராபர்ட்டோ டி நொபிலி, இந்து துறவிபோல

ராபர்டோ டி நொபிலி (தத்துவ போதகர் / தத்துவ போதக சுவாமிகள்) (செப்டம்பர் 1577 - ஜனவரி 16, 1656) இயேசு திருச்சபையைச் (ஜெசுவிட்) சேர்ந்த மதபோதகர். ராபர்டோ டி நொபிலி தத்துவ போதகர் என்றும் தத்துவ போதக சுவாமிகள் என்றும் அறியப்பட்டார். அந்நிய மண்ணில் மதபோதனை செய்வதன் முன் அங்குள்ள மொழியையும் பண்பாட்டையும் கற்றறிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிக முக்கியம் என்ற கருத்தை செயல்படுத்திய முன்னோடி. ராபர்டோ டி நொபிலி தமிழ்த்துறவி போல் வாழ்ந்தவர். 40 உரைநடை நூல்களை எழுதியவர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளி.

பிறப்பு, இளமை

ராபர்டோ டி நொபிலி இத்தாலியின் டஸ்கனி மாவட்டத்தைச் சேர்ந்த மான்திபுல்சியானோ-வில் செப்டெம்பர் 1577-ல் பிறந்தார். தந்தை கவுண்ட் பியர் ஃப்ரான்ஸெஸ்கோ நொபிலி, பேபல் ராணுவம் என்றழைக்கப்பட்ட போப்பின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளின் ராணுவத்தில் பணி புரிந்தவர். தாய் கிளாரிஸ் சியோலி.

இறையியல் வாழ்க்கை

1597-ல் இயேசு திருச்சபையில் (ஜெசுவிட்) சேர்ந்து, 1603-ல் மதம் பரப்பும் பணிக்காக லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இந்தியா (கோவா) வந்தார். அதுவரை போர்த்துகீசிய கடற்படைகளால் பாதுகாக்கப்பட்ட கடற்புறப் பகுதிகளில் மட்டுமே ஐரோப்பிய பாதிரியார்கள் மதப்பணி செய்து கொண்டிருந்தார்கள். 1606-ல் தமிழகம் அனுப்பப்பட்ட நொபிலி, மதுரை வந்து அங்கு இறைப்பணியில் இருந்த கொன்சாலோ ஃபெர்னாண்டஸை சந்தித்தார். அதுவரை இந்தியாவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுபவர்களுக்கு போர்த்துகீசியப் பெயர்கள் வழங்கப்பட்டு அவர்களைப் போல உணவு, உடை அனைத்தும் மாறும்படி செய்யப்பட்டு வந்தது. இதனால் மதம் மாறியவர்களும் பரங்கிகள் (அன்னியர்கள்) என்று சமூகத்தில் விலக்கத்துடன் பார்க்கப்பட்டனர்.[1]

இந்த பண்பாட்டு ரீதியான ஆதிக்க முறையில் நம்பிக்கை இல்லாத நொபிலி சீனாவில் மேடியோ ரிச்சி என்னும் இத்தாலி பாதிரியார் கடைபிடித்த வழிமுறை சரியென எண்ணினார். அதன்படி இங்குள்ள இந்துத் துறவிகளின் வாழ்க்கை முறை, உணவு, உடை ஆகியவற்றைக் கற்று அதன்படி வாழத் தொடங்கினார். தன் பெயரை தத்துவபோதகர் எனக் குறிப்பிடத் தொடங்கினார். காவி உடையும் பூணூலும் அணிந்தார். இத்தாலிய பிராமணன் எனப்பட்டார்.

வடமொழியும் தமிழும் கற்று இரு மொழிகளிலும் உள்ள முக்கியமான மத நூல்களை கற்றறிந்தார். இது தவிர தெலுங்கிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்துகொள்வதன் வழியாகவே மதத்தை போதிக்க இயலும் என எண்ணினார். அதன் வழியாக கிறிஸ்தவம் அந்நிய மதமாக உணரப்படாமல் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பினார். 1607 முதல் அந்தணர்கள் உட்பட பலரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறிய பிறகும் பூணூலும் குடுமியும் வைத்துக்கொள்ள அனுமதித்தார்.

நொபிலியின் செயல்பாடுகள் பிற இயேசு சபையினருடைய எதிர்ப்பையும், அப்போது கோவாவின் ஆயராக இருந்த கிறிஸ்தவோவுடைய கண்டனத்தையும் பெற்றது. திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியிடம் முறையிடப்பட்டது. ஜனவரி 31,1623 அன்று வெளியிட்ட மடலில் (Apostalic Constitution-Romanæ Sedis Antistes) இவ்வழக்கங்கள் மூடத்தனமாக பிற மதங்களை பிரதிபலிக்காதவரை எத்தடையும் இல்லை என போப் அறிவித்தார்.

அதன் பிற்கு நொபிலி அதிகார பூர்வமாக மதுரை மிஷன் என்ற அமைப்பைத் துவங்கி தென் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் மதபோதனைப் பணிகளுக்காக பயணங்கள் செய்தார்.

பங்களிப்பு

தமிழ்ப் பணி

நொபிலியின் நடவடிக்கைகள் குறித்து கொன்சாலோ ஃபெர்னாண்டஸால் குற்றம் சாட்டப்பட்டு மதப் பணிகள் செய்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தமிழில் உரைநடை நூல்களை எழுதத் தொடங்கினார். ஞானோபதேசம்  அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல். நொபிலி கிறிஸ்தவ மத உரைகளில் கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை போன்ற இன்றும் புழக்கத்தில் உள்ள சொற்களை கொண்டு வந்தவர்.

தமிழில் நாற்பது உரைநடை நூல்களை இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது. இதனால் நொபிலி தமிழ் உரைநடை வரலாற்றிலும், தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வரலாற்றிலும் காலத்தால் முன்னோடியாக அறியப்படுகிறார். அதன் பிறகு இவரது வழியைப் பின்பற்றிய வீரமாமுனிவர் போல பல ஐரோப்பிய பாதிரியார்கள் தமிழ்ப் பணி ஆற்றியிருக்கிறார்கள். நொபிலி பல தமிழ் உரைநடை நூல்களை எழுதியிருந்தாலும் தமிழ் உரைநடையை சீர்செய்தவர் என வீரமாமுனிவரையே சொல்ல முடியும்.

மதப்பணி

ராபர்ட்டோ டி நொபிலியின் மதப்பணி கிறிஸ்தவத்தின் தனித்தன்மையை அழித்து இந்துப் பண்பாட்டை உள்ளே கொண்டு வருவதனால் குறைபட்டது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் பிற்காலத்தில் இரேனியஸ் ( சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்) போன்றவர்கள் அந்த வழியை கடைப்பிடித்தனர். இந்து துறவியர் போல காவி, வெள்ளை ஆடைகள் அணிவது , அடிகள் ஐயர் போன்ற பெயர்களைச் சூடிக்கொள்வது, ஆசிரமம் குருகுலம் போன்ற அமைப்புகளை நிறுவுவது ஆகியவை இவர்களின் வழிமுறை. இந்த அணுகுமுறை இன்றும் வலுவான ஒரு மரபாக நீடிக்கிறது. நொபிலி அம்மரபை தொடங்கிவைத்தவர்

மறைவு

ராபர்டோ டி நொபிலி  ஜனவரி 16, 1656 அன்று சென்னை மயிலாப்பூரில் இறந்தார்.

விவாதங்கள்

ராபர்டோ டி நொபிலி இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசு வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரசாரம் செய்தார். அவரே ஒரு நூலை உருவாக்கி அந்நூலின் ‘தொன்மையான’ சுவடியை ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். புகழ் பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞான நூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர். நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774-ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டுபிடித்தார். தொடர்ந்து பல ஆதாரபூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.[2] உர்ஸ் ஆப் (Urs App) என்னும் ஆய்வாளரின் அண்மைக்கால ஆய்வுகளில் அந்த போலிச்சுவடியை உருவாக்கியவர் நொபிலி அல்ல என்றும் ஜீன் கால்மெட் ( Jean Calmette) என்னும் ஏசுசபை துறவிதான் என்றும் சில ஆதாரங்கள் சுட்டப்பட்டுள்ளன.

படைப்புகள்

ராபர்டோ டி நொபிலி தமிழில் 40 உரைநடை நூல்களும் 3 கவிதை நூல்களும் எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர் இயற்றிய நூல்களில் சில:

  • ஞானோபதேச காண்டம்
  • மந்திர மாலை
  • ஆத்ம நிர்ணயம்
  • தத்துவக் கண்ணாடி
  • சேசுநாதர் சரித்திரம்
  • ஞான தீபிகை
  • நீதிச்சொல்
  • புனர்ஜென்ம ஆக்ஷேபம்
  • தூஷண திக்காரம்
  • நித்திய ஜீவன சல்லாபம்
  • கடவுள் நிர்ணயம்
  • அர்ச். தேவமாதா சரித்திரம்
  • ஞானோபதேசக் குறிப்பிடம்
  • ஞானோபதேசம்

சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள் (அதிலே ஒன்றுக்குப் பெயர் 'கிறிஸ்து கீதை')

தெலுங்கில் நான்கு நூல்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page