ஐயம்பெருமாள் கோனார்

From Tamil Wiki
Revision as of 08:28, 7 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/Updated by Je)
ஐயம்பெருமாள் கோனார்

ஐயம்பெருமாள் கோனார் (1905-1989 ) அய்யன்பெருமாள் கோனார். தமிழில் புகழ்பெற்ற பாடப்புத்தகக் கையேடுகளை எழுதியவர். திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி தமிழாசிரியராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

திருச்சிராப்பள்ளி திருவேங்கடக்கோனாருக்கு 5 செப்டெம்பர் 1905 ல் பிறந்த ஐயம்பெருமாள் கோனார் இளமையிலேயே அன்னையே இழந்து பெரியஅன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் வளர்ந்தார். திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தேசிய உயர்நிலைப்பள்ளியில் பள்ளிநிறைவை முடித்து 1933 ல் மதுரை நான்காம் தமிழ் சங்கம் நடத்திய புலவர்தேர்வில் வென்றார்

தனிவாழ்க்கை

1942 ல் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் ஓய்வுபெற அந்தப்பதவியில் அமர்ந்தார். 1966 வரை அங்கே பணியாற்றி ஓய்வுபெற்றார். ஐயம்பெருமாள் கோனாரின் மகன் அரங்கராசன் அவருடைய உரைகளை பதிப்பிக்கிறார். ஐயம்பெருமாள் கோனாரின் மாணவர் என்று தன்னைப்பற்றி எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடுகிறார்

உரைநூல்கள்

கல்லூரியில் தன் மாணவர்களுக்காக தமிழ்ப்பாடத்தில் எளிமையான உரைகளை எழுதினார். கல்லூரி மாணவர்களிடையே புகழ்பெற்றிருந்த அவ்வுரைகளை பழனியப்பா பிரதர்ஸ் என்னும் வெளியீட்டு நிறுவனத்தை நடத்திய செ.ம.பழனியப்பச் செட்டியார் நூல்களாக வெளியிட்டார். குறைந்த விலையில் அச்சிடப்பட்ட அந்த நூல்கள் பெரும்புகழ்பெற்றன. பின்னர் தமிழ் அல்லாத மற்ற பாடங்களுக்கும் நூல்கள் வெளியிடப்பட்டன. எளிமையான உரைக்கான கலைச்சொல்லாகவே கோனார் உரை என்பது நாளடைவில் மாறியது

இலக்கியப்பணி

ஐயம்பெருமாள் கோனார் வைணவ இலக்கியங்கள் மற்றும் கம்பராமாயணம் சார்ந்து சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். திருச்சி வானொலியில் திருப்பாவை விளக்கவுரைகள் ஆற்றி புகழ்பெற்றிருந்தார்

மறைவு

ஐயம்பெருமாள் கோனார் 1989ல் மறைந்தார்

விருதுகள்

திருப்பாவை உரைக்காக காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்களால் திருப்பாவை ஆராய்ச்சி மணி பட்டம் அளிக்கப்பட்டது.

நூல்கள்

  • கோனார் தமிழ்கையகராதி
  • திருக்குறளுக்குக்கோனார் பொன்னுரை
  • சங்ககாலப்பாண்டியர்
  • வாசன் பைந்தமிழ்ச் சோலை

உசாத்துணை

{ready for review}