under review

சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்

From Tamil Wiki
Revision as of 23:01, 22 July 2024 by Navingssv (talk | contribs)
சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்
சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன் & இடும்பாவனம் வே. பிரகாஷ்
சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன் & இடும்பாவனம் வே. பிரகாஷ் - திருவையாறு தியாகராஜ உற்சவம்
சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன் வாய்ப்பாட்டு இசை, ராம நவமி 2018

ஏ. விஜய் கார்த்திகேயன் (சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன்) (பிறப்பு: ஜூன் 05, 1978) நாதஸ்வரக் கலைஞர். தர்மபுரம் ஸ்ரீ ஏ. கோவிந்தராஜன், திருப்பாம்புரம் சகோதரர்கள், டி.கே.எஸ். சுவாமிநாதன், டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரின் மாணவர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாதஸ்வரத் துறை துணை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

பிறப்பு, கல்வி

சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயன் ஜூன் 05, 1978 அன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் என். அர்ஜூனன், ஜி. கிருஷ்ணவேணி தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர் - அக்கா டாக்டர் ஏ. சித்ரா ராமநாதன், ஏ. சுஜாதா ரமேஷ், ஏ. விஜயலட்சுமி சுரேஷ்.

ஏ. விஜய் கார்த்திகேயன் தன் ஆரம்பக்கல்வியை சின்னமனூர் கே.வி.ஏ மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சின்னமனூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பின் இசைக்கான குருகுல கல்வி பயின்றார். விஜய் கார்த்திகேயன் தன் கல்லூரி படிப்பை தொலைதூர கல்வியில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்றார். 2007-ம் ஆண்டு பி.ஏ. சமூகவியல் துறையிலும், 2011-ம் ஆண்டு முதுகலை எம். மியூசிக் பிரிவிலும் பெற்றார். பொ.யு. 2020-ம் ஆண்டு தென்னக இசை வளர்ச்சியில் திருப்பாம்புரம் இசை மரபு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஏ. விஜய் கார்த்திகேயன் ஆர். அமுதா என்பவரை நவம்பர் 20, 2005 அன்று திருமணம் செய்து கொண்டார். விஜய் கார்த்திகேயன் - அமுதா தம்பதியருக்கு வேணுவர்ஷினி, நிரஞ்ஜன் என இரண்டு குழந்தைகள்.

கலை வாழ்க்கை

சங்கீத் நாடக அகாடமி - யுவ புரஸ்கார் விருது வாங்கிய போது, உஸ்தாத் பிஸ்மிலாகான் உடன்

ஏ. விஜய் கார்த்திகேயன் நாதஸ்வரப் பயிற்சியை தன் தாத்தா சின்னமனூர் சி.வி. கணேசனிடம் ஒன்பது வயது முதல் கற்கத் தொடங்கினார். அம்மா ஜி. கிருஷ்ணவேணியிடம் வாய்ப்பாட்டு கற்றார். பின் தர்மபுரம் ஏ. கோவிந்தராஜனிடமும், திருப்பாம்புரம் சகோதரர்களிடமும் நாதஸ்வரம் பயின்றார்.

ஏ. விஜய் கார்த்திகேயனின் முதல் அரங்கேற்றம் பொ.யு. 1992-ல் திருவையாற்றில் மார்கழி மாதம் நிகழும் தியாகராஜர் கலா உற்சவத்தில் நடந்தது. விஜய் கார்த்திகேயனும் அவரது சகோதரி விஜயலட்சுமி சுரேஷும் ஒன்றாக அரங்கேற்றம் கண்டனர். அன்று முதல் பத்து ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாசித்தனர். அதே ஆண்டு சின்னமனூரில் உள்ள லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் தாத்தா சி.வி. நாகராஜன் (தவில்) உடன் வாசித்தார். பொ.யு. 1995-ம் ஆண்டு ஆடி வேல் விழாவில் வாசிக்க கொழும்பு சென்றனர்.

பொ.யு. 2002 ஆம் ஆண்டு விஜயலட்சுமியின் திருமணத்திற்கு பின், இடும்பவனம் வி. பிரகாஷ் இளையராஜாவுடன் இணைந்து வாசித்து வருகிறார். பொ.யு. 2002 முதல் இருவரும் இந்தியாவில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற முக்கிய கோவில்களில் வாசித்துள்ளனர். பொ.யு. 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா கிலீவ்லாண்ட் தியாகராஜர் உற்சவத்தில் பங்கேற்றார். அதே ஆண்டில் லண்டனிலுள்ள கோவில் விழாவில் பங்குபெற்றார். விஜய் கார்த்திகேயன் பொ.யு. 2014ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற பின் காசி விஸ்வநாதர் கோவில், ரிஷிகேஷ், திரிபுரா போன்ற நகரங்களில் உள்ள முக்கிய கோவில்களில் வாசிக்கும் பொறுப்பு பெற்றார்.

பொ.யு. 2002-ம் ஆண்டு அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நேரடியாக பி. டாப் கிரேட் பட்டம் பெற்றார். பொ.யு. 2006 முதல் ஏ கிரேடும், 2019-ல் ஏ-டாப் கிரேடும் பெற்றார்.

விருதுகள்

  • இசைமாமணி - ஸ்ரீதேவி குருகுல சபரிபீடம் - கொழும்பு (2002)
  • காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் - காஞ்சி மடம் (2008)
  • கலைஞான சிகரம் - தென் சோழமண்டலம் இசை வேளாளர் சங்கம் (2009)
  • யுவபுரஸ்கார் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடெமி (2014)
  • பெருவங்கிய கலையரசு - தமிழிசைமன்றம் திருவையாறு (2015)
  • நாதசுர கலாவித்தகர் - தமிழ்க் கழகம், தஞ்சாவூர் (2017)
  • நாதஸ்வர கலாநிதி திருகயிலாய தருமபுர ஆதீனம் (2023)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2024, 14:37:12 IST