being created

இலக்குவனார்

From Tamil Wiki
இலக்குவனார்

இலக்குவனார் ( ) தமிழறிஞர். இலக்கண ஆய்வாளர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். தனித்தமிழியக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். திராவிட இயக்க ஆதரவாளர். பேராசிரியர்.

பிறப்பு, கல்வி

இலக்குவனார் 17 நவம்பர் 1909 (திருவள்ளுவராண்டு 1940, கார்த்திகைத் திங்கள், முதல் நாள்) தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு என்னும் சிற்றூரில் குறுநிலக்கிழாராகவும் ஒரு மளிகைக்கடை உரிமையாளராகவும் விளங்கிய சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார்.

வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் வாய்மேட்டில் இருந்த அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதும் செய்தார். அவரது தாயார் முயற்சி எடுத்து தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராஜாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அங்கு இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை இவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சாமி சிதம்பரனார் "இலக்குவன்" என மாற்றினார்

1924ஆம் ஆண்டில் சரபோஜி மன்னரின் அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார்.  அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று சென்னைப் பல்கலைக் கழகம் வகுத்திருந்த விதியின்படி வித்துவான் பட்டம் பெற்ற பின் அவர் இடைநிலை வகுப்பிலும் பி.ஏ வகுப்பிலும் இரண்டாம் பிரிவில் இருந்த ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றதனால் அவருக்கு BOL பட்டம் வழங்கப்பட்டது. இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று எம்.ஏ ஆங்கில பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் MOL பட்டமும் பெற்றார்.

இலக்குவனார் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்தி 53 ஆம் வயதிலேயே இப்பட்டத்தை பெற முடிந்தது.

தனிவாழ்க்கை

இவர் திருத்தணியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது மலர்க்கொடி என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். தன் மனைவி மலர்க்கொடிக்குத் தங்கை நீலகண்டேசுவரியை இரண்டாவதாக மணந்துகொண்டார்.

திருவேலன், மறைமலை, திருவேங்கடம், திருவள்ளுவன், மதியழகி, நல்லபெருமாள், செல்வமணி, நாகவல்லி, அங்கயற்கண்ணி, அருட்செல்வி, அம்பலவாணன் ஆகிய பதினொரு மக்களை இலக்குவனார் பெற்றனர்.

கல்விப்பணி

இலக்குவனார் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றபின் அக்கல்லூரியிலேயே சிலகாலம் பணியாற்றினார். 1936 ஜூன் மாதம் முதல் 1942ஆம் ஆண்டு வரை தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளிகளில் (Tanjore District Board High Schools) தமிழாசிரியப் பணிபுரிந்தார். 1942 முதல் 1945 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இலக்குவனார் அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய செ.தெ.நாயகம் குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் அமர்த்தப்பட்டார். ப திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், 1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமாரநாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார். 1952 முதல் 1955 வரை புதுக்கோட்டையில் பி.ஏ. சுப்பிரமணியனார் உருவாக்கிய திருக்குறள் கழகத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.

1955 – 56 ஆம் கல்வியாண்டில் திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர், 1956 முதல் 1958 வரை ஈரோடு காசனக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் , 1958 முதல் 1961 வரை நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், 1961 முதல் 1965 வரை மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் என பணியாற்றினார். 31.12. 1970 வரை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.மு.கருணாநிதி, ஆர்.நல்லகண்ணு, ஆர்.காளிமுத்து என இவரிடம் தமிழ் பயின்றவர்கள் பலர்.

இதழியல்

  • 1944 முதல் 1947 நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்தார்
  • இலக்கியம் (மாதமிருமுறை) விருதுநகரில் இருந்து வெளியிட்ட தனித்தமிழியக்க இதழ்
  • திராவிடக்கூட்டரசு. தஞ்சையில் இருந்து வெளிவந்தது. திராவிட இயக்க அரசியலுக்கான இதழ். 1965 மேமாதம் முதல் ஏழுமாத காலம் இது நாளிதழாகவும் வெளிவந்தது.
  • குறள்நெறி மதுரையில் இருந்து வெளிவந்தது. திருக்குறளை முன்னிறுத்தும் நூல் இது.
  • Dravidan Ferderation, Kurnlneri என்ற பெயர்களில் தன் இதழின் ஆங்கில வடிவங்களையும் கொண்டுவந்துள்ளார்.

அரசியல்

இலக்குவனார் இளமையில் தன் ஆசிரியராக இருந்த சாமி சிதம்பரனாரிடமிருந்து திராவிட இயக்க கொள்கைகளை கற்றுக்கொண்டார். ஈ.வே.ராமசாமிப் பெரியாரின் தீவிரமான ஆதரவாளர் ஆனார். 25 ஜனவரி 1965ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது உட்பட பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1. பிப்ரவரி1965 ஆம் நாள் கைது செய்யப்பட்டார். ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார்.

உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 5.5.1965ஆம் நாள் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல இலக்குவனார் திட்டமிட்டார். எனவே 1.5.1965ஆம் நாள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அமைப்புப்பணிகள்

மதுரையை அடுத்த திருநகரில் 6. ஆகஸ்ட். 1962 ஆம் தேதி ’தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்’ என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை சி. இலக்குவனார் தொடங்கினார். இக்கழகத்திற்கு அவர் தலைவராகவும் புலவர் இரா. இளங்குமரன் பொதுச் செயலாளராகவும் அமைந்தனர். ’இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!’ என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது.

மறைவு

இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 3 செப்டெம்பர் 1973 ல் காலமானார்.

நூல்கள்

  1. எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933)
  2. மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
  3. துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
  4. தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
  5. என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
  6. அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
  7. அம்மூவனார் (ஆராய்ச்சி)
  8. எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
  9. எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
  10. திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
  11. தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
  12. மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956)
  13. வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
  14. வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
  15. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
  16. கருமவீரர் காமராசர் (வரலாறு)
  17. அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
  18. பழந்தமிழ்
  19. தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
  20. தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
  21. சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
ஆங்கிலம்
  1. Tholkappiyam in English with Critical Studies
  2. Tamil Language (1959)
  3. The Making of Tamil Grammar
  4. Brief Study of Tamil words

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.