being created

மாறுபடு புகழ்நிலையணி

From Tamil Wiki

மாறுபடு புகழ்நிலையணி பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் தமிழில் கவிஞர் கையாளும் அணிகளுள் ஒன்று. கவிஞர், தாம் சொல்லக் கருதிய பொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறு ஒன்றினைப் புகழ்ந்து உரைப்பது மாறுபடு புகழ்நிலை. தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை

கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு
வேறுஒன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை (தண்டி 82)

என வகுக்கிறது.

விளக்கம்

பாடலில் ஒன்றைப் பழித்துக் கூற எண்ணி, அதை வெளிப்படையாகக் கூறாமல் மறைத்து, வேறொன்றைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக, பழித்தலைக் குறிப்பாகப் புலப்படுத்துவதே மாறுபடு புகழ்நிலையணி.

மாறுபடு புகழ்நிலை அணியும், புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் வேறுபட்டவை.

மாறுபடு புகழ்நிலை, ஒரு பொருளைப் பழிக்க அதனோடு எவ்விதமான தொடர்பும் இல்லாத பிறிது ஒன்றைப் பழிப்பது. புகழ்வது போலப் பழித்திறம் புனைதல் ஒன்றைப் புகழ்வது போல் அதேபொருளைப் பழிப்பது.

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு 1

இரவுஅறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல
தருநிழலும் தண்ணீரும் புல்லும் - ஒருவர்
படைத்தனவும் கொள்ளா; இப் புள்ளிமான்
பார்மேல் துடைத்தனவே அன்றோ துயர்

பொருள்

இந்தப் புள்ளிமான்கள் பிறரிடம் சென்று இரப்பதில்லை;எவரிடத்தும் தம் குறைகளைச் சொல்லிப் பின் தொடர்ந்து செல்லாது. ஒருவர் படைத்த்வற்றைக் கவர்வதில்லை.தனக்கு வேண்டியவற்ரைத் தானே பெறும். ஆதலின்,இம்மான்கள் இந்தப் பூமியின்மேல் துன்பத்தில் இருந்து நீங்கியன அன்றோ?

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கவிஞர் பழித்துக் கூறக் கருதியது'செல்வர் பின் சென்று இரந்து, அவரிடம் தம் குறைகளைச் சொல்லி, அவர் நிழலில் தங்கி உயிர் வாழும் இரவலரை'. ஆனால் கவிஞர் அக்கருத்தை மறைத்துப் புள்ளிமானைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக அதனைப் புலப்படுத்தியமையால், இது மாறுபடு புகழ்நிலை அணி ஆயிற்று.

எடுத்துக்காட்டு-2

போதுந் தளிரும் புனைந்து மணம்புணர்ந்து
சூதப் பணைதழுவித் தோன்றுமால் - மாதே
பலமா தவங்கள் பயின்றதோ பண்(டு) இக்
குலமா தவியின் கொடி.

பொருள்:

இந்தச் சிறந்த மாதவிக் கொடி(குருக்கத்தி) பூவினாலும் தளிரினாலும் அலங்கரிக்கப்பட்டு மணக்கோலத்தில் தம் காதலரைத் தழுவிக்கொண்டு நின்ற நற்குல மடவாரைப் போலத் தானும் பூவினாலும் தளிரினாலும் அலங்கரிக்கப்பட்டு இனிய மணமான கோலத்தை உடையவையாக மாமரக் கிளைகளைச் சேர்ந்து நிற்கின்றன; ஆதலால், தோழீ! முற்காலத்திலே பல தவம் செய்ததாலோ? சொல்லுவாயாக

இது களவிற் கூடிவந்த தலைவியைப் பழி்த்தற்கு மாதவியைப் புகழ்ந்தது.

அணிப்பொருத்தம்

இந்தப் பாடலில் கவிஞன் பழிக்கக் கருதியது களவில் கூடிவந்த தலைவியை. ஆனால் அதனை மறைத்து மாதவிக் கொடியின் கற்பபைப் புகழ்ந்து, குறிப்பாக தலைவியை இகழ்வதால் இது மாறுபடு புகழ்நிலையணி.

உசாத்துணை

மாறுபடு புகழ்நிலையணி, தமிழ் இணைய கல்விக் கழகம்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.