under review

கச்சிப்பிள்ளையம்மாள்

From Tamil Wiki
Revision as of 09:27, 12 June 2024 by Logamadevi (talk | contribs)

கச்சிப்பிள்ளையம்மாள்(பொ.யு. 20-ம் நூற்றாண்டின் தொடக்கம்) இஸ்லாமிய ஞானி, கவிஞர். மெஞ்ஞானமாலை என்னும் நூலை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சிப்பிள்ளையம்மாள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். தந்தை லுக்மான். சகோதரர் முஹம்மது மீறான் மஸ்தான். திருப்பரங்குன்றம் மலைமீது அடக்கம் செய்யப்பட்ட சிக்கந்தர் வலி மீது பக்தி கொண்டவர் எனக் கூறப்படுகிறது. கச்சிப்பிள்ளையம்மாள் இளம் வயதிலேயே ஞானம் உடையவராக இருந்தார். அதனால் ’மெஞ்ஞான சொரூபி’ என்று போற்றப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சிப்பிள்ளையம்மாள் இஸ்லாமியம் சார்ந்து பல பக்திப்பாடல்களை இயற்றினார். அவர் பாடிய பாடல்கள் மெஞ்ஞானமாலை என்ற பெயருடன் பொ.யு. 1918-ம் ஆண்டில் அச்சாகின. மெஞ்ஞானமாலை நூலில் மெஞ்ஞானமாலை, மெஞ்ஞானக்குறவஞ்சி, மெஞ்ஞான ஊஞ்சல், மெஞ்ஞானக்கும்மி ஆகிய சிற்றிலக்கியங்கள் இடம்பெறுகின்றன. சூஃபி ஞானிகளின் மரபுப்படி இறைவனைக் காதலானாக உருவகப் படுத்திப் பாடியிருக்கிறார். தம்முடைய மெஞ்ஞான மாலையை அஞ்ஞானத்தை அறுக்கும் வாள் என்று கூறுகிறார்.

அவருடைய சமகாலத்துப் புலவர்களான சீனியாவல் ராவுத்தர் மற்றும் பண்டித சையிது அப்துல்காதிர் ஆகியோர் அவருடைய நூலுக்குச் சாற்றுக்கவி வழங்கினர்.

அன்னையிலும் தயவு அதிகமுள்ள கச்சிப்பிள்ளையம்மாள்
அன்புகூர்ந்து தன்னையும் தன் தலைவனையும் அறிவதற்கு
முக்கிய சாதனமாய்ச் சாற்றும் இன்னமுத மனையதிரு
மெஞ்ஞான மாலையைப்போல் யார் சொல்வாரே"
                                                    -பண்டித சையித் அப்துல்காதிர்

பாடல் நடை

வெண்பா

அல்லாஹு என்றே அகிலமெல்லாம் போற்றுகின்ற
வல்லானை எந்நாளும் வாழ்த்துவமே - பொல்லாத
அஞ்ஞான மாயை அறுத்தொதுக்கும் வாளனைய
மெய்ஞ்ஞான மாலைசொல்ல வே.

கும்மி

ஈஸ்வரன் வீடங்கே தோணுமடி - அதில்
ஏகப்பயமாய் இருக்குமடி
ஆசைவைத்து பயமற்றுநீ சென்றிடில்
அந்த இருளும் மறையுமடி - இடை
வந்த திரையும் விலகுமடி

நானும் நீயுமே நேசமானார் - பர
நாதாந்த வீட்டிலே சேர்ந்திடலாம்
ஞான வீடாளும் அத்தானைக்கண்டு நாம்
நாடிக்கொள் காபகௌசியடி - சென்று
தேடியே கும்மியடிங்கடி

ஊஞ்சல்

உச்சித மூலத்திலே புவி
மெச்சிய வாலையடி அம்மணி
மெச்சிய வாலையடி

உச்சித ஊஞ்சலிலே அவள்
உட்கார்ந்ததைப் பாரடி - அம்மணி
உட்கார்ந்ததைப் பாரடி

நானாகித் தானாகி ஊமை
தான்வந்து நின்றதடி - அம்மணி
தான்வந்து நின்றதடி

உசாத்துணை


✅Finalised Page