அழகர் மலை (இருங்குன்றம்)
அழகர் மலையில் உள்ள இருங்குன்றம் மதுரையைச் சுற்றி அமைந்த எண்பெருங்குன்றம் என்னும் எட்டு சமண மலைப்பள்ளிகளுள் ஒன்று. அழகர்மலைப்பள்ளி மதுரைக்கு வடக்கே இருபத்தி எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இருங்குன்றம்
அழகர் மலை அடிவாரத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மேலூர் சாலையில் உள்ள சுந்தரராசன்பட்டி, கிடாரிபட்டிக்கு அருகில் அழகர்மலை மலைப்பள்ளி உள்ளது. நன்கு வளவளப்பாக தேய்க்கப்பட்ட தரையினையும் சில கற்படுக்கைகளையும் இங்கு காணலாம். இங்கு சுனை ஒன்றும் உள்ளது.
கல்வெட்டு சான்றுகள்
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு அளவில் இக்குகைத்தளம் சமண முனிவர்கள் வாழும் பள்ளியாக மாற்றப்பட்டிருப்பதை இங்குள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கணிநாதன், மதிரை பொன்கொல்லன் ஆதன், அனாகன், மதிரை உப்புவணிகன் வியகன் கணதிகன், பணித வணிகன் நெடுமலன், கொழுவணிகன் இளஞ்சந்தன், வெண்பள்ளி அறுவை வணிகன் போன்ற பலர் இப்பள்ளியை உருவாக்கியிருக்கிறார்கள்.
சங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் இப்பள்ளியில் தீர்த்தங்கரர் பாறைச்சிற்பம் ஒன்றினை அச்சணந்தி என்ற சமண முனிவர் செய்வித்ததை அதனடியிலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
உசாத்துணை
- எண்பெருங்குன்றங்கள் - முனைவர். வெ. வேதாசலம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.