under review

மூங்கில் கோட்டை

From Tamil Wiki
Revision as of 12:45, 9 March 2024 by Jeyamohan (talk | contribs)
மூங்கில்கோட்டை

மூங்கில் கோட்டை (1967 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். சங்ககாலத்தில் நடைபெறுவதாக இது எழுதப்பட்டுள்ளது

எழுத்து, வெளியீடு

சாண்டில்யன் எழுதிய மூங்கில்கோட்டை நாவல் மலேசிய நாட்டு தமிழ் இதழான தமிழ்நேசன்-1965 ல் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் 1967ல் வானதி பதிப்பகத்தினர் புத்தக வடிவில் இதை வெளியிட்டனர்.

வரலாற்றுப் பின்புலம்

தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்கப்பாடல்களில் போற்றப்படும் மன்னன். தன்னை எதிர்த்து வந்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்குநாட்டு அரசன் திதியன் மற்றும் எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் ஆகியோரை தலையானங்கானம் என்னும் இடத்தில் நடந்த போரில் இளஞ்சிறுவனாகிய நெடுஞ்செழியன் வென்றான் என்று புறநாநூற்று பாடல்கள் சொல்கின்றன.பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி, மதுரைக்கணக்காயர் மகன் நக்கீரர் பாடிய நெடுநல்வாடை ஆகிய நூல்கள் நெடுஞ்செழியன் பற்றி பாடுகின்றன. நெடுந்ஞ்செழியனின் காலம் தெளிவுற வரையறை செய்யப்படவில்லை. பொயு ஒன்றாம் நூற்றாண்டு என பொதுவாகச் சொல்லப்படுகிறது.

சேரமன்னன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை வென்ற நெடுஞ்செழியன் அவனை சிறைவைத்தான் என்றும் யானை தான் விழுந்த குழியை சிதைத்து மேலேறிச்சென்று தப்புவதுபோல தன் நாட்டை அடைந்தான் என்றும் குறுங்கோழியூர் கிழார் புறநாநூறு 17-ம் பாடலில் கூறுகிறார். இவ்விரு செய்திகளையும் இணைத்து இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்

மாந்தரஞ்சேரல் இரும்பொறை மாந்தை எனும் நாட்டை ஆண்டவன். அவனுடைய அடைமொழிகளில் ஒன்று யானைகட்சேய். யானைபோன்ற கண்கள் கொண்டவன். அந்த வரியில் இருந்து இக்கற்பனையை சாண்டில்யன் செய்திருக்கிறார். யானையை வீழ்த்தும் வாரிக்குழி போல அகழி வெட்டி அதில் முதலைகளை இட்டு அதன்மேல் மூங்கிலை பரப்பி மண்மூடி புல்வளர்த்து இயற்கையான குன்றுபோலவே செய்து அதன் நடுவே உள்ள கோட்டையில் இரும்பொறையை சிறைவைக்கிறான் நெடுஞ்செழியன். சேரனின் அவைப்புலவர் குறுங்கோழியூர்கிழார் அவ்வண்ணம் இரும்பொறையை சிறைவைத்தது சரியல்ல என எண்ணுகிறார். அவர் இரும்பொறையை நேரில் சந்தித்து அவனை தப்புவிக்க சூளுரைத்து அதற்காக இளமாறன் என்னும் இளைஞனை சேரநாட்டில் இருந்து வரவழைக்கிறார். நெடுஞ்செழியனின் சகோதரி இமையவல்லி குறுங்கோழியூர் கிழாருக்கு உதவுகிறாள். இரும்பொறை தப்புவிக்கப்படுகிறான். இந்நாவலில் நெடுஞ்செழியனும் பெருந்தன்மை மிக்கவனாகவே காட்டப்படுகிறான்

இலக்கிய இடம்

மிகக்குறைவான சான்றுகளில் இருந்து உருவாக்கப்பட்ட நாவல். விரிவான கதைக்களம் இல்லாமல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது. சங்ககாலப் பின்னணியில் நிகழ்வதனால் அக்கால அரசியல்சூழலையும் அதில் புலவர்கள் வகித்த இடத்தையும் காட்டுவதாக உள்ளது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு

உசாத்துணை


✅Finalised Page