திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

From Tamil Wiki

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான மும்மணிக்கோவை வகையில் அமைந்த நூல். சைவ நூல். இந்நூல் நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூல் பற்றி

இந்த நூலில் 30 பாடல்கள் உள்ளன. பட்டினத்தடிகள் பாடியது. சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல் ஆகும். ‘உமையொரு பாகன்' வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது. திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம் (கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர் வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்த நூலில் வர்ணித்திருப்பதைப் போல் வேறு எங்கும் இடம் பெறவில்லை. பட்டினத்தடிகள் திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல சிற்ப சாத்திரங்களிலும் காணப்படுவது அறியத்தக்கது. மொழி ஆய்வு செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள் சிறந்த ஆய்வுத் தளமாகத் திகழும். சிறந்த சைவ சமய நூல்.வாழ்வில் நல்ல கதி அடைய விரும்பும் சைவர்களுக்கு விளக்கமாக இந்த நூல் வழி காட்டுகிறது.

பாடல் நடை

தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு

பாடல் எண் 30

கரத்தினில் மாலவன் கண்கொண்டு
    நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
    பாமதி ஒன்றுமில்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தையு
    ளாகிவெண் காடனென்னும்
தரத்தினு மாயது நின்னடி
    யாந்தெய்வத் தாமரையே

உசாத்துணை