being created

நித்ய கன்னி (நாவல்)

From Tamil Wiki
Revision as of 13:00, 23 March 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)
நன்றி-காலச்சுவடு பதிப்பகம்

நித்ய கன்னி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் மகாபாரதத்தில் வரும் ஒரு புதிரான கிளைக்கதையை ஒட்டி விரித்து தன் நவீன பயன்பாட்டுக்குத் தக்க வடிவத்தில் எழுதிய நாவல். யயாதி மன்னரின் மகள் மாதவி என்ற பெண்ணை மட்டுமே மையப்படுத்திய கதை.

என்றும் நித்யகன்னியாகவே இருக்கும் அவளின் வரமே அவள் வாழ்வில் குறுக்கிடும் ஆண்களால் சாபமாக மாறும்போது ஏற்படும் விளைவுகளைச் சொல்லும் நாவல்.பெண்ணின் உடலும் மனமும் தர்மத்தின் பெயரால் மிகக் கொடுமையாக சாத்வீக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை புராண காலப் பின்னணியில் சித்தரிக்கும் நாவல்.

ஆசிரியர்

நன்றி:சொல்வனம்

ஆசிரியர் எம்.வி.வெங்கட்ராம் (1920-2000)தமிழின் முக்கியமான நாவலாசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியர். மணிக்கொடி இலக்கியக் குழுவின் உறுப்பினர். காதுகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் . இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் பலநூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

உருவாக்கம், பதிப்பு

1943ம் ஆண்டு நண்பரும் எழுத்தாளருமான் கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா) மகாபாரதக் கதைகளிலிருந்து 10 அழகிகளைத் தேர்ந்து அவர்களை சிறுகதைகளில் வார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று எம்.வி.வெங்கட்ராம் 'திலோத்தமை' , 'புலோமை' என இரு கதைகள் எழுதி அவை 'கிராம ஊழியனில் வெளிவந்தன. மூன்றாவதாக எழுத முற்பட்ட நித்ய கன்னியின் கதை நாவலாக வளர்ந்தது. கு.ப.ரா அம்முயற்சியை நல்லதொரு சோதனையாக வரவேற்றார். நாவல் முடிவதற்குள் கு.ப.ரா மறைந்துவிட்டார்.

"மகாபாரதத்தில் ஓரு சிறு பொறியாக இருந்ததை ஊதி ஊதிப் பெருந்தீயாக மூட்டியிருக்கிறேன்" என்று எம்.வி.வெங்கட்ராம் குறிப்பிடுகிறார்.

முதல் பதிப்பு ஜூலை 1975 ல் வெளிவந்தது. காலச்சுவடு தன் முதல் பதிப்பை 2006 ல் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்ய கன்னி' ஒரு குழந்தையைப் பெற்றவுடன் பழையபடி கன்னியாக மாறி விடும் அதிசய வரம் பெற்றவள். விஸ்வாமித்திரரின் மாணவனான அழகான இளைஞன் காலவன் தன் குருகுல வாசம் முடிந்ததும் குரு தட்சிணை தந்தே தீருவேன் என்று விஸ்வாமித்திரரை வற்புறுத்துகிறான். பொறுமையிழந்த முனிவர் உடல் வெள்ளையாகவும் காது மட்டும் கருப்பாக உள்ள 800 குதிரைகளைக் கேட்கிறார். திகைத்துப்போன காலவன் யயாதி மன்னனிடம் சென்று குதிரைகளைத் தானமாகக் கேட்கிறான். யயாதியிடம் அப்படிப்பட்ட குதிரைகள் இல்லை. இதற்கிடையில் காலவனும் மாதவியும் காதல் கொள்கிறார்கள்.

குதிரைகளுக்குப் பதிலாக யயாதி நித்ய கன்னியான தன் மகளைத் தானமாகக் கொடுக்கிறார். முனிவர் கேட்ட குதிரைகள் அயோத்தி மன்னன் ஹர்யஸ்வன், காசி மன்னன் திலோதாசன், போஜராஜன் உசசீநரன் ஒவ்வொருவரிடமும் இருநூறு குதிரைகள் உண்டு என்றும் அவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக மாதவியை மணம் செய்துவைத்து குதிரைகளை வாங்கி வருமாறும் பணிக்கிறார் முனிவர். .

காலவன் தன் காதலைப் புதைத்துவிட்டு, மாதவியை ஹர்யஸ்வனுக்கு மணம் முடிக்கிறான். ஹர்யஸ்வன் அவளை மோகத்தில் கொண்டாட நினைக்கிறான். மனம் ஒட்டாமல் அவனது குழந்தையப் பெற்றுவிட்டு மீண்டும் கன்னியாகும் மாதவியை திலோதாசனுக்கு மணம் முடிக்கிறான். வாரிசுக்காக அவளை மணந்த திலோதாசன் அவளை மனக்கறை படிந்தவள் என் இகழ்கிறான். அவனது குழந்தையையும் பெற்று அங்கேயே விட்டுவிட்டு கன்னியாகி உசீநரனை மணக்கிறாள். அவன் அழகை ஆராதிப்பவன், பெண்மையை மதிப்பவன், அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக காலவனைக் குற்றம் சாட்டுகிறான். உசீநரனின் குழந்தையைப் பெற்ற மாதவி மீண்டும் கன்னியாகிறாள். கன்னியாக மாறிவிட்டதால் எந்தக் குழந்தைக்கும் பாலூட்டவோ அதைச் சீராட்டவோ முடிவதில்லை. குரு தட்சிணையைக் கொடுத்த பின் தங்கள் காதல் நிறைவேறும் என மாதவியும் காலவனும் காத்திருக்கிறார்கள்.

அறுநூறு குதிரைகள் கிடைத்தும் விஸ்வாமித்ரர் திருப்தியடையாமல் மீதி 200 குதிரைகளுக்காக மாதவியைத் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பின் விடுவிக்கிறார்.காலவன் நீ என் குரு பத்தினி யாக இருந்தாய், எனவே என் தாய் என்று அவ்ளை ஏற்க மறுக்கிறான். மனம் கலங்கியிருந்த மாதவி யயாதி மன்னனிடம் திரும்பிச் செல்கிறாள். அவளுக்காக காலவனிடம் வாதாடும் உசீநரன் ஹர்யஸ்வனால் கொல்லப்படுகிறான்.

யயாதி அவளுக்காக ஏற்பாடு செய்த சுயம்வரத்தையும், மீண்டும் தன்னை நாடி வந்த காலவனையும் புறக்கணித்து மாதவி பித்தியைப் போல் காட்டுக்குச் சென்று மறைகிறாள்.

கதாபாத்திரங்கள்

யயாதி- குரு வம்சத்து அரசன்

மாதவி- யயாதியின் மகள். நித்ய கன்னி.

உஷை-மாதவியின் தோழி

விஸ்வாமித்ரர்- கௌசிக முனிவர் , ராஜரிஷி

காலவன் - விஸ்வாமித்ரரின் மாணவன்

ஹர்யஸ்வன் - அயோத்தி மன்னன். பெண்ணாசை கொண்டவன்

திலோதாசன் - காசி மன்னன்

உசீநரன் -போஜராஜன்,கலைஞன் பெண்மையை மதிப்பவன்

இலக்கிய இடம்

நித்ய கன்னி தமிழின் முதல் மறுவாசிப்பு நாவல் என்று கருதப்படுகிறது. ஒரு பெண்ணை மட்டுமே மையமாகக் கொண்டதாலும் முக்கியமான நாவலாகிறது புராண இதிகாசங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் நவீன மனம் வாழ்விற்கான தர்மம், நீதியைக் கேள்விக்குட்படுத்துகிறது.எது யாருக்கு அறம் என்பதை முடிவு செய்வது யார் என்ற கேள்வியை வலுவாக, எளிமையாக , ஆழமாக எழுப்புகிறது. புராண காலம் தொட்டு பெண்கள் மீதான மதிப்பீடுகளையும் வன்முறையையும் தொட்டுக் காட்டி அறம், அழகு மற்றும் பெண்ணுரிமை குறித்து தீர்க்கமான கேள்விகளைக் கேட்கிறது.

ஹிருதயங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் போதுமான அளவு கௌரவத்தை தர்மம் அளிக்க வேண்டும்,” என்று கலைஞனான உசீநரன் விடுக்கும் அறைகூவல் இன்று மிக அவசியமானது . வேறு எவரையும்விட கலைஞனான அவனே பெண்ணின் மனம் அறிந்தவனாகவும், அவளுக்காக தெய்வங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவனாகவும் இருக்கிறான்.அகம், புறம் என்பதற்கப்பால் ஒரு கலைஞன், தான் காணும் அழகை முழுமையாக அறியும் திறன் பெற்றிருக்கிறான்: புறக்குறிகள் அவனுக்கு அகச் சாட்சிகளாக இருக்கின்றன. மனித உள்ளம் என்ற அளவில் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தின் குறை நிறைகளைக் கணிக்க வல்லவனாகிறான் கலைஞன்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் க.நா.சுப்ரமணியத்தின் தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலிலும் நித்ய கன்னி இடம் பெறுகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது தமிழ் நாவல் விமரிசகன் சிபாரிசு பட்டியலில் இதை பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் வகையில் சேர்க்கிறார்.

"அதிகாரத்தால் கையாளப்படும் பெண்ணுடல் அவ்வதிகாரத்திற்கே சவாலாக மனோதிடம் பெற்றதாக உருவாகும் போது அது முழுதாகக் கண்டுகொள்ளப்பட்டு எழுதப்பட்டிருந்தால் பெண்மையின் பேரத்தியாயங்கள் நமக்குக் கிடைத்திருக்கும். இவை இக்காலகட்டத்தின் எழுத்துத் தேவைகளாக உள்ளன "என்று இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஜெ.பி.சாணக்யா. எழுத்தாளர் தி.ஜானகிராமன் இந்த நாவலில் வரும் பாத்திரங்களை உருவகங்களாகவே பார்க்க வேண்டும் என்றும் காட்டுக்குள் ஓடித் தப்பிவிட்ட மாதவியின் மறைவு கூட அவளை விரட்டிய ஆண்கள்மேல் அவள் கொள்ளும் வெற்றிதான் என்று தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.

நித்ய கன்னியின் கதையும், பாத்திரங்களும், இன்னும் புனைவாக விரிவு கொள்ள வாய்ப்புள்ளவை. தன்னை மீண்டும் ஒரு புனைவுக்குள் அனுமதிக்கும் படைப்பு எந்தக் காலத்துக்கும் ஏற்ற படைப்பாகவே இருக்கும்.

உசாத்துணை

புலன்வழிப்பாதை அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள் -மித்திலன் சொல்வனம் மார்ச், 13 2022

தமிழ் நாவல்கள் - விமரிசகன் சிபாரிசு எழுத்தாளர் ஜெயமோகன்

நித்ய கன்னி -நாவல் விமரிசனம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.