under review

கே.முத்தையா

From Tamil Wiki
Revision as of 10:21, 7 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/Updated by Je)
கே.முத்தையா

கே. முத்தையா (14 ஜனவரி 1918 - 10 ஜூன் 2003) தமிழகக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். இதழாளர், நாவலாசிரியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர்.

பிறப்பு, கல்வி

கே.முத்தையா தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களிக்கு கிராம முன்சீப் ஆக வாழ்ந்த கருப்பையாத்தேவர் – வள்ளியம்மை இணையருக்கு முதலாவது குழந்தையாக 14 ஜனவரி 1918ல் பிறந்தார்.

முத்தையா தன்னுடைய ஆரம்பக் கல்வி முடப்புளிக்காட்டில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். மேற்கொண்டு படிக்கவைக்க அவர் தந்தை மறுத்துவிட்டார். முத்தையா தன் சிறிய தந்தை கருப்பையாத் தேவர், அத்தை வீரம்மாள் ஆகியோரின் ஆதரவால் மேலும் படித்தார். முத்தையா பேராவூரணி ஜில்லா போர்டு ஆரம்ப பள்ளியிலும் பின்னர் பட்டுக்கோட்டை ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் படிப்பை முடித்தார். விவசாய வேலைகளைச் செய்துகொண்டே படிப்பை முடிக்கவேண்டியிருந்ததை அவர் தன் வாழ்க்கைக் குறிப்பில் சொல்கிறார்.

பள்ளியிறுதி வகுப்பின் இறுதித் தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த இரண்டாவது மாணவனாக தேர்ச்சிபெற்ற முத்தையாவை மேலும் படிக்க வைக்க விரும்பிய கருப்பையாத்தேவர் நீதிக்கட்சித் தலைவரான நாடிமுத்துப்பிள்ளையிடம் அழைத்துப்போய் உதவிகேட்டார். அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான தனது நண்பர் வி. எஸ். சீனிவாச சாஸ்திரியாருக்கு அறிமுகக்கடிதம் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ப்யின்றாலும் அரசியல்போராட்டங்களில் ஈடுபட்டமையால் பட்டம் பெறவில்லை.

தனிவாழ்க்கை

1950 ஆம் ஆண்டில் சூன் மாதம் 22 ஆம் திகதியன்று திருச்சி ரயில்வே தொழிலாளர் நடேசம்பிள்ளையின் இரண்டாவது மகள் யமுனாவை நேரு அச்சக உரிமையாளர் ஆறுமுகம் பிள்ளை தலைமையில் மணம் புரிந்துகொண்டார். இந்தத் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் என்பதால் முத்தையாவின் தந்தை வர மறுத்துவிட தாயாரும், தம்பியுமே திருமணத்திற்கு வந்தனர். முத்தையா அப்போது சென்னை ஜனசக்தி அலுவலகத்தில் முழுநேர ஊழியராகவும், தகவல் களஞ்சியத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.1949 ஆம் ஆண்டில் முத்தையா கைதுசெய்யப்பட்டபோது முத்தையாவின் மனைவி யமுனாவும் 10 பெண்களும் பாதுகாப்புக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருமாத காலம் சிறையிலிருந்தார்கள்.

அரசியல் வாழ்க்கை

மாணவர்தலைவர்

1932 ஆம் ஆண்டில் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சோவியத் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு அங்கிருந்த கம்யூனிச சமூகம் பற்றி பட்டுக்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சினால் கவரப்பட்டு அரசியலார்வம் கொண்டார்.. 1932 ஆம் ஆண்டு பேராவூரணியில் விடுதலைப்போராட்ட வீரர் வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தன் மாணவ நண்பர்களுடன் சென்று கலந்துகொண்டார். அன்னியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தார். பேராவூரணி வட்டாரத்தில் "11 நாடுகளின் இளைஞர்கள் சங்கம்" என்ற அமைப்பைக் குருவிக்கரம்பையை தலைமையிடமாகக்கொண்டு உருவாக்கி அதன் தலைவரானார். இச்சங்கத்தின் மாநாட்டிற்கு, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, வி. வி. கிரி, ப. ஜீவானந்தம் ஆகியோரை அழைத்து நடத்தினார்.

1938 ஆண்டில் திண்டிவனத்தில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள பல்கலைக்கழகத்திலிருந்து கே. பாலதண்டாயுதம், முத்தையா உள்ளிட்ட 10 பேர் சென்றனர். மாநாட்டில் ப. ஜீவானந்தம், பி. ராம்மூர்த்தி ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து கடும் எதிர்ப்புக்கு நடுவே நிகழ்ச்சியை நடத்தினர். கே. பாலதண்டாயுதம் மற்றும் சிலமாணவர்கள் அதன்காரணமாக இடை நீக்கம் செய்யப்படவே மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர் விடுதி மூடப்பட்டது. கே. பாலதண்டாயுதத்தின் படிப்பு நின்றது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் மாணவச் செயலாளராக ஆன கே. பாலதண்டாயுதம் வகித்துவந்த மாணவர்தலைவர் பொறுப்பு முத்தையாவிடம் வந்தது. கம்யூனிஸ்ட் மாணவர் குழுவையும், பல்கலைக்கழக கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளர் பொறுப்பையும் ஏற்று நடத்தினார்.

தலைமறைவு வாழ்க்கை

1939 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் படிப்பிற்காக வந்த ஆர். உமாநாத் முத்தையாவின் நண்பரானார். அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதை அறிந்து இறுதி தேர்வை எழுதாமலேயே திருச்சிக்குச் சென்றார்கள். திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து சங்க வேலைகளைச் சிறிது காலம் செய்து வந்தார். காவல்துறை கம்யூனிஸ்ட் ரகசிய மையங்களைக் கண்டுபிடித்து அங்கே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மோகன் குமாரமங்கலம், பி. ராம்மூர்த்தி, சுப்பிரமணிய சர்மா, கேரளீயன், அனுமந்தராவ், உமாநாத், போன்றவர்களைக் கைது செய்தது. முத்தையா தமிழகத்தில் கட்சிப்பணி செய்யவும், ஆங்கில ஆவணங்களைத் தமிழாக்கம் செய்யவும், கட்சிக்கடிதங்களை ஊர் ஊராய் கொண்டு சேர்க்கவும், மாணவர் குழுக்களுக்குக் கம்யூனிஸ்ட்ப் பயிற்சி அளிக்கவும் கட்சியால் நியமிக்கப்பட்டார்

கட்சிப்பதவி

உலகப்போருக்கு பிரிட்டிஷாருக்கு கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவு தெரிவித்தமையால் 1942 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சிமீதான தடையை ஆங்கில அரசு நீக்கியது. அதே ஆண்டில் திருச்செங்கோட்டில் மோகன் குமாரமங்கலத்தின் வீட்டில் கூடி கட்சியின் புதிய மாநிலக் குழுவைத் தேர்ந்தெடுத்தபோது. மோகன் குமாரமங்கலம் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர்.

சிறைவாழ்க்கை

1945 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி, சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசியப் படையினரை விடுதலை செய்ய வேண்டுமெனப் போராட்டம் நடத்தியது. 1946 பிப்ரவரி 23 ஆம் நாள் ராயல் இந்தியன் நேவியின் போராட்டத்திற்கு ஆதரவாகச் சென்னையில் முத்தையா தலைமை ஏற்று நடத்திய போராட்டத்தில் மாயாண்டி பாரதி கலந்துகொண்டார். 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் பிரகாசம் அமைச்சரவை பிறப்பித்த அவசரச்சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடும், என். கே. கிருஷ்ணனும் நடத்திய அரசியல் வகுப்புகளில் தெரிவித்த கருத்துக்களை குறிப்பெடுத்து பின்னாளில் மார்க்சீய போதனை என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக வெளியிட்டார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் கம்யூனிஸ்டு கட்சி பி.டி.ரணதிவே முன்வைத்த கல்கத்தா அறிவிக்கையின்படி ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டமையால் சர்தார் பட்டேல் தலைமையிலான இந்திய அரசுநிர்வாகம் 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. முத்தையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

தேர்தல்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தேர்தல் முறையை ஏற்று அரசியல் கட்சியாகச் செயல்பட ஆரம்பித்தபோது 1952 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தலில் அதிராமபட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கட்சிப் பிளவு

1964ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுண்டபோது முத்தையா இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தரப்பை எடுத்தார்.

இதழியல்

முத்தையா கட்சி தடைசெய்யப்பட்டிருந்தபோது செங்கொடி என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தினார். கம்யூனிஸ்டுக் கட்சி ஜனசக்தி என்னும் இதழை மீண்டும் நடத்துவதென முடிவு செய்து முத்தையாவை பொறுப்பாசிரியராக நியமித்தது. 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகாலம் ஜனசக்தியை நடத்தினார்.

1963ல் மார்க்ஸிஸ்ட் கட்சியின் இதழான தீக்கதிர் செய்தி இதழை முத்தையா பொறுப்பேற்று நடத்தினார். சென்னையில் இருந்து 1969 இல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் மதுரைக்கு மாற்றப்பட்டபோது மதுரைக்கு மாற்றப்பட்டது. 1970ல் "செம்மலர்" என்ற இலக்கிய மாத இதழ் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியர் பொறுப்பையும் கட்சி முத்தையா வகித்தார். 1963 முதல் 1990 வரையிலும் ஆசிரியர் பொறுப்பை வகித்தார்

முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

கட்சிப்பிளவுக்குப்பின் கலையிலக்கியப் பெருமன்றத்திற்கு மாற்றாக 1970 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தொடங்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திதை முத்தையா எழுத்தாளர் கு.சின்னப்பபாரதியுடன் இணைந்து நடத்தினார். அதன் தலைமைப்பொறுப்பில் இருந்தார்

இலக்கியப்பணிகள்

கே.முத்தையா தீக்கதிர் வார இணைப்பு, செம்மலர் இதழ்களில் தொடர்ச்சியாக இலக்கிய விமர்சனக்குறிப்புகளும் கதைகளும் எழுதினார். சோஷலிச யதார்த்தவாத அழகியலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த கே.முத்தையா தமிழ் மரபிலக்கியங்களை அந்த அடிப்படையில் ஆராய்ந்தார். சோஷலிச யதார்த்தவாத அடிப்படையில் நாவல்களை எழுதினார். உலைக்களம், விளைநிலம் என்னும் இருநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. சோஷலிச யதார்த்தவாத அழகியலை ஏற்று எழுதும் டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, மு. காமுத்துரை, மேலாண்மை பொன்னுச்சாமி முதலிய எழுத்தாளர்களை உருவாக்கினார்.

மறைவு

கே. முத்தையா 10 ஜூன் 2003 ல் மதுரையில் காலமானார்.

நினைவுநூல்கள்

கே.முத்தையா

கே.முத்தையா: எழுத்துலகில் அரை நூற்றாண்டு- வாழ்க்கை வரலாற்று  நூல். என்.ராமகிருஷ்ணன்

கே.முத்தையா வாழ்வும் பணியும் : ஜனநேசன்

இலக்கிய இடம்

கே.முத்தையா இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ நிலைபாடுகளை ஒட்டி எழுதியவர். அதன் அரசியல் செயல்திட்டங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைச்சித்திரத்தை நாவல்களாக எழுதினார். அதுவே சோஷலிச யதார்த்தவாதம் எனப்பட்டது. அவருடைய நாவல்கள் கம்யூனிஸ்டுக் கட்சி முன்வைத்த சோஷலிச யதார்த்தவாத பார்வையின் உதாரணவடிவங்கள், கட்சி நிலைபாடுகளை அறிய உதவுபவை.

நூல்கள்

இலக்கிய ஆய்வு
  • தமிழிலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்
  • சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்
  • இராமாயணம் ஒரு ஆய்வு
  • மார்க்சியமும் தமிழ் கலை இலக்கியங்களும்
அரசியல் ஆய்வு
  • வீர பரம்பரை
  • சட்டமன்றத்தில் நாம்
  • திமுக எங்கே செல்கிறது
  • இதுதான் அண்ணாயிசமா?
நாவல்
  • உலைக்களம்
  • விளைநிலம்
  • இமையம்
மொழியாக்கம்
  • தத்துவத்தின் வறுமை ( காரல் மார்க்ஸ்)
நாடகம்
  • செவ்வானம் (நாடகம்)
  • புதிய தலைமுறை (நாடகம்)
  • ஏரோட்டி மகன் (நாடகம் (2012)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.