first review completed

விடையவன் விடைகள்

From Tamil Wiki
Revision as of 17:23, 13 January 2024 by Tamizhkalai (talk | contribs)
விடையவன் விடைகள் - கி.வா. ஜகந்நாதன்

விடையவன் விடைகள் (1972), இலக்கியம் மற்றும் சமயம் சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். இந்நூலை எழுதியவர் கி.வா. ஜகந்நாதன். கலைமகள் இதழில் ‘இது பதில்’ என்ற தலைப்பிலும், ‘இதோ விடை’ என்ற தலைப்பிலும் வாசகர்களின் வினாக்களுக்கு கி.வா.ஜ. அளித்த பதில்களின் தொகுப்பான இந்நூல் இரண்டு பாகங்களாக வெளியானது.

பிரசுரம், வெளியீடு

விடையவன் விடைகள் நூலின் முதல் பாகத்தை அமுத நிலையம் 1972-ல் வெளியிட்டது. 1976-ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. மீள் பதிப்பு, 2012-ல் வெளியானது.

நூல் தோற்றம்

கலைமகள் ஆசிரியராகக் கி.வா. ஜகந்நாதன் பணியாற்றியபோது தினந்தோறும் அவருக்கு நண்பர்களிடமிருந்தும், வாசகர்களிடமிருந்தும் தொலைபேசி மற்றும் கடித வடிவில் பல வினாக்கள் எழுப்பப்பட்டன. இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மிகம் சார்ந்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பலரும் கி.வா.ஜ.வைத் தொடர்பு கொண்டனர். கி.வா.ஜ.வும் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

கி.வா.ஜகந்நாதனுக்குத் தொடர்ந்து இவ்வாறு கேள்விகள் வந்ததால் கலைமகளில் ஒரு கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து, ’இது பதில்’ என்ற பகுதியைத் தொடங்கினார். பதில்களை ’விடையவன்’ என்ற புனை பெயரில் சில வருடங்கள் எழுதிப் பின் நிறைவு செய்தார். வாசகர்களின் வற்புறுத்தலினால், ‘இதோ விடை’ என்ற தலைப்பில் மீண்டும் கேள்வி – பதில் பகுதியைத் தொடங்கினார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பே, ‘விடையவன் விடைகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது.

நூல் அமைப்பு

விடையவன் விடைகள் நூல் இலக்கண, இலக்கியம்; சமயம்; பல்வகை என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. இலக்கண, இலக்கியம் என்ற தலைப்பில் 406 விடைகளும், சமயம் என்ற தலைப்பில் 125 விடைகளும், பல்வகை என்ற தலைப்பில் 35 விடைகளும் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் சொற்பொருள் அகராதி (index) இடம்பெற்றுள்ளது.

இந்நூலில் வாசகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையளித்துள்ளார் கி.வா. ஜகந்நாதன். செய்யுள் வடிவில் வினா எழுப்பியவர்களுக்கு செய்யுள் வடிவிலேயே பதிலளித்தார்.

நூலில் இருந்து சில கேள்வி - பதில்கள்

கேள்வி: செய்யுள் வகையில் யமகம், மடக்கு இரண்டும் ஒரே வகையைச் சேர்ந்தவையா? பிள்ளைப் பெருமாளையங்கார் திருவரங்கத்தந்தாதியைப் போல் யமகச் செய்யுட்கள் வேறு யாராவது இயற்றியுள்ளார்களா?

பதில்: யமகம் என்பது ஒரு சொல்லோ தொடரோ மீண்டும் வெவ்வேறு பொருளில் வருவது. அது வடசொல். மடக்கு என்பது யமகம் என்பதற்குரிய தமிழ்ச் சொல். இப்போது யமகம் என்பது ஒரு பாட்டில் ஒவ்வோரடியிலும் சொல்லோ தொடரோ வெவ்வேறு பொருள் தருவதாக அமைவதையே குறிக்க வழங்குகிறது. ஒரடிக்குள்ளே அவ்வாறு வருவதை மடக்கு என்று சொல்கிறோம். தமிழில் பல யமக அந்தாதிகள் உண்டு. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருத்தில்லை யமக அந்தாதி போல்வன பல.

கேள்வி: பேட்டி என்பது செந்தமிழ்ச் சொல்லா?

பதில்: அது உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

கேள்வி: முற்றிலும் என்ற சொல் தவறா? ஏன்?

பதில்: முற்றும் என்பதுதான் சரியான சொல். சுற்றிலும் என்பதைப் போல இருப்பதால் முற்றிலும் என்று தவறாக எழுதும் வழக்கம் வந்துவிட்டது.

கேள்வி: ‘மெனக்கெட்டு’ என்று நாம் அடிக்கடிப்[ பேசுகிறோமே? அது எப்படி வந்தது?

பதில்: ’வினை கெட்டு’ என்பதே அப்படித் திரிந்தது.

கேள்வி: பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு அந்தப் பெயர் இயற்பெயரா? காரணப் பெயரானால் அதற்குக் காரணம் என்ன? இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லையா?

பதில்: சேக்கிழார் என்பது குலத்தின் பெயர். அவருடைய இயற்பெயர் இராமதேவர் என்பது கல்வெட்டினால் தெரிகிறது.

கேள்வி: அநுமப் புராணத்தைப் பாடியவர் யார்?

பதில்: பண்டித. வித்துவான் திரு. நா. கனகராசையர். இருபத்து நாலாயிரம் பாடல்களால் அநுமனுடைய வரலாற்றைப் பாடியிருக்கிறார். அது இன்னும் அச்சாகவில்லை.

கேள்வி: ஆடியானனன் என்றது யாரை? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?

பதில்: குருடனைக் குறிப்பது அது. திருதராஷ்டிரனைப் பாரதம் ஆடியானனன் என்று கூறும். ஆடி = கண்ணாடி. கண்ணாடியை யாவரும் பார்ப்பார்களேயன்றி, அது யாரையும் பாராது. அது போலப் பிறர் தம் முகத்தைப் பார்ப்பதே அல்லாமல் அம்முகம் பிறரைப் பார்க்க இயலாமையால் அப்பெயர் வந்தது.

கேள்வி: பிள்ளையார், மூத்த பிள்ளையார் - இருவரும் ஒருவரா, இருவரா?

பதில்: பழங்காலத்தில் பிள்ளையார் என்று முருகனையும், மூத்த பிள்ளையார் என்று விநாயகரையும் வழங்கினார்கள். இப்போது விநாயகரையே பிள்ளையார் என்று வழங்குகிறார்கள்.

மதிப்பீடு

அக்கால இதழ்களில் பெரும்பாலும் திரைப்படத்துறை தொடர்பான கேள்வி பதில்களே வந்துகொண்டிருந்த காலத்தில், இலக்கியம் மற்றும் சமயம் தொடர்பான வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்தே விடையவன் விடைகள். விடையவன் விடைகள் இலக்கியம், இலக்கணம், நடைமுறைத் தமிழை அறிந்து கொள்வதற்கு ஒரு வாயிலாக அமைந்தன. சமயம், ஆன்மீகம் குறித்த பலரது குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் தெளிவான முடிவுகளைத் தருவதாக விடையவன் விடைகள் அமைந்திருந்தன.

தமிழில் வெளியான கேள்வி-பதில் தொடர்களில் ஒரு மாறுபட்ட வினா – விடைத் தொடராக ‘விடையவன் விடைகள்’ அறியப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.