under review

முத்துக்குமார கவிராசர்

From Tamil Wiki
Revision as of 10:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)

முத்துக்குமார கவிராசர் (1780 - 1851) ஈழத்து மரபிலக்கியப் புலவர். ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் இலக்கியப்போக்கினை அறிய இவரின் செய்யுள்கள் உதவுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் முத்துக்குமாரசேகரர். முத்துக்குமார கவிராயர் அம்பலவாணப்பிள்ளை, சிங்க விதானையார் மகளுக்கும் மகனாக யாழ்ப்பாணம், உடுவிலில் 1780-ல் பிறந்தார். சிறு வயது முதல் தந்தையிடம் தமிழ் கற்றார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் இவரின் மகன். சேனாதிராய முதலியார் இவரின் நெருங்கிய நண்பர்.

சைவ சமயம்

முத்துக்குமார கவிராசர் சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். ”முத்துக்குமார கவிராசரும் ஆறுமுக நாவலரும், சங்கரபண்டிதரும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்து மதத்தினரின் பிரசாரத்துக்கு இணங்காமல் மக்களை தடுத்தனர் என்றும் இவர்களின் கண்டனங்களால் கிறிஸ்து மதக் கொள்கைகள் வலுவிழந்தது” என மதுரை வித்துவான் சபாபதி முதலியார் கூறியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கிறித்து மதத்தினரின் சைவரை மதமாற்றும் நடவடிக்கையைக் கண்டித்து முதலில் 'யேசுமத பரிகாரம்' மற்றும் 'ஞானக் கும்மி' ஆகிய கவித்தொகுப்புகளை வெளியிட்டார். இவற்றை 1852-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் அச்சிட்டு வெளியிட்டார். இதை எதிர்த்து கிறிஸ்து மதத்தினர் 'அஞ்ஞானக் கும்மி' என்ற நூலை வெளியிட்டனர். இதனை கண்டித்துச் சிலம்புநாதபிள்ளை என்பவர் 'அஞ்ஞானக் கும்மி மறுப்பு' என ஒரு நூலை இயற்றி வெளியிட்டார். முத்துக்குமார கவிராசர் பாடிய தனிச் செய்யுள்கள் சில ஆயிரம். ஆனால் அவை எழுதி வைக்கப்படவில்லை. வாய்வழிச் செய்யுள்களை சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் 'முத்தக பஞ்சவிஞ்சதி' என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். இதில் உள்ள 25 செய்யுள்களும் தில்லை நடராசக்கடவுள், நல்லூர் முருகன் மற்றும் மாவிட்டபுரம் முருகன் மீது பாடப்பட்டவை.

சேது புராணக்கதையைக் கொண்டு 'சகத்திரானீக நாடகம்' என்னும் நாடகத்தையும் இவர் பாடியுள்ளார். இது கிடைக்கப்பெறவில்லை. சி.வை. தாமோதரம்பிள்ளை முத்துக்குமாரக் கவிராயரின் மாணவர். தாமோதரம்பிள்ளை தாம் அச்சிட்ட நூல்களின் பதிப்புரை தோறும் கவிகளால் இவருக்கு குரு வணக்கம் கூறினார்..

மாணவர்கள்
பட்டங்கள்
  • வரகவி
  • கவிராசர்

மறைவு

முத்துக்குமார கவிராசர் 1851-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • யேசுமத பரிகாரம்
  • ஞானக் கும்மி
  • முத்தக பஞ்ச விஞ்சதி
  • சிதம்பர நடராசர் பதிகம்
  • சுன்னகம் ஐயனார் ஊஞ்சல்
  • மாவை சுப்ரமணியத் தோத்திரம்
  • முத்தக பஞ்சவிஞ்சதி

உசாத்துணை

  • ஈழத்து தமிழ் அறிஞர்கள்: கவிஞர் த. துரைசிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு

இணைப்புகள்


✅Finalised Page