second review completed

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் – பபாசி

From Tamil Wiki
Revision as of 07:50, 11 March 2024 by Tamizhkalai (talk | contribs)
Bapasi Symbol

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம், (The Bookseller`s and Publishers` Association of South India - BAPASI) சென்னையில், ஆகஸ்ட் 24, 1976 அன்று பி. ஐ. பப்ளிகேஷன்ஸில் (BI Publications) மண்டல மேலாளராகப் பணியாற்றிய கே.வி. மாத்யூவால் தொடங்கப்பட்டது.

நோக்கம்

வாசிப்பைப் பரவலாக்கச் செய்வதுடன், புதிய புத்தகங்கள் வெளியிடுவதை ஊக்குவிப்பதும், நூல்கள் மற்றும் எழுத்தாளர்களின் மீதான கவனத்தை ஏற்படுத்துவதும் புத்தகக் காட்சியின் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

வாசகர்கள் – எழுத்தாளர்கள் – பதிப்பாளர்கள் – விற்பனையாளர்களை ஒருங்கிணைத்து வாசிப்பு வளர்ச்சிக்கு பபாசி உதவுகிறது. புத்தகக் காட்சியில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு குறைந்த பட்சம் 10% கழிவு வழங்கப்படுகிறது.

முதல் புத்தகக் காட்சி

கே.வி. மாத்யூவின் முயற்சியாலும், சங்கத்தின் உறுப்பினர்களான பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் உறுதுணையுடனும் புத்தகக் காட்சிக்கான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

சென்னையில் முதல் புத்தகக் காட்சி, டிசம்பர் 1977-ல் நடந்தது. 22 பதிப்பகங்கள் அப்போது கலந்துகொண்டன. அது முதல் தொடர்ந்து ஆண்டுதோறும் புத்தகக் காட்சிகள் சென்னை காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன. தொடர்ந்து சேத்துப்பட்டு செயிண்ட்ஜார்ஜ் பள்ளி வளாகம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல் ஆகிய இடங்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றன.

சென்னைப் புத்தகக் காட்சி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான புத்தகக் காட்சியாக உள்ளது.

தமிழ்நாட்டில் புத்தகக் காட்சிகள்

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம், தமிழக அரசின் ஆதரவுடன் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நெய்வேலி, கோவை, ஈரோடு, சேலம், புதுக்கோட்டை என்று தமிழ்நாட்டின் பல இடங்களில் புத்தகக் காட்சி நிகழ்வுகளை முன்னெடுக்கிறது.

புத்தகக் காட்சியையொட்டி பல்வேறு போட்டிகள் பபாசியால் நடத்தப்படுகின்றன. பேச்சரங்கம், சொற்பொழிவுகள், நூல் வெளியீடு, வாசகர் – எழுத்தாளர் உரையாடல் கருத்தரங்கம் எனப் பல நிகழ்வுகளை பபாசி முன்னெடுக்கிறது.

பபாசி விருதுகள்

ஒவ்வொரு ஆண்டின் புத்தகக் காட்சித் தொடக்கவிழாவின்போதும், தமிழில் சிறப்பாக செயல்பட்டு வரும் படைப்பாளிகள், பதிப்பகத்தார்கள், விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.