அ. சந்திரசேகர பண்டிதர்
அ. சந்திரசேகர பண்டிதர் (இறப்பு: அக்டோபர் 26, 1879) பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் அறிஞர். ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் . மானிப்பாய் பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டது இவரின் முக்கியமான பங்களிப்பு.
இளமை, கல்வி
இலங்கை, யாழ்ப்பாணம், உடுவிலில் அம்பலவாணருக்கு சந்திரசேகர பண்டிதர் பிறந்தார். தமது பாட்டனார் சங்கர உடையாரிடம் கல்வி கற்றார். உடுவிலில் அப்போதிருந்த கிறித்தவ மதப் பிரசாரகர்களிடம் பணியாற்றி நதானியேல் என்ற பெயரைப் பெற்று கிறித்தவரானார்.
தனிவாழ்க்கை
சந்திரசேகர பண்டிதரின் மூத்த மகன் உவைமன் நதானியேல் சுவாமிநாதர் பாம்பனில் மருத்துவராகவும், மற்றுமொரு மகன் தில்லையம்பலம் நதானியேல் உவெசுலிய மிசன் பாடசாலை ஆசிரியராகவும், இளையவர் அம்பலவாணர் நதானியேல் யாழ்ப்பாணம் காவல்துறை நீதிமன்றத்திலும் பணியாற்றினர்.
இலக்கிய வாழ்க்கை
வண. ஸ்பால்டிங்கிற்கு ஆசிரியராக இருந்தார். பல நூல்களை மொழிபெயர்த்தும், இயற்றியும் உள்ளார். நல்லூரில் வாழ்ந்த வண.ஜெ. நைட் தமிழ்-ஆங்கில அகராதி எழுதிய போது அவருக்கு உதவினார். விவிலிய நூல் மொழிபெயர்ப்புக்காக ஸ்பால்டிங்கு பாதிரியார், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோருடன் 1848-ல் சென்னை சென்றார். மானிப்பாய் அச்சியந்திரசாலையில் மதப்போதகர்கள் அச்சிட்ட பல கிறித்தவ வேத மொழிபெயர்ப்புகளுக்கு பல வகைகளிலும் உதவினார்.
மானிப்பாய் அகராதி
சந்திரசேகர பண்டிதர் மானிப்பாய் அகராதி என்ற பேரகராதியைத் தொகுத்து வெளியிட்டார். தமிழ் அகராதிகளில் இதுவே முதலாவது பெரிய அகராதி. ஸ்பால்டிங் பாதிரியார் 1842-ல் The Manual Dictionary of the Tamil Lanuage என்ற பெயருடன் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார். இது யாழ்ப்பாண அகராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் அழைக்கப்பட்டது. இவ்வகராதியில் 58,500 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வகராதி தொகுப்பிற்கு இருபாலை சேனாதிராச முதலியார், நவாலி.வி. வைரமுத்துப்பிள்ளை உதவியுள்ளனர்.
மறைவு
அக்டோபர் 26, 1879-ல் சந்திரசேகரப் பண்டிதர் தனது 79வது வயதில் காலமானார்.
நூல் பட்டியல்
- The Manual Dictionary of the Tamil Lanuage - 1842
இதர இணைப்புகள்
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.