second review completed

சப்னாஸ் ஹாசிம்

From Tamil Wiki
சப்னாஸ் ஹாசிம்

சப்னாஸ் ஹாசிம் (பிறப்பு: அக்டோபர் 10, 1994) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர். இலங்கையைச் சேர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். வனம் இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சப்னாஸ் ஹாசிம் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று என்ற ஊரில் முஹம்மட் ஹாசிம், சீனி முகம்மது மசாகினா இணையருக்கு அக்டோபர் 10, 1994-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி. அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றார். அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்றார். இலங்கை உருகுணை பல்கலைக் கழகத்தில் சிவில் மற்றும் சூழலியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சப்னாஸ் ஹாசிம் ஏப்ரல் 16, 2024-ல் நுஸ்கா ஹானியை மணந்தார். அபுதாபியில் மதிப்பீட்டு பொறியியலாளராக பணியாற்றுகிறார்.

இதழியல்

சப்னாஸ் ஹாசிம், ஷாதிர் யாசீன், சாஜித் அஹமட் ஆகியவர்களுடன் இணைந்து வனம் இதழை இலங்கையில் நிறுவினார். அதன் ஆசிரியர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

சப்னாஸ் ஹாசிமின் முதல் சிறுகதை 'காவல்காரன்' 2021-ல் வல்லினம் இதழில் வெளியானது. இவரின் முதல் நூல் 'நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்' என்ற கவிதைத் தொகுப்பு 2021-ல் வெளியானது. சப்னாஸ் ஹாசிமின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'பிரேமகலகம்' 2023-ல் தமிழ்வெளி பதிப்பகம் வெளியீடாக வந்தது. நவீன விருட்சம், வனம், தமிழ்வெளி, காலச்சுவடு, நீலம், வல்லினம், அகழ், நடு, தமிழினி, கலைமுகம், சொல்வனம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வளிவந்துள்ளன. சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நூல் பட்டியல்

கவிதை
  • நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள் (2021)
  • குடிசைச் சாம்பல் (2022)
சிறுகதைத் தொகுப்பு
  • பிரேமகலகம் (2023, தமிழ்வெளி பதிப்பகம்)

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.