under review

காரை சுந்தரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 10:20, 7 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/Updated by Je)
காரை சுந்தரம்பிள்ளை

காரை செ.சுந்தரம்பிள்ளை (20 மே 1938 - 21 செப்டெம்பர் 2005) ஈழத்துக் கவிஞர் எழுத்தாளர் வாழ்க்கைவரலாற்றாளர்.

பிறப்பு, கல்வி

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் களபூமி என்ற ஊரில் செல்லர் - தங்கம் இணையருக்கு 20 ம்33 1938ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வித்துறையில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1976 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் துறையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இரு வருடங்கள் பயின்று டிப்ளோமாப் பட்டம் பெற்றதுடன், கல்வியியல் துறையிலும் டிப்ளோமாப் பட்டமும் பெற்றார்.யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நெறியாள்கையின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.

காரை சுந்தரம்பிள்ளை

தமிழ் மொழிப் பயிற்சியில் வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோரும் ஆசிரியர்களாக விளங்கினர். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பாலி , சிங்களம் அறிந்தவர்

தனிவாழ்க்கை

காரை சுந்தரம் பிள்ளை இந்திராவதியை 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கௌசல்யா, மாதவி, பூங்குன்றன், திருப்பரங்குன்றன் ஆகிய நான்கு பிள்ளைகளைப் பெற்றார். அவர் மகள் மாதவி சிவலீலன் கவிஞர், இமைப்பொழுது எனும் நூலை வெளியிட்டிருக்கிறார்

ஆசிரியப்பணிகள்

காரை சுந்தரம் பிள்ளை 1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு செயிண்ட் ஜோசப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கே.மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிர்வாக சேவையும் அடங்கும்.ஜெர்மனி நாட்டிற்குச் சென்று, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட 'வளர்நிலை' எனும் தமிழ்கல்வி நூலின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

இலக்கியப் பணிகள்

புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை அழ. வள்ளியப்பா நடத்திய பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' இதழிலும் கவிதைகள் எழுதினார். இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளியிட்டார். தேனாறு என்ற கவிதைத்தொகுதி காரை.செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் முதல் நூல். யாழ். இலக்கிய வட்டம் தனது ஒன்பதாவது வெளியீடாக ஏப்ரல் 1968இல் இந்நூலை வெளியிட்டது. அது இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.

சங்கிலியம் என்ற இரண்டாவது நூல் ஒரு காவியம். யாழ்ப்பாணம், ஈழநாடு வெளியீடாக, ஏப்ரல் 1970இல்  இந்நூல் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தை இரண்டு சங்கிலி மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர் என்றும், முதலாவது சங்கிலியன் 1519 முதல் 1561 வரை ஆட்சிசெய்ததாகவும் அவனே இக்காவியத்தின் நாயகன் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது சங்கிலி மன்னன் 1615 தொடக்கம் 1619வரை யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்தவன். இவனே யாழ்ப்பாணத்துக் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலி குமாரன் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இந்த நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. ஈழநாடு தினசரி 1970இல் நடத்திய அகில இலங்கை காவியப் போட்டியில் முதற்பரிசையும் பெற்றது.

பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும் யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் பெற்றார். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு,தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு,யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்ற கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசு பெற்றார். யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டது.

காரை. செ.சுந்தரம்பிள்ளை  தொகுப்பாசிரியராக இருந்து வெளிவந்த நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவு வெளியீடான நாடக தீபம் என்ற நூல் காங்கேசன்துறை, வி.வி.வைரமுத்து நினைவுதின வெளியீடாக அகஸ்ட் 1989 ல் வெளிவந்தது.

1990 க்குப்பின் காரை செ.சுந்தரம்பிள்ளை ஆய்வுத்துறையில் ஈடுபட்டார், ஈழத்து இசை நாடக வரலாறு என்ற இவரது முதலாவது ஆய்வுநூல் யாழ். இலக்கிய வட்டத்தினரால் ஜனவரி 1990 ல் வெளியிடப்பட்டது.சிங்களப் பாரம்பரிய அரங்கம் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக, ஜுலை 1997இல வெளிவந்தது. வட இலங்கை நாட்டார் அரங்கு என்ற ஆய்வுநூல் சென்னை,குமரன் பதிப்பகத்தினால் ஏப்ரல் 2000 இல் வெளியிடப்பட்டுள்ளது. (என்.செல்வராஜா, நூலகவியலாளர் , அமரர் காரை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும்)

நாடகப்பங்களிப்பு

குடும்பம்ரபாக நாடக ஈடுபாடு கொண்ட காரை சுந்தரம் பிள்ளை தன் பெரிய தகப்பன் அண்ணாவியார் ஆண்டிஐயா, ஆசிரியர் ஆ. முருகேசு, நடிகமணி வி. வி. வைரமுத்து ஆகியோருடன் நெருங்கிப் பழகி ஆட்ட நுணுக்கங்களையும், இசை நுணுக்கங்களையும் கற்றார்.

சமூக நாடகங்கள்
  • தரகர் தம்பர்
  • தம்பி படிக்கிறான்
  • வாழ்வும் தாழ்வும்
  • சினிமா மோகம்
  • சித்திரமே சித்திரமே
இதிகாச புராண நாடகங்கள்
  • பக்த நந்தனார்
  • கர்ணன்
  • சகுந்தலை
  • தயமந்தி
  • வில்லொடித்த விதுரன்
  • சிற்பியின் காதல்
ஆட்ட நாட்டுக் கூத்துக்கள்
  • பாஞ்சாலி சபதம்
  • மூவிராசாக்கள்
  • மித்தா மாணிக்கமா
  • காமன் கூத்து
சிறுவர் நாடகங்கள்
  • மூத்தோர் சொல்
  • வார்த்தை அமுதம்
  • பாவம் நரியார்

விருதுகள்

  • யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது
  • யாழ்ப்பாண மாநகரசபை மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.

நூல்கள்

இணைய நூலகம் தொகுப்பில் காரை சுந்தரம் பிள்ளையின் நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன ( தொகுப்பு )

கவிதை நூல்கள்
  • தேனாறு (1968) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • சங்கிலியம் (1970) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • தவம் (1971)
  • உறவும் துறவும் (1985)
  • பாதை மாறியபோது (1986)
  • காவேரி (1993)
ஆய்வு நூல்கள்
  • ஈழத்து இசை நாடக வரலாறு (1990) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • இந்து நாகரிகத்திற்கலை (1994) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் (1996) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது
  • சிங்கள பாரம்பரிய அரங்கம் (1997)
  • வட இலங்கை நாட்டார் அரங்கு (2000)
  • ஈழத்து மலையகக் கூத்துக்கள் (2006)- இறுதியாக எழுதிய நூல்
பிற நூல்கள்
  • பூதத்தம்பி நாடகம் (2000)
  • விவேக சிந்தாமணி - உரைநடை
  • நாடக தீபம் - தொகுத்தது
  • உளவியல் - பதிப்பித்தது
  • கல்வியியல் - பதிப்பித்தது
  • புள்ளிவிபரவியல் - பதிப்பித்தது

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.